ஹமார்ஷியா.

                                                                                                                ஷாலினி பிரியதர்ஷினி 






உனக்காக...ஓராயிரம் முறையும் முதல் முறையாக!

          - காலித் ஹொசைனி.

 


இந்த உலகம் குழந்தைகளிடம் இன்னும் கொஞ்சம் கருணையாக நடந்து கொள்ளலாம் என்று தோன்றும் போதெல்லாம்  நஃபீஸின் நினைவால் உள்ளம் தளும்பித் தத்தளிப்பதை ஜீவாவால் தவிர்க்க முடிவதில்லை. நஃபீஸ் அவளுக்காகவும் அவள் நஃபீஸ்க்காகவும் பரஸ்பரம் செய்து கொடுத்த உதவிகள் அவ்வாறானவை. இருவருமே ஒருவரையொருவர் கேட்டுப் பெற்றுக்கொள்ளாத உதவிகள். அம்மாதிரியான நேசம் வாய்க்கப் பெற்றவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய அன்பின் உடன்படிக்கைகள் அவை.

 

நஃபீஸ் ஜீவா இருவரும் சந்தித்துக் கொண்டது ஜம்மு காஷ்மீர் மாநிலம்,நக்ரோட்டாவில். நஃபீஸ் அப்பொழுது பதினோறு வயது சிறுவன்.உத்தரபிரதேச மாநிலம் சாஹ்ரன்பூரை சேர்ந்தவன். தன் தந்தையின் பணி நிமித்தமாக அவனும், கணவனின் பணி நிமித்தமாக ஜீவாவும் நக்ரோட்டாவில் வசிக்க வேண்டிய கட்டாயச்சூழலில், வெறுமையில் பூத்த வற்புறுத்தல் உறவாகத்தான் முதலில் அது இருந்தது. நிரம்ப நிரம்ப மூச்சு முட்டுமளவு வழங்கப்பட்டிருந்தத் தனிமையும், இயற்கை சூழலும் இருவருக்கும் வெவ்வேறு மாதிரியான உள்ளத் தடுமாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. ஜீவாவின் தனிமை அவள் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒன்றுதான் என்பதால் வயதும் அனுபவமும் ஓரளவுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைத் தந்திருந்தது. ஆனால் நஃபீஸிற்கு அப்படியிருக்கவில்லை. அவனுடையது திணிக்கப்பட்ட தனிமை. காரணமே இல்லாத வன்முறையாக அவனுக்கு இழைக்கப்பட்ட அவன் சற்றும் விரும்பியிராதத் தனிமை. வாய்ப்புக் கிடைத்தால் தப்பித்து வேலி தாண்டி மலைகள் கடந்து ஓடி விட வற்புறுத்தியத் தனிமை. ஆனால் அவனால் எதுவும் முடியாத சூழலில் தன் வீட்டு சன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு வானத்தை வேடிக்கைப் பார்ப்பதொன்றே அவனுக்கான வடிகாலாக இருந்தது. 

ஜீவா, அவன் வானத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்த பொழுதுதான் அவனை முதன் முறையாக சந்தித்தாள். தன் கண்ணீர் கண்டு கொள்ளப்பட்டுவிட்டது என்றறிந்த நொடியில் வீறிட்டு அழுவதற்கு பதிலாக வேகவேகமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சிரித்தான் நஃபீஸ். ஜீவாவிற்கு இதயம் கனத்தது. அவளது குழந்தைப் பருவமும் சிரிப்பால் மறைக்கப்பட்ட கண்ணீரால் ஆனதுதான் என்பதால் அவளால் நஃபீஸ் தனக்கிழைத்துக் கொள்ளும் கொடுமையை புரிந்து கொள்ள முடிந்தது. விழுங்கப்படும் கண்ணீருக்கு உறைப்பு அதிகம், அதைவிட புன்னகைக் கொண்டு புதைக்கப்படும் கண்ணீரால் ஆபத்தும் அதிகம். நஃபீஸ் அந்த ஆபத்திற்கு தன்னை ஒப்புக் கொடுப்பதை ஜீவா தடுக்க வேண்டுமென்று எண்ணினாள். வலிய சென்று அவனுடன் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டாள். நஃபீஸை இவ்வாறு வதைப்பதன் காரணத்தை அவன் தந்தை ஹாசிமிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்தான் ஆனால் அதனால் பயனேதுமில்லை என்று ஜீவா அறிந்தேயிருந்தாள். பெற்றவர்கள் தம் பிள்ளைகளுக்கு இழைக்கும் கொடுமைகளுக்குத் தேவையான நியாயங்கள் அவர்களிடம் இருக்கவே செய்யும் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். தான் அங்கு இருக்கும் காலம் வரை நஃபீஸிற்கு இளைப்பாறுதல் அளித்துவிடுவது என்று தீர்மானித்தாள். அதன் பின்னால் மறைந்திருந்த அவளின் சிறு சுயநல ஏக்கமும் இருக்கத்தான் செய்தது. அது எல்லா உயிர்களுக்கும் பொதுவானதொரு ஏக்கம் தான். அன்பு செலுத்தி பதிலுக்கு சிறிது அன்பை தந்திரமாகப்  பெற்றுக் கொள்வது.

