மகள் ஜீவாவுக்கு...
”எங்கு நம்பிக்கை இருக்கிறதோ, அங்கு
அற்புதங்கள் நிகழும்.”
-
ஒரு துண்டு வானம் சிறுகதையில் லஷ்மி சரவணகுமார்.
மகளே என் உதிரத்தின் ஒட்டுமொத்த உருவே. இந்த வாழ்வை அதன் கசப்புகளோடு நீ
புரிந்து கொள்ள உன் முன்னாலிருப்பது என் கதைகளும் நானும் தான். நான் உனக்கு
விட்டுச் செல்ல விரும்புவது சொற்களையல்ல நம்பிக்கைகளை. வாழ்வின் மீதான,
மனிதர்களின் மீதான அசாத்திய நம்பிக்கைகளையும் காதலையும் நமக்குள் ஆழமாக
விதைத்துக் கொள்ளத் துவங்குகிற போதுதான் உலகின் மீதான நமது அனுமானங்கள் மாறத்
துவங்குகின்றன. அதனால் தான் என் கதைகளின்
சொற்களில் இருந்தே உனக்கான இந்தக் கடிதத்தையும் துவங்க வேண்டியுள்ளது. உண்மையில்
நீ கருக்கொண்டது நான் பிறப்பதற்கும் முன்னால். உனக்கு தகப்பனாவதற்கென்றே
பிறப்பெடுத்தவன் நான். அதனால் தான் திருமணம் முடிந்து இத்தனை காலத்திற்குப்
பின்னும் உன் வருகையை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன். நான் பார்த்த உலகின்
குரூரங்கள் எதையும் நீ பார்த்துவிடக் கூடாதென்கிற கவனத்திலும் எச்சரிக்கையிலும்
உனக்கானதொரு உலகை உருவாக்கும் பிரயத்தனமே இந்த காத்திருப்பு. லட்சியங்களும்
நம்பிக்கைகளும் பெருகின ஒரு புதிய தலைமுறையை பார்த்துவிட்ட பூரிப்பு இன்று
பிறந்திருக்கிறது. தமது அடையாளங்களுக்காக எந்தவொரு எல்லையிலும் நின்று குரல்
கொடுக்கத் தயங்காத இந்த உணர்வெழுச்சியின் வழியாய் எமக்குக் கிட்டியிருப்பது வரலாறு
எம் பண்பாடுகளை இனி ஒரு போதும் மியூசியத்திற்குள் மட்டுமே வைத்து ஏமாற்றிக்
கொண்டிருக்க முடியாதென்கிற உண்மையைத் தான். காலம் நெருக்கடிகளின் வழியாக எம் மக்களுக்கு போராட்டத்தின் மகத்தான
உணர்வுகளை புரியவைத்திருக்கிறது.
எத்தனை ஆயிர வருட பாரம்பர்யம் நமக்கிருப்பதாய்
மார் தட்டிக் கொள்கிறோமோ அத்தனை ஆயிர வருடங்களின் துயரும் நம் முன்னால் இருந்து
வந்தபடியேதான் இருக்கிறது. மொழியின் மீதான காதலை வெளிப்படையாக பேசும் ஒருவனை இந்த
சமூகம் கேலிக்குரியவனாய்ப் பார்க்கிறது. நாம் தலைமுறை தோறும் பாதுகாப்பாய் காத்து
வந்திருப்பது ஜாதிய அடையாளங்களைத்தான். நமது கலாச்சாரம் அடையாளமென எம் இனம்
பெரிதும் நம்பிக்கிக் கொண்டிருப்பது ஜாதிய வழக்கங்களையும் அதைத் தொடர்ந்த
அயோக்கியத் தனங்களையும் தான். நானோ உன் தாயோ சார்ந்த சாதிக்காரர்கள் உன்னை தங்களின் அடையாளமாக உரிமை கொண்டாடலாம். ஆனால் நீ அவர்களில் ஒருவரில்லை.
