இரண்டு ஆப்பிள்கள்
ஒன்றில்லை.
இரண்டு கொலைகள். அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைந்து போன இரண்டு உயிர்கள். வீட்டின்
வெளிப்புற அறையின் நடுவில் விட்டத்தை வெறித்தபடி மல்லாக்கக் கிடந்தன. கண்கள்
இருந்த இடத்தில் எதுவும் அற்று வெறுமையாக இருந்த அந்தக் குழிகள், சுற்றிலும்
படர்ந்த மௌனத்தைக் கிழித்து ஏதோ சொல்ல முயன்று தோற்றுக் கொண்டிருந்தன. எவ்வித
அசைவும் இல்லாமல் அவற்றைக் கூர்ந்து நோக்கினேன். தீ தன்னால் முடிந்தமட்டும்
வேட்டையாடி இருந்தது. தோல் உரிந்து சிவந்து...
‘கொலைகாரா!
கொலைகாரா!’, சலனமற்றுக் கிடந்த அந்த அறை அப்படித்தான் சலசலக்க ஆரம்பித்தது. ‘கொலைகாரா!
கொலைகாரா!’, ஒரே வார்த்தை என்னை நோக்கித் தொடர்ந்து வீசப்பட்டு, தொடர்ந்து தொடர்ந்து பல்கிப் பெருகி
பல்வேறு முனைகள் கொண்ட கூர் கத்தியாக உருமாறிப் பின் என்னையே குத்திக் கிழித்த
ஆரம்பித்தது. சலசலப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகிப் பெருகி பெரும் சலனமாக
மாறத்தொடங்கியது.
கொலைகாரா!
கொலைகாரா! சுற்றும் முற்றும் பார்த்தேன். என்னைத்தவிர அங்கு யாரும் இல்லை. சப்தம்
கேட்டது உண்மை. ஆனால் அந்த அறையில் வேறு யாரும் இல்லை என்பது அதைவிட மிக நிச்சயமான
உண்மை.
வெள்ளிக்
கம்பிகள் போல் உருகி வழிய ஆரம்பித்த கூர்மையான வெளிச்சம் - தீப்பட்டு வெந்துப்போன
அந்த உடல்களின் மீது படர்ந்து திட்டுத்திட்டாக உறிக்கப்பட்ட... வேண்டாம்...
மேற்படி விவரணைகள் சூழலின் இறுக்கத்தை மேலும் அதிகரிக்கின்றன. ஏற்கனவே பயந்துபோய்
இருக்கிறேன். உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. சுற்றிலும் பரவி
இருக்கும் வெளிச்சம் உறுத்தலாக இருக்கிறது. அங்கு நிகழ்த்தப்பட்ட கொலை உறுத்தலாக இருக்கிறது.
அந்தக் கொலையைச் செய்தது நான் என்பதாக நினைக்கும்போது உறுத்தல் அச்சுறுத்தலாக மாறுகிறது.
போதும். சம்பவம் நிகழ்ந்த சூழலை விவரிப்பதை விடவும் செய்ய வேண்டிய காரியங்கள்
ஏராளம் இருக்கின்றன.
கைகளைப்
பார்த்தேன். எவ்வித குற்றவுணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் என்னை நோக்கின. இந்தக்
கைகளா?
எதையும்
ஏற்றுக்கொள்ள முடியாமல் மீண்டும் மீண்டும் கைகளையே பார்த்தேன். ஒரு கொலை
செய்ததற்கான எவ்விதத் தடயமும் இல்லை.
துளி ரத்தம்
இல்லை. வெந்து போன சதைகளின் மிச்சங்களாக அந்த இரண்டு உடல்கள் மட்டுமே கிடந்தன. தீ தன் நாவுகளைச் சுழற்றி அந்த இரு உயிர்களின்
ரத்தத்தைக் குடித்து, தன்
சுவடுகளை அழித்து ஒடுங்கி இருந்தது. தீயின் சுவடோ, தீ கொண்டு கருகிய நாசியோ இல்லை. ‘ஹ்ம்ம்... ஹ்ம்ம்... ஹ்ம்ம்...’,
யாரோ மூச்சுவிடுவது போலவும் யாரோ சப்தம் எழுப்புவது போலவும், யாரோ ஒளிந்து நின்று அந்த இடத்தை
வேடிக்கைப் பார்ப்பதைப் போலவும் ஒரு குறுகுறுப்பு. திரும்பிப் பார்த்தேன். யாரும்
இல்லை. யாரும் இல்லை என்பதை உறுதியாக நம்பமுடியாத அளவிற்குக் குழப்பம். வெந்து
அடங்கிய இருவரில் யாரோ ஒருவர் என் காதுக்கு மிக அருகில் நின்று சப்தம் எழுப்புவதாக
உறுதியாக நம்பினேன். ‘ஹ்ம்ம்... ஹ்ம்ம்... ஹ்ம்ம்...’.
ஒன்றுக்கொன்று
அருகில் கிடந்த அந்த இரண்டு பிரேதேங்களும் என்னையே உற்று நோக்குவதைப் போல்
இருந்தது. எப்படியேனும் எங்களை இந்த இக்கட்டில் இருந்து மீட்டெடுத்துவிடு என்று
கெஞ்சுவதைப் போன்ற பார்வை. இல்லாத உயிர் இருப்பது போன்ற பாவனை விளக்க முடியாத
துக்கத்தை உருவாக்கியது.
இழப்பின்
துக்கம் என்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி "திம் திம்" என்று
அதிர்ந்தது. தீயில் வெந்து தோல் உறிந்து, வெளிறிய ரோஜாப்பூ நிறத்தில்.... ஆஆஆஆ. அவற்றைப் பார்க்கப் பார்க்க
அதிகம் நடுங்கினேன். மனம் நிலைகொள்ளாது, தொடர்ந்து யோசிக்க முடியாமல், உள்ளுக்குள்
உள்ளாக ஊடுருவும் கேள்விகள் புரியாமல் அரற்றத் தொடங்கினேன். ஏன்? ஏன்? ஏன்? இனி யோசிக்க எதுவும் இல்லை. தப்பித்தாக
வேண்டும்.
மிக வேகமாக
இயங்கத் தொடங்கினேன். பயங்கரம் நிகழ்ந்த சுவடு தெரியாமல் அழித்தாக வேண்டும்.
