தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியான நேர்காணல்.



“இந்திய அரசின் விருது கிடைத்ததைவிட,
அதைத் திருப்பி அனுப்பிய போதே நான் உற்சாகமடைந்தேன்!”
இளம் எழுத்தாளர் இலட்சுமி சரவணக்குமார் செவ்வி!

ஏறுதழுவல் உரிமையைப் பறித்த இந்திய அரசைக் கண்டித்து, தனக்கு அளிக்கப்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கான சாகித்திய அகாதெமியின் “யுவபுரஸ்கர்” விருதைத் திருப்பி அளித்து, எழுத்துலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இலட்சுமி சரவணக்குமார். தமிழர் கண்ணோட்டம் இதழுக்காக அவரை நேரில் சந்தித்தோம்! இனி அவருடன்…

த.க : வணக்கம் திரு. சரவணக்குமார்! முதலில் யுவபுரஸ்கார் விருதைத் திருப்பி அளித்தமைக்காக எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

குமார் : மிக்க நன்றி!

த.க : உங்களைப் பற்றிய சிறு அறிமுகம்?

குமார் : எனது சொந்த ஊர் மதுரை அருகிலுள்ள திருமங்கலம். 2006ஆம் ஆண்டிலிருந்து சென்னையில் வசக்கிறேன். பதினோறாம் வகுப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டவன் நான். இப்பொழுது, முழுநேர எழுத்தாளன்.  

த.க : எழுத்துலகில் மிகவும் மதிக்கத்தக்க சாகித்திய அகாதெமியின் இளம் எழுத்தாளர்  விருதை, உங்கள் “கானகன்” நாவல் பெற்றுள்ளது. சூழலியல் பாதுகாப்பு சார்ந்த அந்த நாவலுக்கான தாக்கம் உங்களுக்கு எங்கிருந்து ஏற்பட்டது?  

குமார் : 2006ஆம் ஆண்டு, உலகப் புகழ் பெற்ற டைம் ஏட்டின் அட்டைப்படத்தில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த இராமன் குட்டி என்பவரின் படம் வெளி வந்திருந்தது. அந்த இராமன் குட்டி யார் என்று அந்த ஏட்டில் 20 பக்க அளவில் கட்டுரைகள் வெளியிட்டிருந்தார்கள்.

பல வெளிநாட்டு மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த ஆய்வுக்காக கேரளாவின் மலைகளின் மீதெல்லாம் ஏறி ஆய்வு நடத்தியபோது, அவர்களுக்கு உதவியாக அவர்களுடன் சென்றவர்தான் அந்த இராமன் குட்டி என்ற பழங்குடியின இளைஞன்! மலையேறும் போது, மருத்துவர்கள் சோர்ந்திருக்க, இராமன்குட்டி மட்டும் எவ்வித சோர்வுமின்றி உற்சாகமாக வந்திருப்பதைக் கண்ட அந்த மருத்துவர்கள், அவரிடம் அது குறித்து வினா எழுப்பினர்.

உடனே இராமன்குட்டி, அங்கிருந்த ஒரு மூலிகைச் செடியைக் கையிலெடுத்து, இதைச் சாப்பிட்டால் சோர்வே வராது எனச் சொன்னவுடன் அந்த மருத்துவர்கள் வியப்படைந்தனர். அந்த மூலிகை குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அந்த மூலிகையை மருந்தாக்கவும் திட்டமிட்டனர். உடனடியாக, அந்த மூலிகைக்கு அமெரிக்காவில் காப்புரிமையும் பெற்றனர்.

அதன்பின், அந்த இராமன்குட்டியையும், அவரது பழங்குடியின மக்களையும் அந்த இடத்தைவிட்டு வெளியேற்றிவிட்டு, அந்த மூலிகையை அந்த மருத்துவர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் மூலம் ஏற்றுமதி செய்து விற்றனர். இராமன்குட்டி அகதியானான்!

இந்த நிகழ்வு எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது! 1960களில் கேரளாவின் வருசநாடு மலைப்பகுதில் பழங்குடியின மக்கள், கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து நடத்திய போர்க் குணமிக்கப் போராட்டங்களையும், காடுகளில் எங்களுக்கு பாதுகாவலராக வலம் வந்த தங்கப்பன் என்ற மனிதரையும், இராமன்குட்டியையும் கலந்துதான் “கானகன்” நாவல் உருவானது!

த.க : “கானகன்” நாவலுக்கு விருது அறிவித்த போது, உங்கள் மனநிலை என்ன? விருதைத் திருப்பி அளித்த போது உங்கள் மனநிலை என்ன?

குமார் : முதலில், எனக்கு இது தாமதமான விருது என்றே தோன்றியது. ஏனெனில், “கானகன்” எனது ஏழாவது நூல்! எனது முதல் நூலை 24ஆவது அகவையில் நான் எழுதினேன். பலமுறை எனது பெயர் விருதுக்கு பரிசீலனைக்குச் சென்றபோதும், பலவகை உள் அரசியல் காரணமாக எனக்கு அளிக்கப்படவில்லை. பல பேராசிரியர்களின் பரிந்துரையின் பேரில், ஆய்வுப்பட்ட மாணவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மட்டுமே, அவ்விருது அளிக்கப்பட்டு வந்தது.

