தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.
அருவருப்பின்
வசீகர நிழல்.
2002 ம்
ஆண்டின் பிற்பகுதியில் மொழிபெயர்ப்பாளர் என்.நாகராஜனுடன் ஒரு உரையாடலின் போதுதான் முதல்
முறையாக தஞ்சை ப்ரகாஷ் என்ற பெயரைக் கேள்விப்பட்டேன். அப்பொழுது 17 வயது. ஜானகிராமன்,
எம்.விவெங்கட்ராம், நா.பிச்சமூர்த்தி, கு.பா.ரா என வாசிப்பின் வழியாக அதிகம் சேமித்திருந்தது
தஞ்சை நிலத்துக் கதைகளையே. தி.ஜாவின் எழுத்திலிருந்த எளிமையும்,கவித்துவமும் மெல்லிய
காமமும் அவரை ஆதர்ஷமென அழுத்தமாக நம்பச் செய்த பருவம். ப்ரகாஷின் கரமுண்டார் வீடு நாவலை
சிலாகித்துப் பேசிய அவர் ‘இதைப் படித்துவிட்டு வா, பிறகு பேசுவோம்.’ என இரண்டு மூன்று
அட்டை போட்டு பாதுகாத்த அந்தப் புத்தகத்தைக் கொடுத்தார். அந்த நாவலின் முதல் சில பக்கங்களிலேயே அதைத் தொடர்ந்து
வாசிக்க முடியாதபடி அனேக நெருடல்கள். முக்கியமாய்
அதன் மொழி. முழுக்கவும் தஞ்சை வட்டார பேச்சு வழக்கிலேயே நகரும் அந்நாவல் அதுவரையிலுமான
தஞ்சை எழுத்தாளர்களின் கதைமொழியிலிருந்து தன்னை முற்றிலுமாய்த் துண்டித்துக் கொண்டிருந்தது.
அந்நாவலை
நிதானமாக வாசிக்கத் துவங்கியபின், எழுத்தின் வழி முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் காத்து
வைத்திருந்த அறம் அவ்வளவையும் கேள்விக்குள்ளாக்குவதோடு அவற்றின் போலித்தனங்களை பட்டவர்த்தனமாய்
தோலுரித்துக் காட்டுவதாகவும் இருந்தது. தஞ்சை ப்ரகாஷின் எழுத்துக்கள் அந்தரங்கமாக எனக்கு
நெருக்கமானதுடன் இதையெல்லாம் எழுதக்கூடாதென்கிற தயக்கங்கள் எதையும் எனக்குள் வளரவிடாமல்
செய்தது. தி.ஜா.வின் யமுனாவின் மீதிருந்த காதல் விலகி ப்ரகாஷின் ஜம்னா பாயின் மீது
திரும்பியது. தஞ்சை ப்ரகாஷூம், மிஷன் தெரு ரம்யாவும் என ஒரு கதை எழுதுமளவிற்கு ப்ரகாஷம்,
தஞ்சாவூரும் எனக்கு நெருக்கம். ரம்யாவை நான் நேசிக்க அவள் ப்ரகாஷ் வசித்த அதே பகுதியில்
வாழ்ந்திருந்தாள் என்பதே போதுமானதாயிருந்தது.
நாவல்,
சிறுகதை, கட்டுரை, நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள் என எல்லா இலக்கிய வகமைக்குள்ளும்
இயங்கிய அந்த மகத்தான கலைஞனை இன்னும் கூட தமிழ்ச்சமூகம் பெரிய அளவில் கொண்டாடியிருக்கவில்லை.
சிற்றிதழ், பதிப்பகம், கதை சொல்லுதல், இலக்கியம் கூட்டம் நடத்துதல் என தன் வாழ்க்கை
முழுவதையும் இலக்கியத்தின் வசம் ஒப்படைத்துவிட்ட அவரின் பல்வேறான பரிமாணங்கள் மலைப்பானவை.