யாருக்கும் தெரியக்கூடாது. இந்த உலகம் என்னைக் கொலைகாரன் என்று சபிக்கக்கூடாது.
இந்த உலகத்தை எண்ணி அதிகம் பயப்படுகிறேன். செய்து முடித்த கொலைகளைக் காட்டிலும்
மிக அதிகமாக.
ஆம். இந்த உலகம்
இல்லாதவர்களைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. அதேநேரம் உயிரோடு இருப்பவன் மீது மண்ணை
வாரித் தூற்றவும் தயங்குவதில்லை. தப்பிக்கும் வழிகளைத் தேட ஆரம்பித்தேன். ஒவ்வொரு
அறையாகச் சுழன்று சுழன்று சுழன்றது யோசனை. எதுவும் புலப்படவில்லை. மனம் ஒரு
நிலையில் இல்லை. திடிரென்று அமைதியாகி, பின் நிலைகொள்ளாமல் கொந்தளிக்கும் அடுத்த
கணத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் வழி புரியாமல், ஒரு பூனைக் குட்டியைப் போல
அகப்படாமல் தப்பி ஓடிக் கொண்டிருந்தது.
முதலில்
இங்கிருக்கும் உடல்களை அப்புறப்படுத்த வேண்டும். பாதுகாப்பாக. யார் கண்ணிலும்
படாமல். குறிப்பாக போலீசாரின் கண்களில் படாமால். போலீஸ்? இந்த வார்த்தை உள்ளுக்குள் வடிவமெடுத்ததும் பயமும் எட்டிப் பார்க்கிறது.
பயப்படுகிறேன். மனம் ஒரு வினோத ஜந்து.
மனம் ஒரு
பூனையைப் போல் உருகொள்ளத் தொடங்கியது. எதைப்பற்றிய அக்கறையும் இல்லாத சாதுவாக; காரணமே இல்லாமல் வெருண்டு ஓடும்
பயந்தாங்கொள்ளியாக; பின்
வெறிகொண்டு பாயும் மிருகமாக மனதின் தோற்றம் நொடிக்குநொடி மாற்றம் கொள்ள, மூர்க்கமாகத் தாக்கப்பட்ட பூனையின்
வேகத்தில் இயங்கத் தொடங்கினேன். 'திம்
திம்' என்று அதிர்ந்து கொண்டிருந்த நடுக்கம்
உடல் முழுக்கப் பரவியது. உள்ளுக்குள் பரவிய நடுக்கம் மிகப்பெரிய ஆற்றலை உருவாக்கி, அந்த ஆற்றல் கொடுத்த வேகத்தில்
எடையற்று இயங்க ஆரம்பித்தேன். மின்னல் வேகத்தில் அடுத்தடுத்த காய்களை
நகர்த்தினேன்.
வெளிர் ரோஜாப்பூ
நிறத்தில், பாதி உரித்தும்
உரிக்கப்படாமலும் கிடக்கும் மரவள்ளிக் கிழங்கைப் போன்ற அந்த இரண்டு உடல்களையும்
அவசர அவரசமாக பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி, யாரும் பார்க்கும் முன் தோளுக்குத் தூக்கி, இரண்டு மூன்று காம்பவுண்ட் தள்ளி இருக்கும் புதரில் கொண்டு
வீசியபின்தான் மனம் ஆசுவாசம் அடைந்ததைப் போல் பளீரென்று மாறியது. இனி கவலை இல்லை.
குறைந்தது இரண்டு மூன்று நாட்களுக்காவது. அதாவது பிண நாற்றம் எடுக்கும் வரையிலுமாவது
யாருக்கும் அங்கே இரண்டு சடலங்கள் கிடப்பது தெரியப்போவதில்லை. தெரிந்தாலும் என் மீது
சந்தேகம் வரப்போவதில்லை. மனம் இலகுவாதை உணர முடிந்தது. ஏற்றுக்கொள்ள முடியாத கொலை
என்றாலும் மனம் அந்த கணத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தது.
தப்பித்தல்...
எத்தனை ஆசுவாசமான வார்த்தை! இல்லை இங்கு எதுவுமே ஆசுவாசம் இல்லை. இன்னமும்
முழுமையாக அந்தக் கொலைகளில் இருந்து நான் வெளிப்பட்டிருக்கவில்லை.
எத்தனை
முயன்றும் எதுவும் செய்வதற்கற்று மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டிருக்கிறேன்.
எதில் இருந்தும் தப்பிக்க முடியாமல் ஒரேபுள்ளியில் மீண்டும் மீண்டும் வந்து
விழுகிறேன். உரக்கக் குரல் கொடுத்துக் கத்த வேண்டும் போல் இருந்தது. தலையை வேகமாக
ஆட்டினேன். கைகளை வேகவேகமாகச் சுவற்றில் அறைந்தேன். பைத்தியம் போல் உருவெடுக்கத்
தொடங்குகிறேன். கொலைகாரன் என்ற சொல் குறைந்து 'பைத்தியம்', 'பைத்தியம்', 'பைத்தியம்' என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. ஒரே வார்த்தை ஆனால் வேறுவேறு
குரல்களாகக் கேட்க ஆரம்பித்தன.
வெளி அறையில்
உயிரற்றுக் கிடந்த பிரேதங்களை அப்புறப்படுத்தும் வரையிலும் - கைகளில் இருக்கும்
குப்பையைத் தூர எறிவதைப் போல் இயங்கிவிட்டு, இனி பிரச்சனை எதுவும் இல்லை என்று ஆசுவாசமாகக் கண்களை மூடும்போது
அதுவரை நிகழ்ந்த ஒவ்வொரு காட்சியும் துல்லியாமாக ஞாபகத்திற்கு வந்து சம்மட்டியால்
அடிக்கத் தொடங்கியது. நிற்காது பெருகும் மன உளைச்சலைத் தடுக்கும் வழி தெரியாமல், 'இல்லை இல்லை நான் பைத்தியம் இல்லை' என்று கத்த ஆரம்பித்தேன்.