 

நாட்கள் செல்ல செல்ல நஃபீஸ் குணத்தில் இறுக்கம் குறைந்து காணப்பட்டது. கதவுத் தட்டாமல், காலிங் பெல் அடிக்காமல் வீட்டிற்குள் வரும் சுதந்திரத்தை ஜீவா அவனுக்கு மட்டும் வழங்கியிருந்தாள். ஜீவாவின் ஒன்பதுப் மாதக் குழந்தை கதிருடன் விளையாட வருவான் நஃபீஸ். அப்பொழுது அவனுக்கு ஜீவா சாப்பிட  ஏதாவது கொடுப்பாள். ஜீவா, நஃபீஸ், கதிர் மூவரும் விளையாடும் பொழுதுகள் மிக ரம்மியமானவை. இதில் யார் குழந்தை யார் பெரியவர் என்று தெரியாத வண்ணம் மூவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு விளையாடுவர்.

"எங்கேயாச்சும் ஒரு கொழந்தையோட அம்மா மாதிரியா நடந்துக்குற" என்று ஜீவாவின் கணவன் அடிக்கடி நொந்து கொள்வான். ஜீவா அப்படித்தான், அவளுக்கு ஒரு குழந்தையை எப்படியெல்லாம் நடத்தக் கூடாது என்பது தெரிந்திருந்ததால் அவள் கதிரையும் நஃபீஸையும் குதூகலத்தோடு அணுகினாள். குழந்தைகள் சிரித்துப் பழக வேண்டும் என்று நம்பினாள்.

நஃபீஸ் அனைவரின் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தான். அது குறித்து அவன் தந்தைக்கு பெரிதாக அக்கறை ஏதுமிருந்ததில்லை. அவருக்கு நஃபீஸ் ஒரு காரணம். அவனது கல்வியைக் காரணமாகக்கூறி அதிகாரிகளிடம் அங்கு தங்கிக் கொள்ள அனுமதி பெற்றிருந்தார்.இல்லையென்றால் பூஞ்ச், குப்புவாரா போன்ற எல்லைப்பகுதிகளில்தான் போஸ்டிங் கிடைத்திருக்கும். ஹாசிம் கானுக்கு நஃபீஸ் எப்பொழுதும் ஒரு காரணம். அவனை வைத்து அவரது பிழைப்பு ஓடியது. இதை புரிந்து வைத்திருந்த அக்கம்பக்கத்தினர் அவர்களது அனைத்து எள்ளல்களையும் நஃபீஸிடம் தாராளமாகக் காட்டினர். பள்ளி முடிந்து வந்ததும் அனைவரது தோட்டங்களிலும் நீர் பாய்ச்சுவது, மேலதிகாரிகளின் சீருடைகளை இஸ்திரி போடுவது( ஹாசிம் கானின் உத்தரவில்), அவர்களுக்கு சிகரெட், சோடா,சைட் டிஷ் வாங்கி வருவது  என ஒரு நாளுக்கு நூறு முறையாவது அந்த படிக்கட்டுகளில் ஏறி இறங்குவான்.

 

"ஏன்டா நஃபீஸ் நெஜமாலுமே அவர் உங்க அப்பாதானா?"

"ஆமா"

"சரி விடு, நாளையிலிருந்து சாயங்காலம் எங்கிட்ட இங்கிலிஷ் டியூஷன் வரணும் புரியுதா? உங்கப்பாக்கிட்ட பேசியாச்சு".

நஃபீஸ் கண்கள் நிறைய புன்னகைத்தான்.ஜீவா தரைதளத்திலும் நஃபீஸ் முதல் மாடியிலும் வசித்ததால் நஃபீஸின் குரல் அடிக்கடி கேட்ட வண்ணம் இருக்கும். தனியே அமர்ந்து அவன் சத்தமாக படிப்பதும், உருது பாடல்களை ரசித்துப் பாடுவதும் ஜீவா தன் வீட்டிலிருந்த படியே சிரித்து ரசித்து அருளிடம் கூறுவாள்

"இந்தப்பையன் பாருடா எப்படி தன்னத்தானே சந்தோசமா வெச்சுக்குறான், பெரிய விஷயம் ல?"

நஃபீஸ் குறித்து ஒவ்வொருவரும் ஒரு கருத்து வைத்திருந்தனர். அவன் வயதேயான பிரியங்காவை பொறுத்தவரை அவன் ஒரு "ஷைத்தான்". ஒரு முறை பிரியங்கா அவனை அப்படி அழைத்ததற்காக அவன் அவளை அடித்து விட்டான். விசாரணையில் நஃபீஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. எல்லா விசாரிப்புகளும் ஹாசிம் கான் நஃபீஸை இழுத்துச்சென்று கதவடைத்துவிட்டு அடித்துத்துவைப்பதில் வந்து முடியும். ஹாசிம் அதைத் தவறாமல் செய்தார். மற்றவர்களுக்கும் அது போதுமானதாக இருந்தது.