உனக்கு சாதியில்லை. நீ எல்லோருக்குமானவள் எல்லா உயிருக்குமானவள். பிறப்பதற்கு
முன்பே இந்த பேருண்மை உனக்குள் ஊறிப் போகவே நாங்கள் விரும்புகிறோம். நீ தேவதையோ தேவதூதுவரோ அல்ல, மனுஷி
சாதாரண மனுஷி இந்த வாழ்வை அதன் சகல பிசிறுகளோடும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிற
மனுஷி. தேவதைகளோ கடவுள்களோ இங்கு யாரும் பாதுகாப்பாயில்லை. நீ எல்லோருக்காகவும்
வருத்தப்படு அவர்களில் ஒருத்தியாய் மாறிப் போ ஆனால் மென்மையானவளாய் இருக்க வேண்டாம்.
நமது எல்லா துயரையும் யாரோ ஒருவர் சரி செய்துவிடக் கூடுமென நம்பாதே. உனக்காக
போராடக் கூடிய வலு உன் ஒருத்திக்கு மட்டுமே உண்டு. ஏனெனில் உன் அம்மாவும்
அப்பாவும் அவமானங்களையும் துயரங்களையும் பார்த்து வளர்ந்தவர்கள். உன் தகப்பன் அனேக
மனிதர்களால் பொறுக்கியென பார்க்கப்பட்டவன். உண்மையில் அவர்களில் 99 சதவிகிதம்
பேர் அவனோடு ஒருமுறை கூட உரையாடி இருக்காதவர்கள்.
இந்த
உலகம் சுயநலமிக்கது, வஞ்சகம்
கொண்டது ஆனாலும் இதனோடு இணைந்து செல் மகளே துரோகத்திற்கு பழகு வன்முறையைத்
தெரிந்து கொள். எல்லாமே நடக்க சாத்தியம் தான் என எப்போதும் விழிப்பாக இரு... உன்
மீது வன்முறை செலுத்தப்படலாம். நீ துன்புறுத்தப் படலாம் எதன் பொருட்டும் நீ உனது
அடையாளத்தை இழந்து விடாதே. உயிரின் கடைசித் துளி இருக்கும் வரை உன்னைச் சேர்ந்த யாரோ சிலரின் மீது அக்கறை கொள் போராடு. ஏனெனில்
எங்களை சுயநலத்தோடு வாழச் சொல்லி பழக்கிய சமூகம் முட்டாள்களாகவும்
துணிச்சலற்றவர்களாகவும் பலகாலம் வைத்துவிட்டது. நீ ஒருபோதும் அப்படி இராதே. முதலில் எங்கள் முன்னோர்களிடமிருந்து அவர்கள்
நிலங்களைப் பிடுங்கிக் கொண்டு இந்த வேலைகளைச் செய்வது நாகரீகமற்றதென நம்ப
வைத்தார்கள். அவர்கள்
எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க, முதலில் தொலைக்காட்சிகளையும் பின்பு விளம்பரங்களையும்
கொண்டு வந்தார்கள். எல்லாமும் அதன் வழியாய் கற்றுக் கொள்ள முயன்று தொடர்ந்து போன இரண்டு
தலைமுறை ஆட்கள் திரும்பி வந்த போது எம் நிலம் மலடாகிப் போயிருந்தது. எம் நீர்வளம் முற்றாக
வியாபாரிகளுக்கானதாய் மாறியிருந்தது. எல்லாவற்றையும் விட முக்கியமாக எதற்காகவும் கேள்வி
கேட்பது முட்டாள்த்தனமென எல்லோருக்குள்ளும் விதைக்கப்பட்டிருந்ததுதான். சொந்த ஊரில்
வாழ்வதை அவமானமாக கருதின நாளில் தான் எம்மிடமிருந்த கடைசி வளமான எமது விலங்குகளும்
பறிக்கப்பட்டன. பூமி என்பது வெறுமனே மனிதனுக்கானது மட்டுமல்ல ஜீவா, ஒரு நிலத்தில் வாழும்
மரம் செடி கொடிகளும் விலங்குகளும் அவற்றோடு சேர்ந்த மனித வாழ்க்கையும் தான். மனிதன்
தனக்காகவென்று எதையும் தனித்து உரிமை கொண்டாடுவது முட்டாள்த்தனம். சர்வ நிச்சயமாய் சொல்ல முடிவது ஒன்றுதான் நீ வரப்போகும் இந்த சமூகம்
உனக்கு கொஞ்சமும் பாதுகாப்பானதில்லை. அதனால் எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கும் வலுவோடு
எப்போதுமிரு.