'இல்லை. இல்லை. நான் இந்தக் கொலைகளைச் செய்யவில்லை. எனக்கும் இந்தக்
கொலைகளுக்கும் துளியும் சம்மந்தம் இல்லை'. மனம் பதறியது. பயந்து துடித்தது. நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்
ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்து, எங்கு
எப்போது பிசகினேன் என்பதை ஞாபகத்திற்குக் கொண்டுவர முயன்றேன். பின்
தோற்றுப்போனேன். எப்போது வேண்டுமானாலும் போலீஸ் வரக்கூடும். தீயிட்ட கரங்களில்
விலங்கு மாட்டி இழுத்துக்கொண்டு போகலாம். எத்தனை கோரமான கற்பனை. ச்சை. இல்லை.
போலீஸ் என்னை இழுத்துப் போகாது. என்னை ஏன் இழுத்துப்போக வேண்டும். இல்லை நான் கொலை
செய்யவில்லை. யாரைக் கொன்றேன். கொன்ற தடத்தைக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்? நடப்பவை அனைத்தும் பின்னோக்கி நிகழ்வது
போலவும், திடிரென்று முன்னோக்கி நகர்வதும்
போலவும் தோன்றியது. எது உண்மை? எந்த
உண்மையில் நான் உண்மை?
நான்
கொல்லவில்லை. கொலை செய்யவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தெரிந்து என்ன
செய்ய? அதற்கான சாட்சியம் என்னிடம் இல்லையே! அதற்காக நான் கொலைகாரனும் இல்லையே?
யாருமற்ற வீட்டில் யாரோ என்னைப் பிடித்துத் தள்ளியதைப் போலவும், வெளியறையில் திடிரென என் கண்முன்
இரண்டு பிரேதங்கள் தோன்றியதைப் போலவும், அவற்றை நான்தான் கொன்றேன் என்ற மாய பிம்பத்தை என்னுள் ஏற்றி என்னை
நம்பவைத்து மிகக் கச்சிதமான பொறியில் என்னை சிக்க வைத்து... ஆகா அடடா! நடப்பது
அனைத்தும் புலனாவதைப் போல் இருக்கிறது. ஆனால் யார் நம்புவார்கள்? ஒருவேளை தொடர்ந்து இதையே உளறினால்
பைத்தியம் என்று வேண்டுமானால் சொல்வார்கள். நானா பைத்தியம்? என் கண்முன் இருந்த பிரேதங்கள் நிஜம்.
புதைகுழிப் புதரில் நான் தூக்கி எறிந்த பிரேதங்கள் நிஜம். இன்னும் சிலநாட்களில்
அவை வாய்விட்டு அலறப்போவது நிஜம். ஆனால் அவர்களைக் கொன்றது நான் இல்லை. என்ன
சொல்லிப் புரிய வைப்பேன். அவர்களை விடுங்கள், நானே இரண்டாகப் பிரிந்து என்னோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் என்னின்
மற்றொரு பாதியிடம் எப்படிப் புரியவைப்பேன் நான் கொலைகாரன் இல்லை என்பதை.
"நீ கொலைகாரன்", நான்
"இல்லை. நான் கொலைகாரன் இல்லை", நான்
"இல்லை. நீ கொலைகாரன்", நான்
"இல்லை...இல்லை...இல்லை... நான் கொலைகாரன் இல்லை", நான்
எத்தனை
மறுத்தாலும் எத்தனை பலமாக மறுத்தாலும் எந்த நான் சொல்வதைக் கேட்டு எந்த நான் உடன்
சமாதானமாகப் போவது? குழப்பம். மகா குழப்பம். இந்தக் குழப்பத்திற்குப் போலீஸ்
தண்டனையே பரவாயில்லை போல் தோன்றுகிறது. ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்... திம் திம்...
*****
இப்படி நடப்பது
முதல்முறை இல்லை. இதற்கொரு முடிவு கட்டியே ஆக வேண்டும். எது நிஜம். எது பொய்
என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். இவையிரண்டிற்கும் இடையே கிடந்து தவிக்கும், மனம் அடையும் உளைச்சல் இருக்கிறதே!
அதுதான் சொல்லி மாளாதது.
காட்சிகளை
முன்னுக்குப் பின் முரணாக அடுக்கி, கலைத்துப்
போட்டு, பின் ஓர் ஒழுங்குக் கொண்டு வந்து, ஆரம்பத்தில் இருந்து புதைகுழி
வரைக்கும் ஒரே சீராக அடுக்கினேன். எங்கோ ஓர் இடத்தில் ஓர் அசைவு தெரிவது
புலப்பட்டது. சர்வ நிச்சயமாக இது அவன் வேலைதான். கொலை நடந்தது உண்மை. இரண்டு உயிர்
போனது உண்மை. ஆனால் நான் கொல்லவில்லை. போன உயிர் என் மூலம் விடைபெறவில்லை.
இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம். இனி விடுவதாய் இல்லை. கிடைத்த அசைவை கெட்டியாகப்
பிடித்துக் கொண்டேன். கண்களைத் திறந்தால் அசைவு நின்று விடும். அசைவு நின்றால்
தெளிவு கிடைக்காது.
மரவள்ளிக்
கிழங்கு போல் விரிந்து கிடந்த பிரேதங்களுக்கு மத்தியில் ஓர் அசைவு தெரிந்தது.
அதுதான். அவன்தான். அவனைப் பிடித்துக்கொள் என்று உள்ளுக்குள் கிடந்து குதித்தது
மனம். ஒரு குட்டிப் பூனையைப் போல, கருங்குரங்கைப்
போல, குட்டி சாத்தானைப் போல அதன் உருவம்
மாறிக்கொண்டே இருந்தது. உருவம் எப்படியானாலும் அதனோடு ஒட்டியிருந்த வாலும் வாலின்
நீளம் மட்டும் மாறவில்லை. எக்கி அதைப் பிடித்தேன். பலங்கொண்ட மட்டும் அதைப்பற்றி
இழுத்தேன். கையில் சிக்கவில்லை. பிரேதங்களுக்கு மத்தியில் இருந்த ஓட்டையின் வழியாக, ஒரு கருந்துளையின் வழியாக நழுவிச்செல்ல, ஏதோ ஒரு விசை என்னையும் அதனோடு
இழுத்துச் சென்றது. இருக்கும் உலகத்தில் இருந்து, இல்லாத உலகம் நோக்கி வழுக்கிச் சென்றேன். புயலின் சுழற்சி, மின்னல் வேகம்,
காற்றின் ஓலம். இதேபோன்ற நிகழ்வு எவ்வளவு
நேரத்திற்குத் தொடர்ந்தது என்று தெரியவில்லை. அனைத்தும் நின்று, எதுவும் அசையாத, எதுவும் நிகழாத மௌனம். உலகமே நின்றுவிட்டதைப் போன்ற மௌனம்.