ஜீவா பிரியங்காவை அழைத்து விசாரித்தாள்

"ஏன் அவன ஷைத்தான்னு கூப்புடுற?

"அவன் அதான், எங்கம்மா அப்பா சொல்லிருக்காங்க"

"எதுனால அப்படி சொன்னாங்க?"

"தெரியாது, அவன் காது பாருங்க எவ்ளோ பெருசா கண்ணு முட்டையா, பல்லு எடுப்பா அப்றம் அவன் ........"

பிரியங்காவும் சிறுமிதான். அவளுடைய சொந்தக் கருத்தல்ல அது. அதனால் அவளைத் திருத்தி பயனில்லை என்று ஜீவாவிற்கு புரிந்திருந்தது.அன்று மாலையே பிரியங்காவின் தாயிடம் இதைப்பற்றி மிகக் கடுமையாக பேசினாள் ஜீவா. அன்றிலிருந்து பிரியங்கா நஃபீஸிடம் பேசுவதில்லை. அதுகுறித்தும் அவன் வருத்தப்பட்டான்.அவன் அப்படித்தான். பட்டாம்பூச்சி இனம்.

"இப்பலாம் பிரியங்கா பேசுறதில்ல ஜீவா"

"விடு கொஞ்ச நாள்ல சரியாகிரும்"

"இல்ல ஜீவா அவதான் எனக்கு இங்க ஒரே ஃபரண்டு"

"அப்ப நானு?"

"நீங்க வேற.."

"வேறன்னா.."

"தெரியல.."என்று அருகில் வந்து கன்னம் நிறைய சிரிப்பான்.

பிரியங்காவின் பிறந்தநாளுக்கு அவனும் ஜீவாவும் சேர்ந்து செய்து கொடுத்த வயர் பொம்மையால் பிரியங்காவின் கோபம் தணிந்து இருவரும் இணக்கமாயினர். அதற்குப் பிறகு பிரியங்கா அவனை எப்பொழுதும்"ஷைத்தான்" என்று அழைக்கவில்லை.

 

மழைக்காலத்தில் ஒரு முறை அருள் அவசர வேலையாக ஶ்ரீநகர் சென்றுவிட, ஜீவா கதிரோடு தனியாக இருந்தாள். மலைப் பகுதியென்பதால் மழை சுழற்றிக்கொண்டு பொழியும். இடியும் மின்னலும் தலையிலேயே இறங்குவது போலிருக்கும். தொடர்ந்து பல நாட்கள் மின்சார இணைப்புத் துண்டிக்கப்பட்டிருக்கும். இருள் போர்த்தத்துவங்கியதும் அவ்விடமே பயங்கர நிசப்தத்தில் மூழ்கிவிடும். மனிதர்கள் தத்தமது வீடுகளுக்குள் அடங்கிவிடுவர். ஜீவாவிற்கு ஒரே ஆறுதல் நஃபீஸ்,அவன் வீட்டிலிருந்து பாடும் உருதுப் பாடல்கள்தான். இரவு நேரங்களில் ஹாசிம் கான் அவனைத் தவறியும் வெளியே அனுப்பியதில்லை.

அன்று அப்படித்தான், மழை அலைக்கழித்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட, ஒற்றை பேட்டரி லைட்டின் துணை கொண்டு இரவைக் கடக்க வேண்டிய நிலை. கதிரைத் தூங்க வைத்துவிட்டு ஜீவா கழிவறைக்கு சென்றபோதுதான் அந்தக் காட்சியைக் கண்டாள். கழிவறைக்கும் முற்றத்திற்குமான தடுப்பு மறைவில் தடிமனான பாம்பு சுருட்டிக் கொண்டு படுத்திருந்தது. மெழுகுவர்த்தி வெளிச்சம் பட்டதும் அசைந்து தன் இருப்பைத் தெரிவித்தது. படித்திட்டில் இருந்த அந்த பாம்பு வீட்டிற்குள்ளும் வரலாம் வராமலும் போகலாம். விரட்ட முயன்றால்  வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் விபரீதமாகிவிடலாம் என்று ஜீவாவிற்கு தெரிந்திருந்தது. கும்மிருட்டில் யாரை அழைப்பது என்று தெரியாமல் நின்றாள். நேரம் இரவு பத்து மணியிருக்கும். அப்பொழுது நஃபீஸ் பாடும் குரல் சன்னமாகக் கேட்கவே, சமையலறை சன்னலிலிருந்து குரல் கொடுத்தாள். அதிர்ந்து பேசவிடக் கூடாது என்பதில் தெளிவிருந்தது.

"டேய் நஃபீஸ் உங்கப்பா என்னடா பண்றாரு?"

"தூங்கிட்டாரு ஜீவா."

"ஓ..நஃபீஸ் இங்க ஒரு பாம்பு வந்து உக்காந்திருக்குடா, என்ன பண்றதுன்னு தெரியல."

