சொல்வனம் இணைய இதழில் கிருஷ்ண பிரபு எழுதி இருக்கும் மதிப்புரை.
உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
கிருஷ்ண பிரபு | இதழ் 81 | 28-01-2013| அச்சிடு
நீல வானின் திட்டுத் திட்டான வெண்மேகங்கள் அங்குமிங்கும் கொட்டிக் கிடப்பதைப் போலவே, நகரம் சார்ந்த மனித உறவுகள் தேவைக்கதிகமான இடைவெளியில் உருக்கொண்ட தனித் தீவுகள் போல் சிதறிக் கிடக்கின்றன. எவ்வளவிற்கு எவ்வளவு இருப்பிடங்கள் குறுகியதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு நேரெதிர் முரணாக சகமனித இடைவெளி என்பது சமுத்திரம் போல் நீள்கிறது. அருகில் இருந்தும் அன்னியர்களே என்ற மன நிலையை நகரங்கள் சுலபமாக ஏற்படுத்தி விடுகின்றன. ஆகவேதான் நகர மனிதர்கள் தம்மை நிலை நிறுத்திக்கொள்ள மனிதம் கடந்த எல்லைக்குச் செல்வதற்குக் கூட தயங்குவதே இல்லை. என்றாலும் வாழ்வின் கோரத்தை வெளிப்படுத்தும் அதே அயோக்கிய முகங்கள்தான் அன்பின் ஊற்றையும் சுரக்கின்றன. போலித்தனங்களால்தான் சமூக இருப்பானது நிலைக்கும் என்று வரும்பொழுது எமாற்றுக்காரர்களையும், ஜேப்படித் திருடர்களையும், போக்கிரிகளையும், ஊழல்வாதிகளையும், குண்டர்களையும், சமூக விரோதிகளையும் உலகமானது சந்தித்தே ஆக வேண்டும். எனினும் அவர்களும் சமூகத்தின் அங்கமாகத்தானே வாழ்ந்தாக வேண்டும்.
தமிழ் புனைவுலகில் சிறுநகர மற்றும் மாநகர வாழ்வு சார்ந்த அறியப்படாத முகங்களின் பதிவுகள் மிகக் குறைவு என்ற வாதம் பரவலாக இருக்கிறது. அதிலும் அடித்தட்டு, நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் என்ற பண்புக் கூறுகளை முன் வைத்து ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. சென்னை வாழ் நடுத்தர மக்களின் இருப்பு சார்ந்த பிரச்சனைகளையும், உளவியல் சிக்கல்களையும் ஆழமாக அலசி முன்வைக்கப்பட்ட ஏராளமான படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. என்றாலும், அடித்தட்டு மக்களின் அகச்சிக்கல் மற்றும் அறியாமை சார்ந்து பொலிவிழந்த முகங்களை முன்வைத்த பதிவுகள் மிகக் குறைவுதான். அந்த வகையில் “உப்பு நாய்கள்” நாவலானது மனதாலும், உடலாலும், இருப்பாலும் வாழ்வின் சுழலில் வதைபடும் எளிய மனிதர்களைப் பற்றி நிறையவே பேசுகிறது. விதியின் சாட்டை எப்படி சக மனிதர்களை பம்பரமாகச் சுழற்றிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது என்பதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கின்றது.
கதையும், கதைப்பின்னலும் ஒரே பொருள்பட இருப்பதைப் போல் தோன்றினாலும் உண்மையில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. எது இந்த நாவலை செதுக்கி இருக்கிறது என்று சொல்வதும் சற்றே சிரமமான வேலைதான். விரசம், யதார்த்தம், மரபு மீறல் என்று எல்லா வகையிலும் இதனை உட்படுத்திப் பார்க்க முடியும். நாவலில் கதையானது ஒரே சீராக வளர்ந்து நேர்க்கோட்டில் செல்லவில்லை. மாறாக துண்டிக்கப்பட்ட பல நிகழ்வுகளுக்குள் முன்பாதியில் பயணித்து, இரண்டாம் பாதியில் முக்கிய காரணங்கள் ஏதுமின்றி அதே போன்ற நிகழ்வுகளால் தொடர்ந்து பின்னப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்பவனான சம்பத் மற்றும் அவனுடைய சக கூட்டாளிகள் எல்லோரும் சென்னையில் வளர்ந்தவர்கள். செல்வி மற்றும் தவுடு ஆகியோரின் குடும்பம் ஜேப்படித் திருட்டில் மாட்டிய நிர்பந்தத்தின் காரணமாக தென் தமிழகத்திலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தவர்கள். ஆர்மீனியன் தேவாலய பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் இறைதேடலின் பொருட்டு பல்வேறு இடங்களிலிருந்து நகரத்திற்கு வந்து சேர்கிறார்கள். எல்லோரையும் நகரம் (சென்னை) என்ற புள்ளிதான் ஒன்றாக இணைக்கிறது.