லேசாக தலை சுற்றுவதைப் போலவும் சித்தம் கலங்கியதைப் போலவும் இருந்தது.
இருள்
துல்லியமான வெளிச்சத்தைத் தருவதைப் பார்த்திருக்கிறீர்களா?
இருள் துல்லியமான வெளிச்சத்தைத் தரவல்லது
என்பதையாவது அறிந்திருக்கிறீர்களா? ஆம் அந்த சூழலின் இருள், கண்ணாடியைப் போல் துல்லியமாக இருந்தது. என் காலடியில்
புத்தகம் போன்ற ஏதோ ஒன்று விழுந்து கிடப்பதைக் கவனித்தேன். அந்த குட்டிச்
சாத்தானின் வாலினைக் கையில் பிடிக்கும்போது கூட ஏதோ ஒரு புத்தகத்தைப் பிடிப்பதைப்
போன்ற உணர்வு தோன்றியதே தவிர வால் என்ற நினைப்பே இல்லை. நான் பற்றியது வால் இல்லை.
தன் வாலில் அது பற்றியிருந்த புத்தகம்.
அதன் முன்
அட்டையில் ஒன்றுக்கொன்று மிக அருகில் இருக்கும் இரண்டு ஆப்பிள் பழங்கள் கருமையான
நிறத்தில் மிக பளபளப்பாக வரையப்பட்டிருந்தன. கண்ணுக்கு எதிரில் இரண்டு ஆப்பிள்கள்
இருப்பதைப் போன்ற துல்லியம். மெல்ல அதனை வருடிப் பார்த்தேன். எடையற்று, மிருதுவாக, பட்டுப்போல், மயிலிறகைச் சுமப்பதைப் போல்... கையில்
எடுத்து முகர்ந்து பார்த்தேன். இதுவரை அனுபவித்திராத சுகந்தமான மனம். கொஞ்சம்
மல்லிகை கொஞ்சம் சந்தனம் கொஞ்சம் ஜவ்வாது கலந்து கலவையான அதேநேரம் நாசியைச்
சீண்டாத மணம்.
நிழலின்
பிரதிகள் - இருளன் என்று அதன் அட்டையில் எழுதப்பட்டிருந்தது. முதல் பக்கம்
வெறுமையாக விடுபட்டிருக்க, இரண்டாவது
பக்கத்தில் இருந்து குழப்பமான மொழிகள், குழப்பமான சங்கேத வார்த்தைகள், ஓவியங்கள்
குறியீடுகள். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் சரி, நான் வந்து சேர்ந்திருந்த இடமும் சரி இருளும் குளுமையும் நிறைந்து, பட்டொளி வீசிப் பரவின. இருள் என்ற
நிறம் இதுவரைக் கண்டிராத பேரொளியாக உருவெடுக்க, பார்வையில் படும் யாவும் கருப்பாகவும் பளபளப்பாகவும் மின்னின.
இதுவரைக்கும்
குழப்பமாக கேட்டுக்கொண்டிருந்த 'ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்' சப்தம் மிகத்
தெளிவாக, துல்லியமாக காதுக்கு மிக அருகில்
கேட்கத் தொடங்கியது. ஒற்றையாக கேட்டுக்கொண்டிருந்த ஒலி பல்வேறு உருவங்களில்
இருந்து எழுவதைப் போல வெவ்வேறு குரல்களாக ஒலிக்க ஆரம்பித்தன.
இருள் எனும்
பெரு ஒளிக்குக் கண்கள் பழகத் தொடங்கிய சமயத்தில், என்னைச் சுற்றிலும் என்ன
நிகழ்கிறது என்பது புரிய ஆரம்பித்தது. மிகப்பெரிய மிகக் கம்பீரமான மண்டபம் ஒன்றின்
மையத்தில் நின்று கொண்டிருந்தேன். என்னைச் சுற்றிலும் குவியல் குவியலாக
புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகத்தின் முன் அட்டையிலும் இரண்டு ஆப்பிள்கள். முதலில்
அவற்றை கருப்பு ஆப்பிள்களின் குவியல் என்றுதான் நினைத்தேன். பின்னர்தான் அவை
புத்தகத்தில் பொறிக்கப்பட்ட ஆப்பிள் பழங்கள் என்பது நினைவுக்கு வந்தது.
நான் தனித்து
விடப்படவில்லை. என்னைச் சுற்றிலும் கூட்டம் கூட்டமாக நான் பார்த்த அந்த வினோத
ஜந்து போன்ற பல ஜந்துக்கள் தங்கள் உருவை மாற்றி மாற்றி ஓரிடத்தில் நில்லாமல்
ஓடிக்கொண்டே இருந்தன.
இதற்கு முன்
நான் உணர்ந்த மௌனம் இப்போது இல்லை. நில்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் 'ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்' சப்தம் இந்த ஜந்துக்களின் மொழி என்பது
புரிந்தது. அவை வெளிப்படுத்தும் ஒலி ஒரே அலைவரிசையில் இல்லாமல் வெவ்வேறு விதமாக
கேட்பதற்குக் காரணம் அவற்றின் மொழியில் இருக்கும் ஒரேயொரு வார்த்தை 'ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்' என்பதும் புரிந்தது.
நான் நின்று
கொண்டிருப்பது மண்டபம் இல்லை. அது ஒரு தொழிற்சாலை. மிகப்பெரிய மண்டபத்தின் ஒரு
பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலை. நில்லாமல் இயங்கும் இயந்திரங்கள்
ஒவ்வொன்றும் மின்னல் வேகத்தில் புத்தகங்களை அச்சிட்டு துரித கதியில் ஒரு புத்தக
வெளியீட்டை நிகழ்த்திக் கொண்டிருந்தன. வந்து விழும் புத்தகங்களை வேக வேகமாக
எடுத்துப் பார்த்தேன். ஒவ்வொரு புத்தகமும் பார்ப்பதற்கு ஒரேபோன்று இருந்தாலும் அவை
ஒவ்வொன்றின் உள்ளடக்கமும் வேறு வேறாக இருந்தன. குவியல் குவியலாக வந்து விழும்
ஒவ்வொரு புத்தகமும் அடுத்த நொடியே அப்புறப்படுத்தப்பட்டது.