இந்தப் போராட்டம் துவங்கிய நாளில் எங்களில் யாருக்கும் நம்பிக்கையில்லை,
இது தீர்வை நோக்கிய தவமென்று. முதலில் அன்றைய தினத்தை சந்தேகத்திற்கிடமின்றி வெல்ல
வேண்டுமென இருந்த அக்கறை அடுத்த நாளில் திரண்டு வந்த பெருங்கூட்டம் கண்டதும்
தீர்வு மட்டுமே இறுதி லட்சியம் என்கிற உறுதியை விதைத்தது. நம்பிக்கை தான் எந்தப்
போராட்டத்திற்குமான மாபெரும் விதை. அதை அளவுக்கதிகமாய் ஒவ்வொருவரும்
பிரதிபலித்தனர். யாரையெல்லாம் மொன்னையென இத்தனை காலம் அறிவுசார் சமூகம் கேலி
செய்தது அந்த மொன்னைகள் தான் இந்த ஒரு வார காலப் போராட்டத்தின் நாயகர்கள். வழக்கம்
போல் தனது வீட்டின் குளிர்சாதன அறைக்குள்ளிருந்தபடி போராட்டத்தில் இணையத்தின் வழி
கலந்து கொண்ட அறிவுசார் சமூகம் இதிலும் மொன்னைத் தனம் குறித்த நீண்ட ஆய்வுகளையே
செய்து கொண்டிருந்தது. எப்போதும் மக்களின் உணர்வுகளுக்கு எதிர்த் திசையில்
பயணிப்பது மட்டுமே அறிவாளித்தனமென நம்பும் எழுத்தாளனை இந்த சமூகத்தின் அடையாளமாய்
எப்படி ஒரு சாதாரண மனிதன் ஏற்றுக் கொள்வான். எழுத்தாளன் இச்சமூகத்தின் ஓர் அங்கம்,
அதன் எல்லா சிடுக்குகளுக்குள்ளும் தன்னை புகுத்திக் கொண்டு பயணிப்பதும் அதன் சாதக
பாதங்களை பிரதிபலிப்பதும் அவன் கடமை. எழுதுவதோடு எல்லாம் முடிந்ததென்பதை
நம்புகிறவனில்லை நான். முதல் இரண்டு நாட்கள் கடற்கரையில் அந்த பெருந்திரளைப்
பார்த்த உந்துதல் தான் என்னை முழுமையக இந்த போராட்டத்திற்குள் கொண்டு சென்றது. என்
வாழ்நாளின் மிக முக்கியமானதொரு தருணம் அதுவென்பதை நான் புரிந்து கொண்டிருந்தேன்.
உரிமைகளைத் தெரிந்து கொள்வதும் அதற்காகப் போராடுவதும் தான் இந்த நூற்றாண்டிற்கான
ஆகப்பெரிய தேவை. அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ எம் மக்கள் புரிந்து
கொண்டிருக்கிறார்கள். தன் எழுத்துக்கான அங்கீகாரங்கள் ஒரு எழுத்தாளனுக்கு
முக்கியமானவை தான், ஆனால் இந்த சமூகத்தின் நலனுக்கு முன்னால் அதுவொன்றும் துறக்கவே
கூடாத ஒன்றல்ல. சின்னதொரு தயக்கம் கூட இல்லாமல் முழு கொண்டாட்ட மனநிலையில் தான்
நண்பர்களோடு சென்று சாகித்ய அகதெமி விருதைத் திருப்பித் தந்தோம். ஏதோவொரு வகையில்
இந்த போராட்ட காலத்தில் எனக்குமொரு பங்கிருக்கிறதென்கிற நிறைவு தான் என்
ஒட்டுமொத்த வாழ்நாளுக்குமான சந்தோசம் ஜீவா. என் வாழ்வின் கொண்ட்டாட்டமான நாளது.
நீ உன் மகளுக்கு எழுதப் போகுமொரு அந்தக் கடிதம் அனேகமாக இந்த
நூற்றாண்டின் இறுதியில் நிகழலாம். அன்று நீ
பிறப்பதற்கு முந்தைய வரலாற்றில் எனது இந்த காலகட்டத்தை இப்படியாக
குறிப்பிடு...