"சரி அப்பாவ எழுப்புறேன்".

"ம்ம்ம் சரி.."

சிறிது நேரத்தில் டார்ச் வெளிச்சம் வாசலில் தெரிய, ஜீவா உதவிக் கிடைத்த நிம்மதியில் கதவைத் திறந்தாள். எதிரில் நஃபீஸ் நின்றிருந்தான்.

"என்னடா நீ வந்திருக்க? உங்கப்பா எங்க?"

"அவருக்கு தூக்கம் கலைய மாட்டேங்குது ஜீவா. அடிக்க வர்றாரு எழுப்புனா, அதான் நான் வந்துட்டேன் அமைதியா".

"நீ வந்து என்னடா செய்றது, கடவுளே!!"

கதிர் தூக்கத்தில் சிணுங்கினான். அவனுக்கு பாலூட்டும் நேரம். ஜீவா செய்வதறியாது திகைத்தாள். "நான் அவனுக்கு பால் குடுப்பேனா, இந்த பாம்பு உள்ள வராம பாப்பேனா?"

"ஜீவா நீங்க போய் அவன பாருங்க நான் இந்த பாம்ப ஒரு வழி பண்ணிர்றேன்" என்றான் நஃபீஸ்.

"டேய் நீ வேற எதுவும் பண்றேன்னு அத உசுப்பி விட்றாத, அது அசையுதான்னு மட்டும் பாத்துட்டே இரு" என்று கூறிவிட்டு கதிருக்கு பாலூட்டச் சென்றாள்.

நஃபீஸ் அங்கேயே அமர்ந்து கொண்டான். பாம்பும் அப்படியே படுத்திருந்தது. ஜீவா சிறிது நேரம் அங்குமிங்கும் கண்காணித்துவிட்டு தன்னையும் மீறி கண்ணயர்ந்துவிட்டாள். விடியற்காலையில் நஃபீஸ் அவளைத் தட்டியெழுப்பினான்.

"ஜீவா நான் வீட்டுக்குப் போறேன், அப்பா எந்திரிச்சிருவாரு".

ஜீவாவிற்கு அப்பொழுதுதான் நினைவு திரும்பியது.

"டேய் அந்த பாம்புடா? நா எப்படா தூங்குனேன்? நீ என்ன பண்ணிட்டிருந்த?"

"நானா, நான் அப்டியே உக்காந்திருந்தேன் அதுவும்

அப்படியே உக்காந்திருந்துச்சு, விடிஞ்சதும் போய்ருச்சு. அந்தப்பக்கமா தோட்டத்துல எறங்கி மேடேறி போய்ருச்சு நான் பாத்தேன்".

ஜீவா நஃபீஸை ஆதுரமாக அணைத்துக் கொண்டாள். உச்சி முகர்ந்தாள். நஃபீஸீக்கு உடல் முழுதும் சிலிர்த்தது. அவன் ஏங்கிய தாய்மையின் வெம்மை இதுதான் என்று புரிந்ததும் அவனும் அவளை அணைத்துக் கொண்டான். ஜீவாவிற்கு நஃபீஸ் செய்த அந்த உதவியில் பல உண்மைகள் புலப்பட்டன. அதில் மிக முக்கியமானது சற்றும் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு உயிரின் அன்பிற்காக தாய்மை பூரித்து தனங்கள் கனத்து தாயமுது சுரக்கும் என்று. அன்று அவள் நஃபீஸிற்காகவும் சேர்த்து கதிருக்கு பாலூட்டினாள்.

 

ஜீவா விடுமுறைக்குக் கிளம்பும் பொழுதெல்லாம் நஃபீஸ் அவளைச் சந்திப்பதைத் தவிர்த்தான். அதன் அர்த்தம் ஜீவாவிற்கு புரிந்தது. அவள் நிறைய புறக்கணிப்புகளைச் சந்தித்தவளாததால் இந்த அன்பின் புறக்கணிப்பு அவளுக்கு இனிக்கத்தான் செய்தது. அதுவும் நஃபீஸின் குணம்தான். ஒரு மாத விடுமுறைக்குப்பின் அவனை சந்திக்கும்பொழுது எல்லாம் மறந்து போயிருக்கும் அவனுக்கு. ஒரு மாதத்திற்கு தேவையான ஆங்கில கட்டுரைத் தலைப்புகள், கணக்குப் பயிற்சி பாடங்கள் என நஃபீஸ் செய்ய வேண்டியவற்றை அறிவுறுத்திவிட்டு செல்வாள்.

நஃபீஸ் எதிலும் நாட்டமில்லாமல் பார்த்திருப்பான்.

"இதெல்லாம் நான் வரும்போது முடிச்சு வெக்கலன்னா, கழுத வீட்டுப் பக்கம் வராத சரியா? "

நஃபீஸ் அவளை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான்.இது அவர்கள் இருவருக்கும் வழக்கமான ஒன்றுதான்.