அந்த வினோத
ஜந்துக்களின் வாலில் கட்டப்பட்டு, தங்களுக்கு
இடப்பட்ட கட்டளை போல் அந்த புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு ஓடின. என் கையில் இருந்த
சில புத்தகங்களையும் சடுதியில் பறித்துக்கொண்டன. இப்போது கைகளில் எஞ்சி இருப்பது
முதன்முதலில் ஒரு ஜந்துவின் வாலில் இருந்து பிடுங்கினேன் இல்லையா அந்த ஒரு
புத்தகம் மட்டுமே.
முடிவில்லாத
அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்திற்கு முந்தைய பக்கத்தில் ஒன்றுகொன்று அருகில்
மிக நெருக்கமாக, பிரதி எடுக்கப்பட்டதைப்
போல இரண்டு பிரேதங்கள் கிடந்தன... தோல் உரிக்கப்பட்ட இரண்டு மரவள்ளிக்
கிழங்குகளைப் போல.
"திம் திம் திம்", நெஞ்சம் அதிர்ந்தது.
*****
ஒரே இடத்தில்
வெகுநேரம் நின்று கொண்டிருப்பதைப் போல் தோன்றவே அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன்.
இருள் எனும் பெரு வெள்ளம் கருப்பு வைரம் போல் தகதகக்கும் விந்தையை
உள்வாங்கிக்கொண்டே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தேன். இயந்திர அறையில் இருந்து
விலகி, முடிவில்லாமல் நீளும் நூலகத்தைக்
கடந்து பிரம்மாண்டமான உள் மண்டபத்தை வந்து சேர்ந்தேன். நூலகத்தைக் கடக்கும்போது
துளி சப்தம் இல்லை. வெறும் மூச்சுக்காற்று மட்டும் வெவ்வேறு நாசிகளில் இருந்து
வெளிவருவதைப் போல கேட்டுக்கொண்டிருந்தது. மூக்குக் கண்ணாடி அணிந்த சற்றே பருத்த
விசித்திர ஜந்துக்கள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தன. பல்வேறு அடுக்குகளைக் கொண்ட
அந்த நூலகமும், அந்த
அடுக்குகளில் அடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரதியும் அதிலிருக்கும் வார்த்தைகளும் எனக்கு
மிகப் பரிட்சியமானதைப் போல் உணர்ந்தேன். என் வீட்டில் நான் வசிப்பதைப் போல, எனது ராஜாங்கத்தில் நான் பீடு
நடையிடுவதைப் போல மிகக் கம்பீரமாக நடந்து சென்றேன்.
அங்கிருந்தவர்கள்
யாரும் என்னை ஒரு பொருட்டாக மதிக்காதது ஆச்சரியமாக இருந்தது. இது போன்ற புது
இடங்களில் நுழையும் அழையா விருந்தாளியைப் பொதுவாக யாரும் விரும்புவதில்லை, வரவேற்பதும் இல்லை. நானோ எல்லையற்ற
சுதந்திரத்துடன் எவ்வித கட்டுப்பாடும் இன்றி ராஜநடை நடந்து கொண்டிருக்கிறேன்.
இங்கு நிகழும் எவையும் எனக்கு மிகவும் பழக்கப்பட்டதைப் போல, நானே பார்த்துப் பார்த்து
செதுக்கியதைப் போன்ற நெருக்கமான உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றன. அந்த இரண்டு
ஆப்பிள்கள் கூட நான் என் கைப்பட வரைந்த ஓவியம் போல, செதுக்கிய சிற்பம் போலத் தோன்றுகிறது.
பிரம்மாண்டமான
உள் மண்டபத்தின் நடுவறையில் மின்னும் ஒளியுடன் கூடிய அரியாசனத்தின் மீது
அமர்ந்திருந்த அந்த மூத்த ஜந்துவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அதைச் சுற்றிலும்
கரும்புகை வெளியேறிக்கொண்டிருக்க, அந்தக்
கரும்புகையே ஒட்டுமொத்த மாளிகையின் பிரகாசமான இருள் வெள்ளத்திற்குக் காரணமாய் இருக்கக்கூடும்
என்று தோன்றியது. அதனை நெருங்க நெருங்க கால்களின் வழியே ஈரம் பரவுவதை உணர்ந்தேன்.
அழுது கொண்டிருக்கிறது அந்த ஜந்து. அதன் கண்ணீர் ஒரு குளம் போல் பிரவாகம் எடுத்து
ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் என்னால் நடக்க இயலவில்லை. அந்த கண்ணீரில்
மூழ்கிவிடுவேனோ என்கிற பயத்தில் மேற்கொண்டு அடியெடுத்து வைக்காமல் அங்கேயே நின்று
கொண்டேன். அதன் கண்ணீர் கண்ணாடியைப் போல துல்லியமாக இருந்தது. அந்தக் கண்ணாடியின்
பிரதிபலிப்பில் சர்வமும் அடங்கியிருப்பதைப் போலத் தோன்றியது.
"சாத்தான்" என்றது அந்த ஜந்து. எதுவும் புரியாமல் விழித்தேன்.
"நீ தான். உன்னைத்தான். உன்னைத்தான் சாத்தான் என்றேன்", என்றது அந்த ஜந்து.
எதுவும்
புரியவில்லை. நான் சாத்தானா? இதுநாள்
வரையிலும் என் மீது மிக உயரிய மதிப்பு வைத்திருக்கிறேன். இப்போது அவை அனைத்தும்
சுக்குநூறாக உடைவதைப் போல வெருண்டேன். நான் சாத்தானா?
"எங்க சாமிய கொன்ன சாத்தான் நீ"
"எங்க வம்சத்த அழிச்ச சாத்தான் நீ"
"எங்க தாய கொன்ன பாவி நீ"
ஏற்கனவே
தீர்க்கப்படாத இரண்டு கொலை என் கணக்கில் இருக்கிறது. இது என்ன புதுக்கணக்கு? இந்த இடமும் இந்த சூழலும் எனக்குப்
புதிது. ஒரேயொரு நல்லவிஷயம் சில விஷயங்கள் மிகப்பரிட்சியமானதைப் போல் இருக்கின்றன.