சங்கீதத்திலும், ஓவியத்திலும் தேர்ச்சியுண்டு. பதினான்கு மொழிகளைக் கற்றறரிந்த அவரின்
கதைமொழி மிக எளிமையானது. வாசிப்பவனை முதல் சில வரிகளிலேயே கதைகளுக்குள் இழுத்துச் சென்று
அவனையும் அக்கதையில் உலவும் ஒருவனாக மாற்றிவிடக்கூடிய வல்லமையும் வசீகரமும் கொண்டது.
பிரகாஷின் கதைகள் நாவல்கள் எல்லாமே தஞ்சையைத்தான்
பேசுகின்றன. அதற்கு முந்தைய தலைமுறை தஞ்சை எழுத்தாளர்களெல்லாம் அருவருப்பென ஒதுக்கி
மறைத்து வைத்திருந்த அந்நகரின் இருண்ட வீதிகளின் கொண்டாட்டங்களையும் வாழ்வையும் எந்தவிதமான
ஜிகினாக்களும் இரக்க உணர்ச்சிகளும் இல்லாமல் கவுச்சியோடு நமக்கு உணர்த்துகின்றன. அவரின்
எழுத்துக்களை வாசிக்கும் எந்தவொரு வாசகனும் அந்த எழுத்திலிருக்கும் அசாத்தியமான உண்மைக்கும்
ஜீவனுக்கும் மயங்காமல் இருக்க முடியாது. வாழ்க்கைப் பற்றின அந்த மனிதனின் நம்பிக்கைகள்,
மனிதர்களின் மீதான அசாத்தியமான ப்ரியம் இவற்றைதான் அவரின் கதைகளில் தொடர்ந்து காண முடிகிறது.
சார்லஸ்
புக்காவஸ்கிக்கு இணையான ஒரு எழுத்தாளன் பிரகாஷ். எதிர் அழகியலை அவர் அளவிற்கு தமிழில்
எழுதியவர்கள் இப்போதுவரை யாருமில்லை. புக்காவஸ்கியின் கதைகளில் இருக்கும் தீவிரமும்
அடர்த்தியும் பிரகாஷின் கதைகளில் நாவல்களில் நிரம்பிக் கிடக்கின்றன. “பசியின் இழிவே
அது தணிந்து போவதில் தான் இருக்கிறது. காமத்தின் அவலமே அது அடங்கிப் போவதில் தான் உதிர்ந்து
போகிறது. தேவி மகமாயீ – பசி வடிவாய் காமத்தின் வடிவாய் எப்போதும் அசுரனாய் எங்களுக்குள்ளேயே
இரு.” என கள்ளம் நாவலில் ஓரிடத்தில் எழுதுகிறார். தொடர்ந்து அவர் எழுத்துக்களில் பசிக்கும்
மனித வாழ்விற்கும் கலைக்குமான இடையறாத தொடர்பை எழுதியபடியே இருக்கிறார். மீனின் சிறகுகள்
நாவலிலும் பசி குறித்தான நுட்பமான உரையாடல்கள் வருகின்றன. “காமம் தான் சக்தி, பசிதான்
நம்மோட மூலம், பசிதான் நம்ம உற்சாகம், பசியிருந்தால் தான் படைப்பு. காமம் தான் நம்
மூல முதல். பசிதா நம் கல்வி, பசி தான் நம் எழுச்சி. காமம் தான் நம்மோட கலை. கலை எழும்பிப்
பிரகாசிக்க பசிதான் வேதம். பசிதான் மனுஷ்யனை எழுப்புன் கனல். பசியில்லை என்றால் மனிதனில்லை.
காமம் இல்லையென்றால் அவன் தொடக்கமேயில்லை.” புக்காவ்ஸ்கியின் கதைகளிலும் பசியும், காமமும்,
குடியும் தான் தொடர்ந்து பேசப்படுகிறது.