 

விடுமுறை முடிந்து நக்ரோட்டா திரும்பிய ஜீவாவிற்கு சில மாற்றங்கள் காத்திருந்தன. அப்பகுதிக்கு புதியதாக நியமிக்கப்பட்ட அதிகாரி கண்ஷ்யாம் ஹாசிம் கானை தன் உதவியாளராக நியமித்துக் கொண்டார். அதிகாரியின் நேரடி உதவியாளராக நியமிக்கப்பட்டதில் ஹாசிமிற்கு ஏக மகிழ்ச்சி. சலுகைகளை எண்ணியெண்ணி அவரது மனம் பூரித்தது. அவருக்கு பணிவிடைகள் செய்து நற்பெயர் சம்பாதித்துவிட்டால் அடுத்த போஸ்டிங் டெல்லியோ பெங்களூருவோ வாங்கி விடலாம். ஹாசிம் மனம் முழுதும் வியூகங்களால் நிரம்பியது. அதற்கு பகடையாக நஃபீஸை பயன்படுத்த ஆரம்பித்தார் ஹாசிம். கண்ஷ்யாம் ஷர்மாவிற்கு அனைத்து விதமான தேவைகளுக்கும் நஃபீஸ் தான் ஒரே விடையாகியிருந்தான். நஃபீஸ் ஜீவாவை சந்தித்து பத்து நாட்களுக்கும் மேலானது. ஜீவாவும் காத்திருந்து பார்த்தாள். பிறகு ஒரு நாள் அவன் வீட்டிற்கே சென்று விட்டாள். ஹாசிம் கான் புன்னகையுடன் வரவேற்றார்.

"ஏன் நஃபீஸ் வரமாட்டேங்குறான் இப்பலாம்? கொஞ்சம் புக்ஸ் வாங்கிட்டு வந்தேன் அதான் குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்".

ஜீவாவின் குரல் கேட்டதும் நஃபீஸ் சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டான்.

இந்த மாற்றம் புதிதாக இருந்தது ஜீவாவிற்கு.

"சரி நாளைக்கு டியூசனுக்கு வந்துருடா" என்றாள்.

"இல்லங்க, அவன் வரமாட்டான், நம்ம கண்ஷ்யாம் சாருக்கு உதவியா அவர் வீட்டுக்குப் போறான். அவரே படிக்கவும் உதவுறதா சொல்லிருக்காரு" என்று தட்டையாக பதிலளித்தார் ஹாசிம்.

 

நஃபீஸை சந்தித்து ஒரு மாதத்திற்கும் மேலாகியிருந்தது. ஜீவா அவனுக்காகக் காத்திருக்கத்தான் செய்தாள்.  காலமாற்றங்களால் காற்றின் விசையில் இடம்பெயர்ந்து விடும் சருகுகள் போல  மனிதர்களின் வாழ்வும் சின்னஞ்சிறு மாற்றங்களாலும் பிரிவுகளாலும் கட்டமைக்கப்படுபவை என்பது ஜீவாவிற்கு புரிந்தது.

 

பல நாட்கள் போலவே முக்கியத்துவமில்லாத ஏதோ ஒரு நாளின் பிற்பகலில் ஜீவாவின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. ஜீவாவின் கணவன் அருள்தான் கதவைத் திறந்தான்

"என்னடா இந்த நேரத்துல? கண்ஷ்யாம் ஸார் வீட்டுக்கு போகலையா?"

நஃபீஸ் சிலையாக நின்றிருந்தான். ஜீவா அழைப்பதற்காகக் காத்திருந்தான்.ஜீவா கூந்தலை அள்ளிமுடிந்து கொண்டே

"வாடா நஃபீஸ், ஜீவா ஞாபகம் வந்துருச்சா கடைசில?"

நஃபீஸ் முகம் முழுதும் கலக்க ரேகைகள் படர்ந்திருப்பதைப் பார்த்ததும் ஜீவா புரிந்து கொண்டாள்.

"என்னடா ஆச்சு? "

நஃபீஸ் அருகில் நின்றிருந்த அருளைப் பார்த்துத் தயங்கினான்.

"என்னடா முழிக்குற, உங்கப்பா புதுசா ஏதும் திட்டம் போட்டிறுக்காரா?"என்றான் அருள்.

நஃபீஸ் எதையும் கேட்கும் நிலையில் இருப்பது போல் தெரியவில்லை. அவனுக்கு சுவாசிக்க் காற்று தேவைப்படுவது போல் தத்தளித்தான். கருணை வேண்டி ஜீவாவை பார்த்தான்.

அழுது கொண்டிருந்த கதிரை அருளிடம் கொடுத்து விட்டு நஃபீஸை அழைத்துக் கொண்டு அவர்கள் வழக்கமாக அமர்ந்து பேசும் நெல்லிக்காய் மரத்தடிக்கு வந்தாள்.

"என்னடா நஃபீஸ் சொல்லு?"

"ஜீவா!!" என்று தேம்பியழுதான் நஃபீஸ்.