யார் சாமி? யாரு தாய்? அதையே கேட்டேன்.
"யார் சாமி? யாரு
தாய்?"
"நடிக்காதே. எல்லாம் அறிந்தவன் நீ. எல்லாம் புரிந்தவன் நீ. நீ
உருவாகிய போதே உன்னை அழிக்க நினைத்தேன். என் சாமி தடுத்துவிட்டது. இப்போ என் சாமிய
நீ அழிச்சிட்ட" என்று கூறியபடி கண்ணீர் சிந்தியது அந்த ஜந்து. வேக வேகமாக தன்
மூச்சை இழுத்துவிட்டது. அதுவிட்ட மூச்சில் அதைச் சுற்றித் தேங்கியிருந்த கண்ணீர்க்
குளம் அலை அலையாகப் பெருக்கெடுத்தது.
"உங்கள் உலகம் உருவான போது உருவான முதல் கரு எங்கள் அரசன். இருளன்.
உலகின் முதல் ஸ்ருஷ்டி அவன். காலத்தால் அழிக்க முடியாதவன். காலத்தால் கணிக்க
முடியாதவன். எதிலும் முடிவென்பதை அறியாதவன். எதிலும் மூப்பென்பதை உணராதவன்.
என்றும் இளமையானவன். யார்க்கும் உயிரானவன். அவன் இன்று இல்லை. அவனைக்கொன்ற
சாத்தான் நீ. இருளனைக் கொன்ற சாத்தான் நீ", அதன் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் அக்கினியைப் போல் தகித்தன.
கண்ணீர்க் குளம் சூடானது. கண்ணீரில் மிதந்த சில நிழலின் பிரதிகள் அக்கினி பட்டு
எரிந்தன.
முதலும்
புரியாமல் முடிவும் புரியாமல் நடப்பது யாவும் ஒரே சீராக இல்லாமல். ஒன்றுகொன்று
முரணாக ஒரு கனவு போல்...
"என்ன நினைத்தாய் கனவா? கனவென்றுதானே நினைத்தாய்?"
"ஆமா எல்லாமே கனவு மாதிரி இருக்கு. எங்க ஆரம்பிச்சேன். இப்போ எங்க
போகுது எதுவுமே புரியல"
"உண்மையைச் சொல்? சாத்தானே
உண்மையச் சொல்? உனக்கு எதுவும்
புரியவில்லை?"
"சத்தியமா சொல்றேன் எனக்கு எதுவும் புரியல. உண்மையச் சொல்லணும்ன்னா
நானே பயங்கர கோவத்தில இருக்கேன். உங்களோட பேச்சு என் கோவத்த இன்னும் அதிகம்
ஆக்குது"
"கோவம் தான் மிகப்பெரிய சத்ரு, கோவம் தான் மிகப்பெரிய சாத்தான். அது எனக்கும் தெரியும். ஆனால்
இவைகளை எல்லாம் விட மிகப்பெரிய சத்ரு நீ."
"நானா? சும்மா
சும்மா என்ன சொல்லாதீங்க? இங்க
உங்க எல்லாரையும் பார்த்து சண்ட போட வந்தது நான். சண்ட போட வந்த இடத்துல என்ன சண்ட
போட விடாம நீங்க சண்ட போட்டா எப்டி?"
"சரி சொல், என்ன
பிரச்சனை"
"சொல்றேன் கேளுங்க. என்னிக்காது ஒருநாள் நிம்மதியா தூங்க விட்டீங்களா? ஒருநாள் ரெண்டு நாள்ன்னா பரவாயில்ல.
தினமும் துர்சொப்பனம் என்றால் நான் என்ன செய்வது", என்றேன். எதற்காக இந்த உலகத்தினுள் வந்தேனோ அதற்கான நோக்கத்தை
சமற்பித்தாயிற்று. அந்த இரண்டு பிரேதங்களைப் பார்த்தபோதே புரிந்திருக்க வேண்டும்
இது கனவு என்று. மூளைக்கு எங்கே புரிகிறது. நிகழும் அனைத்தையும் நம்பி, அதனோடு ஒன்றி,
தன்னைக் கொலைகாரனாக நினைத்து, என்னையும் கொலைகாரன் என்று நம்பவைத்து.
அப்பப்பா! முடியவில்லை. இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்த்து விடலாம் என்றுதான்
கிடைத்த வழிகளைப் பயன்படுத்தி சண்டை செய்ய வந்தாகிவிட்டது.
"கனவு என்பது கொடை. கனவென்பது கற்பனையின் ஜீவ ஊற்று. கனவென்பது
நிழலின் வடிகால்"
"இந்த தர்க்கமெல்லாம் வேண்டாம். யாருக்கு கனவு பிடித்திருக்கிறதோ
அவர்களுக்கு மட்டும் அதைக் கொடுத்தால் என்ன? எத்தனை முறை பதறி எழுதிருக்கிறேன் தெரியுமா?
எத்தனை முறை கொலைகாரன் என்று நம்பி வியர்த்து
ஊற்றி, எத்தனை முறை தற்கொலை செய்ய முயன்று மலை
முகட்டில் இருந்து குதித்திருகிறேன் தெரியுமா? எத்தனை முறை பிணங்களைக் கண்டு பதறி அழுதிருக்கிறேன். கொஞ்சமும்
இரக்கமற்றவர்கள் நீங்கள். கொஞ்சமும் கருணையற்றவர்கள் நீங்கள். உங்களால் எத்தனை
எத்தனை உயிர்கள் தற்கொலை செய்து மாண்டிருக்கின்றன தெரியுமா? அறிவிலிகள்", பஞ்சுப் பொதியினுள் கடப்பாறையை
இறக்குவதைப் போல தேர்ந்தெடுத்து கவனமாக ஒவ்வொரு வார்த்தையாக இறக்கினேன்.
"ஹா ஹா ஹா ஹா ஹா" வெடிச்சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தது அந்த
ஜந்து. அந்த சிரிப்பில் மகிழ்ச்சி இல்லை. கோபம் இருந்தது. எகத்தாளம் இருந்தது.
தான் எனும் ஆணவம் இருந்தது.