" உனக்குத் தெரியுமா மகளே, நம்பிக்கையற்று நொறுங்கிக் கிடந்த ஒரு சமூகத்திற்கு மூளையும் முதுகெலும்பும் உள்ளதென்பதை ஒரு இளம் தலைமுறை மொத்த உலகிற்குமாய் அறிவித்தது. என் அப்பனும் அம்மையும் எனக்களித்தது அந்த முதுகெலும்பு மிக்க உணர்வுகளையும் ரெளத்திரத்தின் முகவாய்க் கட்டையையும் தான். இதையே தான் நான் உனக்குமாக சேமித்தேன். பதின் பருவம் தாண்டுகையில் சாம்பல் நிறமாய் இருப்பதற்காக பதட்டமோ கவலையோ அடையாதே, அது நம் முன்னோர்களின் போராட்ட அத்தாட்சி. அது அவர்களின் பிரத்யேக முகமல்ல. ஒரு தலைமுறை சாட்சி. மறக்காமல் இதை உன் மகளுக்கும் பரிசளி... நாம் சிந்திக்கவும் கோவப்படவும் பழகிய மனிதர்களாய் வாழ்வது மட்டுந்தான் என்றென்றைக்குமாய் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன்.” உன் மகள் தனது மகளுக்கும் அவள் அடுத்தடுத்த தலைமுறைக்குமான கதையாய் எங்களின் வாழ்வைச் சொல்லியபடி இருக்கட்டும். எப்போதெல்லாம் சக மனிதர்களின் மீது நம்பிக்கை இழந்து போகிறீர்களோ அப்போதெல்லாம் ஒற்றுமையின், வலிமையின், கூட்டு நடவடிக்கையின் அடையாளமாய் இந்த சம்பவங்கள் உங்களுக்கு நினைவுக்கு வந்தபடியே இருக்கட்டும்.
" உனக்குத் தெரியுமா மகளே, நம்பிக்கையற்று நொறுங்கிக் கிடந்த ஒரு சமூகத்திற்கு மூளையும் முதுகெலும்பும் உள்ளதென்பதை ஒரு இளம் தலைமுறை மொத்த உலகிற்குமாய் அறிவித்தது. என் அப்பனும் அம்மையும் எனக்களித்தது அந்த முதுகெலும்பு மிக்க உணர்வுகளையும் ரெளத்திரத்தின் முகவாய்க் கட்டையையும் தான். இதையே தான் நான் உனக்குமாக சேமித்தேன். பதின் பருவம் தாண்டுகையில் சாம்பல் நிறமாய் இருப்பதற்காக பதட்டமோ கவலையோ அடையாதே, அது நம் முன்னோர்களின் போராட்ட அத்தாட்சி. அது அவர்களின் பிரத்யேக முகமல்ல. ஒரு தலைமுறை சாட்சி. மறக்காமல் இதை உன் மகளுக்கும் பரிசளி... நாம் சிந்திக்கவும் கோவப்படவும் பழகிய மனிதர்களாய் வாழ்வது மட்டுந்தான் என்றென்றைக்குமாய் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன்.” உன் மகள் தனது மகளுக்கும் அவள் அடுத்தடுத்த தலைமுறைக்குமான கதையாய் எங்களின் வாழ்வைச் சொல்லியபடி இருக்கட்டும். எப்போதெல்லாம் சக மனிதர்களின் மீது நம்பிக்கை இழந்து போகிறீர்களோ அப்போதெல்லாம் ஒற்றுமையின், வலிமையின், கூட்டு நடவடிக்கையின் அடையாளமாய் இந்த சம்பவங்கள் உங்களுக்கு நினைவுக்கு வந்தபடியே இருக்கட்டும்.