மீனின் சிறகுகள் நாவலின் கதை இதுதானென மையமாய்
ஒன்றைச் சொல்லிவிட முடியாது. இந்நாவல் தத்துவார்த்தமான முடிவைக் கொண்டிருக்கவில்லை.
யுக்தி ரீதியாக ப்ரீட்சார்த்த முயற்சிகளைக் கையாண்டிருக்கவில்லை. ஆனால் அதன் வழியே
சொல்லப்பட்டிருக்கும் வாழ்வும், அவ்வாழ்வின் நிஜமும் நம்மை சிதறடிக்கக்கூடியவை. இப்படியெல்லாம்
நடக்குமா ? என ரங்கமணியைப் பார்த்தும், இந்நாவலில் வரும் பிற பெண்களைப் பார்த்தும்
மிக எளிதில் ஒரு கேள்வியை எழுப்பிவிட முடியும். தாம் வசிக்கும் கண்ணாடி அறைக்கு வெளியே
நடக்கும் எல்லாமே பொய்யென திடமாக நம்பும் மனநிலையே பெரும்பாலான வாசக மனநிலை. புத்தகங்களின்
வழியாக மட்டுமே தனக்கு வெளியே இருக்கும் மனிதர்களை அணுகும் வாசகனுக்கு தன்னால் ஏற்றுக்
கொள்ள முடியாத, தனக்குத் தெரியாத எல்லாமே பொய்தான். இங்கு எல்லாவற்றையும் மறுதலிக்க,
விமர்சிக்க ஏதாவதொரு கோட்பாடு தயாராய் யாரோ ஒருவரால் சொல்லப்பட்டிருப்பது வசதியாய்ப்
போயிருப்பதில் விமர்சகர்களுக்கும் கொண்டாட்டம். ஆனால் ஒரு கதை சொல்லிக்கு இதில் எதுவும்
அக்கறையில்லை. அவனளவில் அவன் எழுத்து நிஜம். அதை நம்புவதும், கடந்து செல்வதும் வாசிப்பவனின்
விதி.
”எல்லாப்
பெண்களுமே பெண்கள் தான் என்று சொல்ல வருகிறவன் ரசனை கெட்டவன். அப்பறம் ஏன் எல்லோருமே
ஒன்றாய் உலகில் வளைய வரவில்லை. பெண்கள் எல்லாமே ஒன்றுதான் என்னும் அபிப்ராயம் பெரும்
பொய்தான். ஏமாற்றுதான்.” பெண்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் உலகமிருப்பதை ரங்கமணி அவர்களுக்குத்
தெரியாமல் அவதானிக்கிறான். ரங்கமணியின் வழியாய் நாமும். ஒரே ஸ்டோர் வீட்டிற்குள் வசிக்கும்
அந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் உணர்வு ரீதியாக தனித்தனி தீவுகள். யாரும் யாரோடும் பொருந்திப்
போவதில்லை. அவர்கள் ஒத்துப் போகிற ஒரே இடம் ரங்கமணி மட்டுந்தான். “ரங்கமணி தப்பு செஞ்சுட்டதா
என்ன சொல்ல? எல்லாரும் இதே தப்பெ செஞ்சுண்டு ஒளிஞ்சுகிட்டே தான் திரியிறா. ரங்கமணி
ஒளியலே விலகினான்.” ரங்கமணியை அப்பெண்கள் இத்தனை எளிதாகப் புரிந்து கொண்டுவிடுகிறார்கள்.
ஒரேயொரு
வீதியையும் அவ்வீதியைச் சார்ந்த சில மனிதர்களையும் மட்டுமே விலாவாரியாகப் பேசினாலும்
யாருடைய வாழ்வைக் குறித்தும் இந்நாவல் மையமாகப் பேசவில்லை. ரங்கமணியே கூட நாவலின் போக்கில்
வரும் ஒரு பாத்திரமாகத்தான் இருக்கிறான். அவன் முன்னிலைப்படுத்தப்படவில்லை. பெருமாள்
ஸ்டோரை வேண்டுமானால் மையமாகச் சொல்லலாம். ஏனெனில் அங்குதான் இந்தப் பெண்கள் தங்களின்
பருவத்தையும், அப்பருவத்தில் கிளர்ந்து முளைத்து எழுந்து அடங்கும் காமத்தையும் எதிர்கொள்கிறார்கள்.
ரங்கமணி பெருமாள் ஸ்டோரின் ரகசிய கதவுகளையும் சுவர்களையும் கடந்து செல்லத் துடிக்கிறவனாக
இருக்கிறான். அந்தக் குடும்பங்களின் பசியையும், கீழ்மையையும், காமத்தையும் துயரையும்
பெருமாள் ஸ்டோர் எந்த மாற்றமும் எதிர்வினையுமில்லாம் மெளன சாட்சியாய்ப் பார்த்துக்
கொண்டிருக்கிறது. சிலர் அதை கைவிட்டுப் போனாலும் எங்கெங்கோ அலைந்து திரிந்து வாழ வழியற்றபின்
அந்தப் பழைய தூசியடர்ந்த ஸ்டோர் வீட்டைத் தேடி வந்துவிடுகிறார்கள். யாருடைய தேவைகளையும்
பெருமாள் ஸ்டோர் மறுதலிக்கவில்லை.
பெண்கள்
இத்தனை எளிதாக சோரம் போவார்களா? ஒரு மனிதனுக்கு இத்தனை காமமும் பெண் பித்தும் மிகுந்து
கிடக்குமா? க்ருஷ்ணி அவனிடமிருந்து ஓடி ஒளிந்து பதினைந்து வருடங்கள் எண்ணைப் பிசக்கில்
கசங்கிப் போன பின்னும் கூட ஒடுங்கி நரைத்துப்போன அவளை விடாமல் துரத்திச் சென்று உறவு
கொள்ளும் ரங்கமணியின் மனம் முழுக்க காமத்தால் மட்டுமேதான் நிரம்பியிருக்கிறதா? ஒரு
சராசரி வாசகனுக்கு இதன் மீதெல்லாம் எழும்பும் அருவருப்பு அதீதமானதே. ஆனால் ரங்கமணியோ
அவன் காதலிக்கும் அந்த பெண்களோ காமத்திற்காக மட்டுமே சோரம் போனவர்கள் இல்லை. “இது அசிங்கமாம்
யோக்யர்களின் யோக்ய உலகம் சொல்கிறது.” என ஓரிடத்தில் வருவது போல சோரமெனப் பார்க்கப்படுவதெல்லாம்
வாசிப்பவனிடத்தில் தான். பெருமாள் ஸ்டோர்ஸில் எல்லாம் இயல்பாகவே நடக்கிறது. “ஆம்பளையானாலும்
பொம்பளையானாலும் இந்த லோகத்லே யாரும் ஏமாளியில்ல. ஏமாந்து போறது ரெண்டு பேரும் தான்.”
யார் மீன்கள்? மீன்களுக்கு சிறகுகளுண்டா? மீன்கள் பறக்குமா? இந்தக் கேள்விகளுக்கு திடமான
பதில்களெதையும் நாவல் வலிந்து முன்வைக்கவில்லை. வாசித்து முடித்தபின் அல்லது இந்நாவலை
மறந்து கடந்து சென்ற பின் வேறு ஏதேனுமொரு கனத்தில் யார் மீனென நாம் புரிந்து கொள்ளக்கூடும்.
ஏனெனில் மீன் நாமாகவும் இருக்கலாம். நம் சிறகுகளை நாம் உணர்ந்து கொள்ளமுடிகிறதொரு நாளில்
ரங்கமணியின் நினைவும் வரக்கூடும். சிலருக்கு ஒருநாளும் அப்படி நேர்ந்திட வாய்ப்பில்லை. அதனால் குறையொன்றுமில்லை.