"என்ன சொன்னாய் சாத்தானே என்ன சொன்னாய். பதறி அழுதாயா? எத்தனை முறை எத்தனை பேரோடு
சல்லாபித்திருப்பாய். எத்தனை முறை எத்தனை மகிழ்வாக உன் துக்கம் மறந்து ரசித்துச்
சிரித்திருப்பாய். எத்தனைமுறை கள்ளங்கபடமற்ற குழந்தையைப் போல மகிழ்ந்து உவகை
கொண்டிருப்பாய். எத்தனை முறை ஒரு தேவதூதனைப் போல் உருவம் கொண்டு நல்வினைகள்
செய்திருப்பாய்! ஏன் அதை மட்டும் மறந்துவிட்டாய். அப்போது எங்கே போனது உன்
கோவம்", என்னைத்
தாக்குவதற்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைப் போல தோன்றின அவை ஒவ்வொன்றும்.
ஒரு சில
நிமிடங்களுக்கு எவ்வித பேச்சொலியும் இல்லை. அது குறிப்பிட்டதில் எவ்வித பிழையும்
இல்லை. ச்சை அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறது கிழ ஜந்து.
"கிழ ஜந்துதான். என்ன செய்வது வயதாகிவிட்டதே. நீ செய்த காரியத்திற்கு
நான் அல்லவா மாண்டிருக்க வேண்டும். பாவம் என் தேவன். பாவம் என் சாமி. பாவம் எங்கள்
வேந்தன்"
மீண்டும் மௌனம்.
"என்ன சொன்னாய், அறிவிலிகள்
என்றுதானே? இந்த மாய உலகம்
செயல்பட என்னைபோன்ற எத்தனை ஜந்துக்கள் இரவு பகலாக தூக்கம் அற்று ஓய்வற்றுப்
பணியாற்றுகிறோம் தெரியுமா? உலகில்
இருக்கும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு தனித்தனி வாசல் இருப்பதைப் போல, ஒவ்வொரு தனித்தனிக் கனவுகளை நாள்தோறும்
உற்பத்தி செய்துகொண்டே இருக்கும் கட்டாயம் எங்களுக்கு. என்றைக்காவது நீ கண்டு
வியந்த, பயந்து நடுங்கிய கனவு அதே போல்
பிசகாமல் வந்திருக்கிறதா? உலகில்
இருக்கும் ஒவ்வொரு மனிதர்களின் நினைவடுக்கிலும் நுழைந்து அவர்களுக்கு ஏற்ப கனவைக்
கட்டமைப்பது எத்தனை சவாலான காரியம் தெரியுமா? கற்பனை வற்றிப்போகும் நாட்களில், ஜீவராசிகளின் நிராசைகளைக் கிளறி, உன்மத்தம் பிடிக்கச் செய்து தன்னிலை மறக்கச் செய்து, அவர்கள் மனதில் புதுபுது வலிகளை
விதைத்து அதன்மூலம் கதை எழுதுவது எத்தனை கடினமான காரியம் தெரியுமா? இங்கு இயங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு
இயந்திரமும் ஒரே கனவுகளை மீண்டும் மீண்டும் பிரதி எடுத்ததே இல்லை. அத்தனை
தனித்துவமானவன் எங்கள் வேந்தன். அத்தனை கவித்துவமானவன் எங்கள் அரசன். கனவுகளின்
ரட்சகன் எங்கள் இருளன்"
நிதர்சனமான
மௌனம். தொடர்ந்து எதுவும் பேச இயலாமல் அது கூறிய வார்த்தைகளையும், அதன்பின் இருக்கும்
உணர்வெழுச்சிகளையும் கவனித்து அதன்பின் நடந்து கொண்டிருந்தேன். எதையோ தேடிவந்து
எதையோ கண்டடையும் அதிர்ச்சி மனதில் வெறுமையை ஏற்படுத்தியது.
"இதோ இங்கே ஆறு போல் தேங்கி நிற்கிறதே கண்ணீர் அது நான் அழுது
தேங்கியது அல்ல. என் தேவன் அழுது, என்
தேவன் அரற்றி அரற்றித் தேங்கிய கண்ணீர் இவை. அதற்குக் காரணம் நீ. அதற்குக் காரணம்
நீ ஒருவன்"
"நானா?"
"ஆம் நீ தான். யாருக்கு வயதே ஆகாது என்று நினைத்தோமோ யாருக்குக்
கற்பனை வற்றவே வற்றாது என்று நினைத்தோமோ அவனும் தன் அந்திம காலத்தை நெருங்கத்
தொடங்கி இருந்தான். அவன்தான் எங்கள் தேவன். எங்கள் இருளன்.
கடைசி சில
நாட்களாக அவனால் முன்புபோல் யோசிக்க முடியவில்லை. கற்பனையின் ஜீவ ஊற்றில் எங்கோ
பிழை நேர்ந்துவிட்டது. எவ்வளவு முயன்றும் அவனால் அதனைச் சரிசெய்யவே முடியவில்லை.
இதோ இந்த அரியணையில் அமர்ந்து என்னிடம் சொல்லி அரற்றினான். என்னால் எதையும்
கேட்டுக்கொள்ள முடிந்ததே தவிர அவனுக்கு ஆறுதலாய் ஒரு வார்த்தை சொல்ல இயலவில்லை.
அவனே கர்த்தா, அவனே புனிதன்.
அவனே ஸ்ருஷ்டிப்பவன். நான் அடிமை. என்னால் ஆவதற்கு ஒன்றுமில்லை. அப்போதுதான் நீ
வந்தாய்"
"நானா?"
"ஆம் நீதான் வந்தாய். கனவுலகின் வழியைக் கண்டுபிடித்து நீ இங்கே
வருவது இது ஏழாவது முறை. முதல்முறை நீ வருவதற்கு முன் வரைக்கும் அனைத்தும்
நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எப்போது நீ வந்தாயோ அப்போது ஆரம்பித்தது
பிரளயம்."
ஒரு நீண்ட
பெருமூச்சை இழுத்துவிட்டது அந்த ஜந்து. அதன் மேல் ஏதோ சிறிது கருணை பிறப்பதைப்
போலவும் என் மீது விடைதெரியாத கேள்வி எழுவதைப் போலவும் உணர்ந்தேன்.