அன்பிற்கு லட்சியங்கள் இல்லை ஜீவா, அது புரண்டோடும் வெள்ளம் போல் கரை அணையென எந்த
எல்லைக்குள்ளும் ஒளித்துக் கொள்ள முடியாத நதி, மூர்க்கமானதாயும் இலக்கற்றதாயும் இருக்குமதற்கு
எக்காலத்திலும் வரம்புகள் இல்லை. இந்த ஜீவிதத்தின் கடைசி நாள் வரை
ப்ரியத்திற்குரியவர்களென நாம் நேசிக்கும் ஒவ்வொருவருக்குமாகவே நாம் இருக்க வேண்டும். நான் உனக்கு சேமித்து வைப்பது கொஞ்சம்
நம்பிக்கைகளையும் என் மீது எனக்கானவர்கள் காட்டும் அன்பையும் தான். நான் இப்படி
இலக்கற்று நேசிக்க கற்றுக் கொள்ள முப்பது வருடங்கள் அவகாசம் தேவைப்பட்டது. உனக்கு
அந்த தாமதம் தேவைப்படாது. இந்த சமூகத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேசி,
உன்னை உச்சகட்டமாய் நேசிப்பதின் ஆகச்சிறந்த வழி அதுவொன்றுதான். வாழ்க்கை சக
மனிதர்களின் மீதான காதலில் இருந்துதான் மகிழ்ச்சிகரமானதாய் மாறுகிறது. ஆக
போரட்டமென்பது மக்களையும் நமது அடையாளங்களையும் நேசிப்பதில் இருந்துதான்
துவங்குகிறது. எல்லாவற்றையும் இனி மியூசியத்தில் பாதுகாப்பாய் வைத்துப் பார்த்துக்
கொள்ளலாமென விட்டுக் கொடுத்து விடாதீர்கள் இந்த மண்ணின் ஒவ்வொரு மரமும் செடியும்
கொடியும் விலங்குகளும் நம் சொத்து, அதை யாருக்காகவும் எந்தக் காலத்திலும் விட்டுக்
கொடுத்துவிடாதீர்கள். வரலாறு நமக்கு சொல்லும் கலாச்சாரம் இவற்றோடு வாழ்வதுதான்,
இவற்றை அழித்துவிட்டு அல்ல. நமது மொழியும் மண்ணுமே நம் அடையாளம், அதுவே நம்
ஆதித்தாய்.
முத்தங்களுடன்
உன் அம்மையும் அப்பனும்.
உன் அம்மையும் அப்பனும்.
விருதைத்
திருப்பியளிக்கையில் தந்த அந்த கடிதத்தையும் இணைத்துள்ளேன். என் உயிலின் முதல் பக்கம்
இதுவே ஜீவா.
வணக்கம்
இந்த மொழி என் அடையாளம். இதை நேசிக்கிற ஒவ்வொருவரும் என் உறவுகளே. நீண்ட பல வருடங்களாய் தமிழ் சமூகம் தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவது தொடர்ந்தபடிதான் இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பிரச்சனைகளுக்காக சிறு சிறு குழுக்களாக எம் மக்கள் போராடினாலும் அந்தப் போராட்டங்கள் வெவ்வேறு அரசியல் காரணங்களால் மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றன. இன்று மொத்த தமிழ் சமூகமும் திரண்டு தம் உரிமைக்காக குரல் கொடுப்பது தற்செயலானதாய் நடந்தது அல்ல. இது வெறுமனே ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கான போராட்டமும் அல்ல. இந்த எழுச்சி தீபத்தில் தங்களை நெருப்பாக்கி எம் சமூகத்தை ஒளிர்விக்கத் துடிக்கும் இளைய சமுதாயத்தின் அயராத போராட்டங்கள் மகத்தானவை. நாங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறோம் என்பதன் அழுத்தத்தில் இன்று இவர்களோடு ஒரு எளிய மனிதனாகவே இந்த போராட்டத்தில் கைகோர்க்கிறேன்.
இந்திய பெருந்தேசம் முழுக்க பல்லாயிரம் கோடிகள் கடன் வாங்கிய பெருமுதலாளிகள்
யாரும் இதுவரை தண்டிக்கப்பட்டதாகவோ தற்கொலை செய்துகொண்டதாகவோ நமக்கு எந்த செய்திகளுமில்லை.
ஆனால் ஒவ்வொரு நாளும் இங்கே இந்த தேசத்திற்கு உணவளிக்கும் விவசாயிகள் ஏதோவொரு கிராமத்தின்
வறண்ட மணல் மேட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். எம் மாநிலத்தில் பசியால்
வறுமையால் தற்கொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குரல் நான். அவர்களின் உழைப்பில் பசியாறியவன்.
அந்த வறுமையும் துக்கமும் என்னையும் சேர்ந்ததே. எம் விவசாய உறவுகளைக் காக்க எந்தவித
நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராய் இல்லாத மத்திய அரசு எப்போதும் போல் பெரு வணிக நிறுவனங்களின்
வரவிலும் வளர்ச்சியிலும் மட்டுமே கவனம் கொண்டிருப்பது
கண்டிக்கத்தக்கது.
