அருவருப்பின் வசீகர நிழல். 2002 ம் ஆண்டின் பிற்பகுதியில் மொழிபெயர்ப்பாளர் என்.நாகராஜனுடன் ஒரு உரையாடலின் போதுதான் முதல் முறையாக தஞ்சை ப்ரகாஷ் என்ற பெயரைக் கேள்விப்பட்டேன். அப்பொழுது 17 வயது. ஜானகிராமன், எம்.விவெங்கட்ராம், நா.பிச்சமூர்த்தி, கு.பா.ரா என வாசிப்பின் வழியாக அதிகம் சேமித்திருந்தது தஞ்சை நிலத்துக் கதைகளையே. தி.ஜாவின் எழுத்திலிருந்த எளிமையும்,கவித்துவமும் மெல்லிய காமமும் அவரை ஆதர்ஷமென அழுத்தமாக நம்பச் செய்த பருவம். ப்ரகாஷின் கரமுண்டார் வீடு நாவலை சிலாகித்துப் பேசிய அவர் ‘இதைப் படித்துவிட்டு வா, பிறகு பேசுவோம்.’ என இரண்டு மூன்று அட்டை போட்டு பாதுகாத்த அந்தப் புத்தகத்தைக் கொடுத்தார். அந்த நாவலின் முதல் சில பக்கங்களிலேயே அதைத் தொடர்ந்து வாசிக்க முடியாதபடி அனேக நெருடல்கள். முக்கியமாய் அதன் மொழி. முழுக்கவும் தஞ்சை வட்டார பேச்சு வழக்கிலேயே நகரும் அந்நாவல் அதுவரையிலுமான தஞ்சை எழுத்தாளர்களின் கதைமொழியிலிருந்து தன்னை முற்றிலுமாய்த் துண்டித்துக் கொண்டிருந்தது. அந்நாவலை நிதானமாக வாசிக்கத் துவங்கியபின், எழுத்தின் வழி முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் காத்து வைத்திருந்த அறம் அ...