அதற்குபின் அவன் கூறிய அனைத்து சொற்களும் ஒருசேர தொண்டைக்குழியை அடைத்துக் கொண்டு நின்றது ஜீவாவிற்கு. மூளை நரம்புகள் அதிர்ச்சியில் விரிந்து நாளங்களில் சூடாக ரத்தம் பாய்வதை நன்றாக உணர முடிந்தது அவளால். சிறு வயது முதல் இன்று வரை அவள் விருப்பமின்றி அவள் மீது படர்ந்த அத்தனை விரல்களின் தீண்டலும், அத்தனை பற்குறிகளின் காயங்களும், வன்மத்தோடு அவளை அழுத்திய உள்ளங்கைகளின் அழுத்தங்களும் மீண்டும் ஒருமுறை அவள் மீதெங்கும் பரவியது போலிருந்தது.

குழறிய குரலை சரி செய்துகொண்டாள்.

"எத்தன நாளா இப்படி?"

"ரெண்டு மூணு முறை ஆகிருச்சு, அங்கப் போகவே பயமாயிருக்கு ஜீவா" என்று கண்கள் கசிய கூறினான். நஃபீஸ்.

"உங்கப்பாக்கிட்ட சொன்னியா?"

"இல்ல, அவுருக்கிட்ட சொன்னாலும் கேட்க மாட்டாரு, ஏற்கனவே ஒரு முறை சொன்னப்பவும் என்னையத்தான் அடிச்சாரு".

"சரி, உடம்பு சரியில்லன்னு போகாத ரெண்டு நாளைக்கு நான் பாத்துக்குறேன்".

"ஜீவா பயமாயிருக்கு ஜீவா, அந்த சாரு பேன்ட்ட கழட்டிட்டு நின்னுட்டு வா வா ன்னு சொல்றாரு".

ஜீவா அதற்குமேல் அவனை பேசவிடவில்லை. அவளே அழுதுவிட்டாள்.

"நஃபீஸ் எனக்கு நீ சொல்றதெல்லாம் புரியும்தான, இதுவும் அதே மாதிரி புரிஞ்சுது சரியா, கவலப்படாத, ரெண்டு நாளைக்குப் போகாத சரியா?

இப்ப வா தோசை சுட்டுத் தாரேன்".

 

ஜீவா இயங்க ஆரம்பித்தாள். ஆனால் வாழ்க்கை சினிமாப் படம் போல் திருப்பங்கள் நிறைந்து இறுதியில் வில்லன்கள் தண்டிக்கப்படும் தமாஷ்கள் அரங்கேறுவதில்லை என்பது அவளுக்கு தெரிந்திருந்தது. அருளிடம் இதுபற்றி அன்றிரவே பேசினாள். அருள் மிகவும் வருந்தினான்.

"எல்லாம் சோக்கு தான்டி, காசு கொழுத்து போயிருக்கு,பத்தாக்குறைக்கு பதவி வேற, கொழுப்பெடுத்து திரியுறானுங்க".

"இப்ப விஷயம் அதில்ல அருள். நஃபீஸ்க்கு நடக்குறது சாதாரண விஷயமில்ல".

"அவங்க அப்பாகிட்ட காலையில பேசுறேன். நீ தூங்கு".

ஜீவா தூங்காமல் நஃபீஸ் பற்றியே நினைத்திருந்தாள். இப்பொழுதெல்லாம் நஃபீஸ் பாடுவதில்லை. சன்னலில் நின்று வேடிக்கை பார்ப்பதுமில்லை.அவனை பயம் ஆட்கொண்டிருந்தது. தனிமை புறக்கணிப்பு இப்பொழுது அச்சுறுத்தல். ஒரு மனிதன் வாழ்வின் மீதான அத்தனை நம்பிக்கையும் இழப்பதற்குத்  தேவையான அனைத்தும் நஃபீஸ்க்கு அடுத்தடுத்து நிகழ்வதை ஜீவாவால் உணர முடிந்தது. அவள் கடந்து வந்த அதே பாதையில் இப்பொழுது நஃபீஸ் நிற்கிறான்.

 

இரண்டொரு நாட்கள் கழித்து மீண்டும் அருளிடம் பேசினாள்.

"ஆமா ஜீவா, ஹாசிம் கிட்ட சொல்லிட்டேன். அவன் காது கொடுத்துக் கூட கேக்கல, அவனுக்கு அவன் பிரச்சனை இதுல எங்க அவனுக்கு இதெல்லாம் புரியப்போகுது"

"சரி அப்றம்?"

"அப்றமென்ன, சொல்லிட்டேன் பார்ப்போம், இந்தப் பயலையும் நம்ப முடியாது ஜீவா, உண்மையாத்தான் சொல்றானான்னு தெரியலையே"

"இதுல யாராவது பொய் சொல்லுவாங்களா அருள்? அப்படியே பொய் சொன்னாலும் அதுவும் ஏதோ ஒரு பாதிப்புனாலதான். விசாரிக்கணும் அருள்"

"நான் என்ன அவங்க அப்பனா? சொல்ல வேண்டிய விதத்துலதான் சொல்லிருக்கேன் பார்ப்போம், விடு ஆம்பள புள்ளதான, பொண்ணாயிருந்தா பயப்படலாம்".