மனித ஆசை எந்த நிலையிலும் தீர்வதேயில்லை என்பதுதான் நிஜம். மீசை அரும்பும் வயதில் சம்பத்திற்கு என்ன தேவைப்பட்டதோ அதே இச்சைதான் அவனுடைய அம்மாவிற்கும் தேவைப்படுகிறது. அதற்காக தன்னுடைய மகனின் நண்பனையே (மணி) சல்லாபிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். பாதிரியாருக்கும் துறவறம் மேற்கொண்ட இளம் கன்னியாஸ்திரிகள் இச்சையை தீர்த்துக்கொள்ள தேவைப்படுகிறார்கள். திருடிவிட்டு சிறைக்குச் சென்றபோது அறிமுகமாகும் முத்துலட்சுமி செல்வியை ஓரினச் சேர்க்கையில் புணரத் துடிக்கிறாள். சுய இன்பம் அனுபவிக்கும் கன்னியாஸ்திரி, பிச்சைக்காரிகளை மோகித்துத் திரியும் பாஸ்கர் என நாவலின் முதல் பாதியில் கட்டுப்பாடற்ற காமமும், சமூகக் குற்றங்களும் மைய நீரோட்டமாக பெருக்கெடுத்து ஓடுகின்றன. வாதையெனும் மூலத்திலிருந்துதான் அவையும் ஊற்றெடுக்கின்றன.
இரண்டாம் பாதியில் சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் ஆதம்மாவின் குடும்பம் மூலம் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் இன்றைய கடைநிலைத் தொழிலாளர்களின் இடர்பாடுகளை நாவல் பிரதானமாக முன்வைக்கிறது. குழந்தை தொழிலாளர்களுக்கான உபாதையை எதிர்கொள்ளும் ஆதம்மா - ஏதும் அறியா விடலையாகச் சுற்றிவருகிறாள். கிராமத்தின் கண்களைக் கொண்டு நகரத்தை அளக்க விழைகிறாள். அவளுடைய குறும்பாலும், அதன் மூலம் கிடைக்கும் உறவாலும் வாழ்வை சுவைக்கத் துவங்குகிறாள். கணவனுக்கு நிகராக உழைத்தாலும் ஆணாதிக்க மனோபாவத்தால் அவளுடைய அம்மா ஒடுக்கப்படுகிறாள். இவர்களுடைய பார்வையில்தான் நாவலும் நகர்கிறது. என்றாலும் இந்த குடும்பத்திற்கு அறிமுகமாகும் ஆர்த்தி கதாபாத்திரம் படைப்பின் இயல்பை மீறி ரொமாண்டிச வகைக்கு படைப்பைக் கொண்டு சென்றுவிடுகிறது. அத்தருணங்களில் ‘யதார்த்தத்தில் இது நடக்கக் கூடியதா?’ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆட்டிறைச்சிக்கு பதில் நாயின் மாமிசத்தை விற்பனை செய்யும் கோபால் கதாபாத்திரம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. ஆரம்பத்தில் சம்பத்துடன் குருவியாகச் சென்று கஞ்சா கடத்தினாலும், ‘அது நமக்கு சரிப்பட்டு வராத பெரிய வேலப்பா’ என்ற மனநிலையில் நாய்களை வேட்டையாடும் தொழிலை கையிலெடுக்கிறான். உணவு விடுதிகளுக்கு நாயின் இறைச்சியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை அவனுடைய மனம் எந்த சந்தேகங்களும் இன்றி ஏற்றுக்கொள்கின்றது. அதுபோலவே காவல் நிலையத்தின் விசாரணையின்போது செல்விக்கு அறிமுகமாகும் பாபு என்ற கதாபாத்திரமும் சிறு பகுதியாக வந்து சென்றாலும் நாவலின் சிறப்பான வளர்ச்சிக்கு உதவுகிறது.