"நீதான் வந்தாய். வந்து தேவனிடம் முறையிட்டாய். சமீப காலமாக உனக்கு துர்
சொப்பனமாக வருவதாகவும் அதனால் உன் உறக்கம் கெட்டு உன்னால் நிம்மதியாக வாழ
முடியாமல் போனதாகவும். என்னிடம் நீ என்னவெல்லாம் கூறினாயோ அவற்றைஎல்லாம் நீ
அவரிடமும் கூறினாய். நான் உன்னிடம் என்னவெல்லாம் கூறினேனோ அவற்றை எல்லாம் அவர்
உன்னிடம் கூறினார். நிற்காத வாக்குவாதம் ஒன்று உங்களுக்குள் யுத்தம் போல்
நிகழ்ந்தது. இதோ சுற்றிலும் எரிந்து சாம்பலாகக் கிடக்கிறதே இவை அனைத்தும் உங்கள்
இருவருக்கும் இடையே நிகழ்ந்த யுத்தத்தின் போது சாம்பலாகக் கருகி வீழ்ந்தவை.
உனக்கொரு கனவு வந்ததாகவும், அந்தக்
கனவில் இரண்டு பிரேதங்களைக் கண்டதாகவும். அந்தப் பிரேதங்கள் உனக்கு
உணர்வெழுச்சியைக் கொடுத்ததாகவும்..."
"நிறுத்து நிறுத்து நிறுத்து... இது அன்றைக்கு வந்த கனவில்லை.
இன்றைக்கு வந்த கனவு. இந்த கனவில் இருந்து மீளும் பொருட்டுத்தான் சண்டை
செய்வதற்காக வந்திருக்கிறேன்"
"இன்றைக்கு மட்டும் இல்லை இதற்கு முன்னும் நீ அதற்காகவே வந்தாய்.
அப்போதுதான் உன் கனவுப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தோம். ஒரே கனவு இம்மி பிசகமால்
மீண்டும் மீண்டும் அச்சிடப்பட்டிருப்பதை அப்போதுதான் கவனித்தோம்."
பெருமூச்சொன்றை
இழுத்து வலித்தது ஜந்து.
"உனக்கு எந்த கனவு பிரச்சனையாய் வந்ததோ அதே கனவுதான் எங்களுக்கும்
பிரச்சனையாய் அமைந்தது. உன்னைப் பின் தொடர ஆரம்பித்தோம். உன்னைப் பின் தொடர
ஆரம்பித்த நாளில்தான் கண்டுபிடித்தோம் என் தேவனின் கற்பனையில் நேர்ந்த பிழையை.
நீதான் எங்கள் ஒளி. நீதான் எங்கள் நித்திய ஜீவன். இனி நீயே எங்கள் வழி"
"எனக்குப் புரியவில்லை"
"புரியும்படி சொல்கிறேன் கேள்... எம் வேந்தே. நன்றாகக் கேள். எங்கள்
தேவனின் ஆயுட்காலம் எங்களை அறியாமலேயே குறைந்து கொண்டிருந்ததை கவனிக்கத்
தவறியிருந்தோம். காரணம் கனவுகளை உற்பத்தி செய்யும் பொருட்டு அத்தனை தீவிரமாய்
உழைத்துக் கொண்டிருந்தோம். என்றைக்கு நீ வந்து சண்டையிட்டாயோ அன்றைக்கே புரிந்துவிட்டது
நீயே எங்கள் மீட்சி என்று. உன் தலையணைக்கு அடியில் நீ குறிப்பெடுத்து வைக்கும்
கனவுப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தோம். எவ்வித பிழையும் இல்லாமல் நீ எழுதி வைத்திருக்கும்
அதே போன்ற எங்கள் குறிப்புகளையே எங்கள் இயந்திரம் பிரதியெடுத்துக் கொண்டு
இருக்கின்றன. நாங்களே தேடாமல் கிடைத்த தேவன் நீ. நீ பார்த்த இரண்டு உடல்கள் எங்கள்
தேவனும் எங்கள் தேவியும். இது புரிந்த நாளில் இருந்து அவருக்கு மீட்சியில்லை.
அவனுக்கு நேர்ந்த இன்னலை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இறப்பற்றவன் எங்கள்
இருளன்.
உலகின் முதல்
கரு அழிவற்ற வித்து. தன்னையே அழித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியாத எம் தேவன், தன் தேவியுடன் இணைந்து உன் இல்லத்தில்
தற்கொலை செய்துகொண்டான். அதுவரைக்கும் வெளிச்சத்தைப் பார்க்காதவன் வெளிச்சத்தின்
கோர தீற்றுக்களாலேயே தன்னை மாய்த்துக்கொண்டான்."
"நீயே எங்கள் தேவன். நீயே எங்கள் மீட்சி, நீயே எங்கள் ஒளி"
"நீயே எங்கள் இரண்டாவது வேந்தன்"
பேருறு கொண்ட
அந்த ஜந்து ஓடிவந்து என் கால்களைக் கட்டிக்கொண்டது. அதன் கண்ணீர் என் பாதங்களை
நனைக்கத் தொடங்கியது. அந்த கண்ணீர்த் துளிகளின் பிம்பத்தில் மிகத் தெளிவாக, தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. ஒரு
வேந்தன் உருவாகிக் கொண்டிருப்பது. நானே அந்த இரண்டாவது ஆப்பிள். நானே வேந்தன்.
நானே ஒளி.
ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
தென்காசியைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீனிவாசன் கணினிப் பொறியியல் துறையில் வேலை செய்தாலும் இலக்கிய வாசிப்பும் திரைப்படங்கள் குறித்த தேடலும் தொலைதூரப் பயணங்களை நேசிக்கும் மனமும் கொண்டவர். அடைக்கப்பட்ட விடுதைலையை படைப்பின் வழி கண்டுகொள்ள முடியுமென்ற தேடல் நிறைந்தவர்,
நல்லா இருக்குங்க... பாராட்டுகள்...
ReplyDeleteவித்யாசமான கதைக்கரு!வாழ்த்துகள்!
ReplyDeleteNice story on one of the interesting and complex subject Dream 👌🏻👌🏻👌🏻
ReplyDeleteReminds me, the random dreams i had in the past 😭
Nice story on one of the interesting and complex subject Dream 👌🏻👌🏻👌🏻
ReplyDeleteReminds me, the random dreams i had in the past 😭