"அருள், இதுல என்னடா ஆம்பள பொம்பள? அவன் கொழந்தடா, உனக்கு நடந்திருந்தா? இல்ல நாளைக்கு உன் பையனுக்கு நடந்தா?"

"ஜீவா !!!!"என்று கத்தினான் அருள்.

"ஓரளவுக்குத்தான் செய்ய முடியும், இந்த டிராமா பேச்செல்லாம் எங்கிட்ட பேசாத, கண்ஷ்யாம் என் ஆஃபீஸர், அவன் சட்டையப் புடிச்சா வாழ்க்கைக்கும் நான் ஶ்ரீநகர் அருணாச்சல் பிரதேஷ் னு ஓட வேண்டியதுதான். நீயும் இதோட விட்று புரியுதா?" என்று உறுதியாகக் கூறிவிட்டு சென்றான்.

நியாயம்தான், நிஜத்தை நிரூபிக்கதான் சாட்சியங்கள் தேவைப்படுகின்றன. பொய்யும் வன்மமும் தானாக வேர்விட்டு தழைக்கும் வல்லமை பெற்றன.

 

ஜீவாவின் கண்களில் நஃபீஸ் தென்படவே இல்லை. ஜீவா இயலாமையில் தவித்தாள். அருள் அவ்விஷயம் பற்றி பேசுவதையே தவிர்த்தான். நஃபீஸ் உலகின் கண்களிலிருந்து ஓடி ஓளியத் துவங்கினான். அவமானத்திற்கும் தனிமைக்கும் தன்னை ஒப்புவித்துவிட்டான் நஃபீஸ்.

ஜீவா எடுக்கும் எந்த முடிவும் அருளின் வேலைக்கு நேரடியாக பாதகமாக முடிந்துவிடுமென்பதால், கண்ஷ்யாமிற்கு எதிராக எந்த புகாரும் அளிக்க முடியவில்லை. கண்ஷ்யாம் அப்பழுக்கற்ற அதிகாரியாக அறியப்பட்டிருந்தான். அயோக்கியர்கள் பூசிக் கொள்ளும் அதே யோக்கிய சாயம் அவனும் பூசியிருந்தான்.

 

கதிரின் முதல் பிறந்தநாள் விழாவை மிகவும் விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டு அனைத்து அலுவலக நண்பர்களையும், அதிகாரிகளையும் விருந்துக்கு அழைத்திருந்தான். முதன்முறையாக கண்ஷ்யாமை சந்தித்தாள் ஜீவா. ஒழுக்கசீலன் எனும் கையெழுத்திடப்பட்ட முகமும்,மிடுக்கும்.

"மிஸஸ். அருள்! தென்னியந்தியப் பெண்கள் என்றால் எனக்கு ரொம்ப புடிக்கும்,அறிவும் அழகும் சேர்ந்த காம்பினேஷன். என் பேட்ச் மேட்ஸ் நெறைய பேரு சவுத் இன்டியன்ஸ்தான். தைரியமான பெண்கள்" என்று அவன் பேசிய தோரணையைப் பார்த்தால் யாருமே ஒரு நொடி அவனை யோக்கியன் என்று நம்பத்தான் செய்வார்கள்.

ஜீவாவிற்கு அவன் பேச்சில் சிறிதும் கவனம் செல்லவில்லை. அவனைப்போன்ற பலரின் முகத்திரைக்குப் பின் ஒளிந்திருக்கும் அசிங்கங்கள் அவளுக்கு நிறைய பரிச்சயமாதலால்.

 

கதிருக்கு வாங்கியது போலவே நஃபீஸிற்கும் புத்தாடை வாங்கியிருந்தாள் ஜீவா. அதைக் கொடுப்பதற்காக அவனை அழைத்தாள். சோர்வில் ஆழ்ந்திருந்த நஃபீஸின் முகம் அவளை கலங்கச் செய்தது.

"ஏன்டா இப்படி இருக்க? ஜாலியா இருடா, இன்னுமா அந்தாளு அப்படி நடந்துக்குறான்? அருள் உங்கப்பாக்கிட்ட சொல்லிருக்காரு சரியா, நீ கவலப்படாத சரியா?" என்று அவனைப்பிடித்து உலுக்கினாள்.

நஃபீஸ் நிமிர்ந்து ஜீவாவின் கண்களுக்குள் பார்த்தான்.

கழுதைப்புலியிடம் சிக்கிக் கொண்ட முயல்குட்டியின் மிரட்சியைக் காண முடிந்தது அந்த கண்களில். ஜீவா ஒரு நொடி தன்னையே அந்த கண்மணிகளுக்குள் கண்டு தெளிந்தாள்.

 

அடுத்த நாள் பிற்பகல் கண்ஷ்யாமின் அறைக்கதவு திறந்ததும் அங்கு ஜீவா நிற்பது கண்டு அவன் சற்றுத் திடுக்கிட்டான்.

சட்டென அவனது மிடுக்கை எடுத்து சூடிக் கொண்டு,

"வாங்க மிஸஸ் அருள்" என்றவன் வேகமாக சிகரெட் பாக்கெட்டுகளை அப்புறப்படுத்தினான்.

ஜீவா உள்ளே வந்தாள்.

"யெஸ், சொல்லுங்க மிஸஸ் அருள்".

ஜீவா அவனை பார்த்தாள். பார்த்ததும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு யோக்கியக்களை அந்த முகத்தில் தவழ்ந்தது.

சிரித்தாள். அவனும் சிரித்தான்.

"என்ன ஆச்சு? எனி பிராப்ளம்? அருள் சார் வரலையா?"

"இல்ல அவர் வரல".

"ம்ம்ம் பிளீஸ் டெல் மீ?"

தயங்கியே நின்றிருந்த ஜீவாவின் மனக்கண்ணில் நஃபீஸின் முகம் தோன்றி மறையவும் சட்டென நிமிர்ந்த ஜீவா,

"கண்ஷ்யாம், உங்க பேன்ட்ட கழட்டுங்க" என்றாள்.

அவ்விடத்தில் சிறிது நேரம் மரண அமைதி நிலவியது.

அவனது தொண்டைக் குழியின் மேடு உயர்ந்து அடங்கியதை ஜீவா பார்த்தாள்.

"உங்க பேன்ட்ட கழட்டுங்க கண்ஷ்யாம், நஃபீஸ் இன்னிக்கு வரல, நான்தான் வந்திருக்கேன்" என்று தீர்க்கமாகக் கூறினாள் ஜீவா.

 

நஃபீஸ் அதற்குபின் கண்ஷ்யாமிடம் செல்ல வேண்டியிருக்கவில்லை. ஹாசிமிற்குக் கூட அதில் வருத்தம்தான். ஏன் திடிரென்று நஃபீஸை வர வேண்டாமென்று கூறினார் என்று சிந்திக்கலானார். அருள் வழக்கம்போல் அதைப்பற்றிய எந்த எண்ணமுமில்லாமல் இருந்தான். எல்லாம் இயல்பையொட்டியே இருந்தது. எதுவும் மாறவில்லை, யாருக்கும் எந்த பாதகமும் நேரவில்லை ஆனால் நஃபீஸ் அதற்குப்பின்  கண்ஷ்யாமிடம் செல்வது அடியோடு நின்றுவிட்டது.

 

நஃபீஸ் விடுமுறைக்கு சாரஹ்ன்பூர் செல்வதாகக் கூறினான். ஜீவா புன்னகையோடு தலையசைத்தாள்.

"போய்ட்டு வந்துரு சீக்கிரமா சரியா" என்றாள்.

"ஜீவா, என்ன பண்ணீங்க,ஏன் கண்ஷ்யாம் சார் என்னைய அதுக்கப்றம் வர வேண்டாம்னு சொல்லிட்டாரு?"

"ஒண்ணுமில்லடா அன்னைக்கு பாம்பு வந்தப்போ நீ எனக்காக என்ன செஞ்சியோ அதையேத்தான் நானும் செஞ்சேன். அன்னைக்கு நீ பாக்குறேங்குற பயத்துல பாம்பு வீட்டுக்குள்ள வரல, அதே மாதிரி நா பாத்துட்டிருக்குறேங்குற பயம் வந்ததால அவனும் அதுக்கு மேல உன்னைய தொல்லை பண்ணல, புரியுதா?"

நஃபீஸ் புரிந்தது போல் தலையசைத்தான். இம்முறை அவனே ஜீவாவின் அழைப்புக்காகக் காத்திராமல் தானாகவே அவள் நெஞ்சில் சாய்ந்து கொண்டான்.

அவனுடைய நிம்மதியில் ஜீவா தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

"உனக்காக ....ஓராயிரம் முறையும் முதல் முறையாக நஃபீஸ்" என்று மனதோடு கூறிக் கொண்டாள்.

 

 

 

 




 

ஷாலினி ப்ரியதர்ஷினி  ஆங்கில இலக்கியத்தையும் தமிழ் இலக்கியத்தையும் பாடமாகக்  கற்றவர். வாசிப்பு, பயணங்கள் மற்றும் மனிதர்கள் மேல் ஆர்வமுள்ளவர். வாழ்வின் பாடங்களை சக மனிதர்களிடமிருந்து மட்டுமே பெற முடியும் என்று திண்ணமாக நம்புகிறவர். 

shalinidarshini@gmail.com

 

Comments

Popular posts from this blog

மன்னார் பொழுதுகள் : சாபத்தின் வடுக்களை மீறி எழும் நட்பின் கதைகளும் குருதிக்கறைப் படிந்த மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்

நொண்டிக் கருப்பு

வெயிலுக்கு சுமதி என்று பெயர்.