ப்ரகாஷைக்
குறித்து அதிகம் பேசவும் எழுதவுமான ஒரு சூழல் தமிழில் கனிந்து வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
தமிழ் சமூகம் ஒரு கலைஞனின் வாழ்நாட்களில் அவனை அங்கீகரிப்பதை செய்யத் தகாத ஒன்றாகவே
பெரும்பாலும் பின்பற்றி வந்திருப்பதில் ஆச்சர்யமில்லை. ப்ரகாஷின் எழுத்து வெறும் பாலியலை
மட்டுமே முன்னிறுத்துகிற மலினமான ஒன்றென இப்பொழுதும் வாதாடுகிறவர்கள் இல்லாமலில்லை.
அவர்களின் அறம் வாழ்வின் இதைக் குறித்து மட்டுமே பேச வேண்டுமென்கிற நிர்ப்பந்தங்களுக்கு
கட்டுப்பட்டது. பாலியல் கதைகளை வாசிக்க ஒருவனுக்கு லட்சக்கணக்கான இணைய தளங்கள் இருக்கிற சூழலில் இவ்வளவு
காலம் தாண்டி ப்ரகாஷ் இன்று வாசிக்கப்படுவதற்கு அவர் எழுத்திலிருக்கும் அசலான வாழ்க்கையும்,
தீவிரமுமே காரணம். வாழ்வின் நறுமணங்களை மட்டுமே சுகித்துக் கொண்டு தன்னை அசிங்கங்களின்
மறு எல்லையில் நிறுத்திக் கொள்கிறவனுக்கு ப்ரகாஷின் எழுத்தைக் குறித்து விமர்சிக்க
என்ன அறுகதை இருக்கிறது?
பத்து
இளம் பெண்களை விட்டுவிட்டு அவர்களின் அம்மாவை நேசிக்கிறவனையும், மகளின் மீது காதல்
கொள்கிறவனையும், தன்னை விட பல வருடங்கள் இளையவளான ஒரு சிறுமியின் மீது கிழவன் மோகம்
கொள்வதையும் நாளிதழ்கள் கொச்சையான வெவ்வேறு தலைப்புகளில் தினமும் நமக்குத் தந்து கொண்டுதான்
இருக்கின்றன. ஆனால் அதற்குள்ளிருந்து கலாப்பூர்வமான அனுபவங்களை தனது கதைகளின் வழியாய்
அவரால் விட்டுச் சென்றிருக்க முடிகிறது. வாழ்வை பெரும் பரிசோதனை கூடமாக்கிக் கொண்ட
ஒருவனால் அன்றி வேறு யாரால் இதை எல்லாம் பேச முடிந்திருக்கும்.
முழுநேர
எழுத்தாளனாக வாழும் ஒருவன் இச்சமூகத்தின் முன்னால் எப்போதும் கோமாளியாகவே பார்க்கப்படுகிறான்.
“வாழ்வின் உண்மைகளை இந்தத் தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் அடுத்து வரும் யுகத்துக்கும்
எழுதி வைக்கிற வேலையை ரத்தம் கசியக்கசிய செய்து தீர்த்துக் கொண்டேயிருக்கிற ஒரேயொரு
பைத்தியக்கார உலுத்தன் தமிழ் எழுத்தாளன் மட்டுமே” என ஒரு கட்டுரையில் ப்ரகாஷ் எழுதியிருப்பதற்கு
மிகச் சிறந்த உதாரணம் அவர் தான். எப்போதும் உரையாடல்களில் பெரும் விருப்பம் கொண்டிருந்த
அவரின் படைப்புகள் தொடர்ந்து உரையாடல்களுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதே அவரின் உழைப்பிற்கு
செய்யும் சரியான மரியாதையாய் இருக்க முடியும்.
லஷ்மி
சரவணகுமார்
சென்னை.
Comments
Post a Comment