ஒரு எழுத்தாளனுக்கு தம் சமூகத்தின் கலாச்சார மற்றும் சமூக செயல்பாடுகளில்
எப்போதும் கூடுதல் கவனமிருக்க வேண்டுமென நம்புகிறவன் நான். இன்று எங்கள் உரிமைகளுக்காக
களம் கண்டிருக்கும் எம் சகோதரர்களோடு உத்வேகத்துடன் போராட்டத்தின் இன்னொரு வடிவமாய்
இணைந்து கொள்ளவே மத்திய அரசின் சாகித்ய அகதெமியால் எனக்கு வழங்கப்பட்ட யுவபுரஸ்கார்
விருதை நான் திருப்பி அளிக்கிறேன். இந்த விருது என் பத்து வருட உழைப்பிற்கு பிறகு கிடைத்தது
என்பதால் இதன் மதிப்பை மற்ற எல்லோரையும் விட
நான் நன்றாகவே அறிவேன். எனினும் இந்த சமயத்தில் இந்த விருதை விடவும் எம்மைச் சூழ்ந்திருக்கும்
பிரச்சனைகளுக்குத் தீர்வே முக்கியம். இதை ஒரு அழைப்பாக தேசம் முழுக்க மக்களுக்காக குரல்
குடுக்கும் எம் எழுத்தாள உறவுகளுக்கு அனுப்புகிறேன். இந்த முறையாவது எங்களோடு இணைந்து
குரல் கொடுங்கள். எந்த மாநிலத்தில் தனியொரு மனிதன் துன்புறுத்தப்பட்டாலும் அதுகுறித்து
அக்கறை கொள்கிறவர்களாகவும் அவர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கிறவர்களாகவும் நாங்கள்
எப்போதும் இருந்து வருகிறோம். இந்தமுறை எங்களுக்காக தேசிய அளவிலான எழுத்தாளர்களும்
ஊடகங்களும் கொஞ்சம் இறங்கி வாருங்கள்.
தயவு செய்து இதை வெறுமனே ஜல்லிக்கட்டிற்கு எதிரான ஒரு போராட்டமாக மட்டும்
கருதிவிட வேண்டாம். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கார்ப்ரேட் மயமாகி வரும் ஒரு தேசத்தை
காக்க விழித்தெழ வேண்டுமென்றுதான் உங்கள் எல்லோரையும் அழைக்கிறோம். இந்தியா மாதிரியான
ஒரு பன்மை கலாச்சாரம் நிறைந்த சமூகத்தில் தனித்துவமிக்க இனக்குழுக்களின் அடையாளங்கள்
முக்கியமானவை.
ஆக, ஜல்லிக்கட்டை நடத்த உடனே அனுமதியளிக்க அவசர சட்டம் இயற்றவும், AwBI மற்றும் பீட்டாவை தடை செய்யவும் வலியுறுத்துவதோடு வஞ்சிக்கப்பட்ட எம் விவசாயிகளுக்கான நலனை உடனே மத்திய அரசு கவனத்தில் எடுக்க வேண்டுமென்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.இந்த மாபெரும் போராட்டம் அடுத்த தலைமுறையிடமிருந்து நல்ல தலைவர்களை உருவாக்கும் என்கிற சின்னதொரு நம்பிக்கை இருக்கிறது. இந்த விருதை திருப்பி அளிப்பதில் உண்மையில் வாங்கிய போது இருந்ததை விடவும் அதிகமான பெருமிதத்தையே உணர்கிறேன்.
நன்றி
ஆக, ஜல்லிக்கட்டை நடத்த உடனே அனுமதியளிக்க அவசர சட்டம் இயற்றவும், AwBI மற்றும் பீட்டாவை தடை செய்யவும் வலியுறுத்துவதோடு வஞ்சிக்கப்பட்ட எம் விவசாயிகளுக்கான நலனை உடனே மத்திய அரசு கவனத்தில் எடுக்க வேண்டுமென்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.இந்த மாபெரும் போராட்டம் அடுத்த தலைமுறையிடமிருந்து நல்ல தலைவர்களை உருவாக்கும் என்கிற சின்னதொரு நம்பிக்கை இருக்கிறது. இந்த விருதை திருப்பி அளிப்பதில் உண்மையில் வாங்கிய போது இருந்ததை விடவும் அதிகமான பெருமிதத்தையே உணர்கிறேன்.
நன்றி
Comments
Post a Comment