மகேஷ் – ஷிவானி உறவு மிகுந்த கவனத்திற்கு உட்படுத்த வேண்டிய ஒன்று. முதல் சந்திப்பிலேயே, ஒரு பொது இடத்தில் இருவரும் உடலளவில் காம இச்சையுடன் உந்தப்படுகிறார்கள். அந்த நொடி முதல் கணவன் தரமுடியாத உடல் சுகத்தை மகேஷ் மூலம் ஷிவானி கண்டடைகிறாள். பெண்களைக் காம வேட்டையாடும் மகேஷ், அதன் பிறகான சந்திப்புகளில் ஷிவானியுடனான பாலியல் வேட்கைகளை செல்பேசியில் அசையும் படங்களாக எடுத்துவிடுகிறான். ஷிவானியைப் போலவே பலரையும் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறான். இது சம்பத்திற்கு தற்செயலாக தெரியவருகிறது. எனவே இக்கட்டிலிருந்து ஷிவானியைக் காப்பாற்ற விரும்புகிறான். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் சம்பத் – ஷிவானி உறவு பலப்படுகிறது.
கதையின் முதல் அத்தியாயத்தில் சக நண்பனிடம் தின இதழை சம்பத் பிடுங்குவது போல ஓர் இழை வருகிறது. அதைத் தவிர்த்து வேறெங்கும் அவனுடைய அறிவுப் பெருக்கம் சார்ந்த தகவல்கள் இல்லை. பதினேழு வயதில் கஞ்சா விற்கத் துவங்குகிறான். அதற்கு முன்னர் சில காலம் வட இந்தியரிடம் வேலை செய்கிறான். அங்குதான் ஷிவானியையும் சந்திக்கிறான். செல்பேசியில் பாடல்களை சேமிக்கக் கூட அடுத்தவர் உதவியை நாடுபவன், கணினியில் இருக்கும் ஆபாச வீடியோவை திடீரென எப்படி அழிக்கிறான் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதேபோல செல்வியின் உறவுப் பெண் ‘தவுடு’, முத்துலக்ஷ்மியின் வீட்டை எரித்துவிட்டு அறுபது பவுன் நகைகளைத் திருடிக்கொண்டு போன பிறகான முத்துலட்சுமியின் உளவியல் தன்மைகள் நாவலில் சரியாகக் கையாளப்படவில்லை. போலி மருத்துவரான முத்துலக்ஷ்மி விபச்சாரத் தரகராக திடீரென மாறுவதும் நாடகத் தன்மையை ஏற்படுத்துகிறது. அவசர நோக்கில் புத்தகத்தைக் கொண்டு வராமல், அதற்கான நேரம் கொடுத்து படைப்பைக் கொணரும்போது இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம். (நாவலாசிரியரின் முன்னுரையிலிருந்து இதனை உணர முடிகிறது.)
படைப்பாளிக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே நுட்பமாக காலத்தை உணர்த்துவதில்தான் இருக்கிறது. பல ஆண்டுகள் தொடரும் கால நகர்த்தலை, கதைக் களத்தின் உண்மையான தகவல்களைக் கொண்டு மறைமுகமான புரிதலை வாசகனுக்கு அவன் உணர்த்தியாக வேண்டும். ஆகவே சம்பவம் நடக்கும் இடங்களை சரியாகவும், நுட்பமாகவும் பயன்படுத்த வேண்டும். பழைய சிறைச்சாலை இடிக்கப்படுவதற்கு முன்பாகவும், ஸ்கைவாக் வர்த்தக வளாகம் திறக்கப்பட்ட பின்னரும் நடக்கும் கதை இது. ஆகவே இடைப்பட்ட காலகட்டத்தை மனதில் இருத்தித்தான் நாவலை அணுகவேண்டி இருக்கிறது. அடித்தட்டு மக்களின் செல்பேசி பயன்பாடும் காலத்தினை ஊர்ஜிதம் செய்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற வார்த்தை படைப்பின் முதல் அத்தியாயத்திலேயே தவறுதலாக இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனைத் தவிர்த்திருக்கலாம். குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறுசிறு குறைகள் இருந்தாலும் மொழியின் செழுமையான ஆளுகையானது நாவலை வேறு தளத்திற்கு நகர்த்துகிறது. இந்நாவலுக்காக லக்ஷ்மி சரவணகுமாருக்கு சென்ற ஆண்டின் சுஜாதா நினைவு விருது கிடைத்துள்ளது.
Comments
Post a Comment