அப்படி இருந்தும், பின்னர் எனது ஏழாவது நூலான “கனகனுக்கு”, அந்த விருதை அறிவித்த போது எனக்கு அது பெரிய அளவில் உற்சாகத்தைத் தரவில்லை. பொதுவாகவே எனக்கு விருதுகளுடன் தரப்படும் தொகையைத் தாண்டி, அவ்விருதுகளின் மீது பெரிய மதிப்பு ஏற்படவில்லை. ஏனெனில், இன்றைக்கு தமிழ்ச் சூழலில் ஒரு எழுத்தாளனுக்கு, அவருடைய எழுத்துக்குத் தரப்படும் காப்புத்தொகை என்பது மட்டும்தான் ஒரே வாழ்வாதாரம்! அதுவே விருதுகளின் போது தரப்படுவதாக நான் கருதுகிறேன்.

ஆனால், அதே விருதை நான் ஏறுதழுவல் உரிமையை மறுத்த இந்திய அரசுக்குத் திருப்பி அளித்த போது, நான் மிகுந்த உற்சாகத்திலிருந்தேன். ஏனெனில், விருது அறிவிக்கப்பட்டது எனக்காகவும், என் எழுத்துக்காகவும்! ஆனால், அதே விருதை நான் மக்களுக்காகத் திருப்பி அளித்த போது, எனக்கு மிகப்பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது!

த.க : எழுத்தாளர் கல்புர்க்கிக் கொலை, இசுலாமியர் மீதான தாக்குதல்கள், மாட்டுக்கறிக்குத் தடை என இந்துத்வா கும்பலின் சகிப்பின்மைச் செயல்பாடுகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் எழுத்தாளர்கள் விருதுகளைத் திருப்பி அளித்தனரே, அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

குமார் : மூத்த இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் தாங்கள் பெற்ற விருதுகளை மோடி  அரசிடம் திருப்பி அளித்தது, மிக முக்கியமான - வரவேற்கத்தக்கச் செயல்பாடு! அது போன்ற எதிர்ப்புகள் இன்றைக்கு அவசியம் தேவைப்படுகின்றன. வலுவாகவும் அவை தேவைப்படுகின்றன.
நான் வடநாட்டில் பல இடங்களுக்குச் சென்று, மக்களுடன் பழகியுள்ளேன். அவர்கள் ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டுமே நம்புகிறார்கள். முதலாளிகள் அவர்களது ஊடகங்கள் வழியே மோடி நல்லவர் என காட்டினால், அதை அப்படியே நம்புகின்ற மக்களை வடநாட்டில் நான் பல இடங்களில் சந்தித்திருக்கிறேன். இவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படாவிட்டால், இன்னும் ஒரு ஐந்து ஆண்டுக்குகூட மோடி ஆட்சி புரிய நேரிடும்!

இவ்வளவு ஏன், எனக்கு அறிவிக்கப்பட்ட விருதைப் பெற நான் தில்லிக்குச் சென்றபோது, எழுத்தளர்களிடம் இதே மனநிலையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். விருது பெறுபவர்களில் பெரும்பான்மையோர் மோடிக்கு ஆதரவாக கருத்து கொண்டவர்களாக இருந்தனர்.

வடநாட்டில் உள்ள பல எழுத்தாளர்கள், அவர்களுடைய தாய்மொழியான மைதிலி, அவந்தி போன்றவை அழிவதைப் பற்றிக் கவலைப்படாமல், இந்தி என்ற ஒற்றை மொழி அவர்கள் மீது திணிக்கப்படுவது அவர்களிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. “இந்தி” மொழியில் எழுதுவோருக்கே இந்திய அரசு அங்கீகாரம் அளித்து வரும் நிலையில், தங்கள் தாய் மொழியைவிட “இந்தி”யில் எழுதினால்தான் பெருமை என எழுத்தாளர்களே கருதுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், மோடி அரசுக்கு எதிராகவும், இந்துத்துவா எழுத்தாளர்களிடமிருந்து எழும் எதிர்ப்பு மிக முக்கியமானதாகும்!

த.க : தமிழ்நாட்டில் நிலைமை எப்படி இருக்கிறது?

குமார் : இந்தியாவிலேயே மோடி எதிர்ப்பில், தமிழ்நாடு முகாமையான இடத்தில் இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது, வடநாட்டில் பெரிய அளவில் எதிர்ப்புகள் இல்லை! அங்குள்ள மக்கள் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் அப்படியில்லை!

தமிழக மக்களிடம், தங்கள் உரிமைகள் குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இன்றைய திராவிடக் கட்சிகளின் சீரழிந்த போக்குகள் ஒருபுறம் இருந்தாலும், சாதிப் பட்டங்களைத் தவிர்த்தல் - அரசியல் விழிப்புணர்வோடு போராட்டக் களங்களுக்கு வருதல் போன்ற செயல்பாடுகள், திராவிட இயக்கத்தின் முற்போக்குக் கொள்கைகளால் நம் மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.


மனித உரிமைச் செயல்பாட்டாளர் பாலகோபால் அவர்கள், ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள அடிப்படை உரிமைகளை அனைவரும் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வார். அதை அனைத்து மக்களிடமும் நாம் பரவலாக்க வேண்டும்! தங்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இருந்தால், மக்கள் தானாகவே வீதிக்கு வருவார்கள்! தங்கள் உரிமைகளை மீட்பார்கள்! அதற்கு எழுத்துலகமும் துணை நிற்கும்!

Comments

Popular posts from this blog

மன்னார் பொழுதுகள் : சாபத்தின் வடுக்களை மீறி எழும் நட்பின் கதைகளும் குருதிக்கறைப் படிந்த மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்

நொண்டிக் கருப்பு

தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள் நாவலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை.