உப்பு நாய்கள் நாவலின் முதல் பகுதி....

1 . கண்ணாடி ரயில் ...

                       
            வேறு எந்த பெருநகரிலும்  இல்லாததொரு தனித்துவமிக்க ரயில்நிலையங்கள் இந்த ஊரிலிருக்கின்றன. கண்ணாடித்தாள்கள் கொண்டு சுற்றப்பட்ட அந்த ரயில்நிலையத்தின் நடைபாதையில் பகல் வேளைகளில் முழங்கால்வரை தொங்கும் ரெக்ஸின் பேக்குகளும், உடல் இறுக்கி பிதுங்கிக் கிடக்கும் ஜீன்ஸுகளுமணிந்த யுவதிகள், மென்னுடல் கொண்ட இளைஞர்களுடன்  முழுநாளும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களை பொருட்படுத்தியும் பொருட்படுத்தாமலும் கடந்துபோகிறவர்களுக்கென்றே  பிளாஸ்டிக் தாள்களில் அடைக்கப்பட்ட கேக்குகள்,தண்ணீர் பாட்டில்கள் மடக்கி வாசிக்க ஏதுவான வார சஞ்சிகைகளென வாங்குதற்கு கொஞ்சம் யூஸ் அண்ட் த்ரோ சமாச்சாரங்களும் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ரயிகள் வந்துபோகும் இந்த நிறுத்தத்தின் ஒரு புறத்தில் செய்ண்ட் ஜார்ஜ் கோட்டையும் இன்னொரு புறத்தில் பழைய மத்திய சிறைச்சாலையும் அரணாக நிற்கின்றன. ரயில் நிலையத்தினுள் சின்ன சின்னதாய்க் கடைகள் இப்பொழுது நிறைய வந்திருப்பதுடன் வெளியே வாசலையொட்டியே நிறைய பழக்கடைகளுமிருக்கின்றன.  முன்பு தண்ணீர் பாக்கெட் விற்றுக்கொண்டிருந்தவர்கள் இப்பொழுது  தண்ணீரை பாட்டிலில் விற்கிறார்கள். கேத்தலில் முக்கால்வாசி தண்ணீர் கலந்த டீ விற்றுக்கொண்டிருந்தவர்கள்தான் மெஷின் காஃபி போட்டிருந்தார்கள். சமோசா   இன்னும் அதிகமாய் காய்ந்து கிடக்கிறது. பிச்சைக்கார்ர்கள் எல்லா ஏரியாவிற்கும் போய்வந்து கொண்டிருந்தார்கள். இந்த இடத்தில் மட்டும்தான் நல்ல கலெக்‌ஷன் என்பதெல்லாம் பழைய கதை. இந்த ஸ்டேஷனில் சராசரியாக நாளொன்றுக்கு முப்பதிலிருந்து நாற்பது பிச்சைக்காரர்களைப் பார்க்க முடிகிறது. ஒராளுக்கு சந்தேகமில்லாமல் ஒருநாள் வருமானம் முந்நூறிலிருந்து முந்நூற்றி ஐம்பது வரை இருக்கிறது. ஆக நாற்பது முந்நூற்றி ஐம்பது?...விவகாரமில்லாத தொழில்.
                பதினேழு வயதில் முதல் முறையாக சம்பத் பொட்டலம் விற்க வந்தது இந்த ஸ்டேசனில்தான். அதற்கு முன்பு நிறையபேர் அவனைப்போலவே அங்கு தொழில் செய்திருந்தனர் என்பதன் அடையாளமாய் இவனைத் தெரிந்து கொண்டு பொட்டலம் வாங்குவதில் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான சிரமங்களும் இருந்திருக்கவில்லை. அவனுக்கு இந்நகரின் எல்லா மூலைகளும் பழக்கப்பட்டுப் போயிருந்தன, அவனுடல் அலைச்சல்களாலும் வெக்கையினாலும் வழுவழுப்பான கருமை எய்தியிருந்ததுடன் தலைமுடி சுருள் சுருளாய் பார்ப்பதற்கு ஒரு பிரேசிலியனைப் போலிருந்தான். ஒருவேளை இந்த தோற்றமேகூட அவனை எளிதில் அடையாளங் கண்டுகொள்ள மற்றவர்களுக்கு உதவியிருக்கலாம்.  இருளும் அழுக்கும் நிரம்பிக் கிடக்கும் இந்நகரின் பெரும்பாலான இடங்களில் இவன் வியாபாரம் விரவிக்கிடந்ததுடன் இவனைப்போலவே இன்னும் நிறையபேர் அதில் சேர்ந்தும் இருந்தனர். தொழிலுக்கு வருவதற்கு முன்புவரையிலும் இவன் ஏரியாவிலிருக்கும் சேட் வீட்டில்தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.  நடை பழகும் இளங் கழுதையொன்றின் மேல் அளவுக்கதிகமான பாரம் ஏற்றுவதுபோல் இவனுக்கு வேலைகளிருக்கும். தண்டையார்பேட்டையிலிருந்து சவுக்கார்பேட்டையிலிருக்கும் கடைக்கு வர அதிகபட்சம் பத்து நிமிடம் போதும். ஆனாலும் சேட்டின் பிள்ளைகளை பள்ளிக்கூடம் கூட்டிப்போவதற்கும் வீட்டிற்கு காய்கறிகள் வாங்கித் தருவதற்கும் அதிகாலைகளிலேயே இவன் கிளம்பிப் போக வேண்டியிருக்கும்.  அந்த வீட்டிலிருந்த பழைய சைக்கிளில் மூச்சு வாங்க வியர்க்க விருவிருக்க அவன் அலைந்து கொண்டிருப்பது  அத்தெருவாசிகளுக்கு வழக்கமான நிகழ்வு. ஷிவானி ராஜஸ்தானிலிருந்து இங்கு கல்யாணமாகி வந்த சில நாட்களிலேயே சேட் இவனை வேலைக்கு வேண்டாமென நிறுத்திவிட்டார். அந்த வேலையைவிட்டபின்  அதற்கான காரணம் தெரிந்திருக்கவில்லை.  
இப்பொழுது ஆள்வரத்தின்றி போயிருக்கும் பழைய சிறைச்சாலையில் கடைசியாயிருந்த கைதிகளில் இவனும் ஒருவன். அதனாலோ என்னவோ பார்க் ஸ்டேஷனில் அதிக நேரமிருக்க எப்பொழுதும் விரும்புவான். பொட்டலம் கையிலிருந்து விற்றுத்தீரும் வேகம் காற்று உடலில் ஊடுறுவுகிற வேகத்திலிருக்கும். அதோடு  நிறையபேர் இவன் ஏரியாவிலிருந்து  வந்து இங்கு சின்னச் சின்ன வியாபாரங்கள் செய்வதும் வேலை செய்வதுமாயிருக்கிறார்கள்.  ஏதேதோ வேலை செய்து அங்கு கொஞ்ச நாள் இங்கு கொஞ்ச நாளென சுற்றி கடைசியில் இப்படி வந்து உட்கார்ந்துவிடுகிறவர்கள்தான் அதிகம். உடல் பெறுத்த யுவதிகளின் மீது பெருங்கோபம் கொண்ட  நாளிதழ் விற்கும் இளைஞன் ஒருவனை சம்பத்திற்கு மிக நன்றாய்த் தெரியும். பகல் வேளைகளில் எல்லா ரயில்களிலும் அவனைக் கடக்கிற அப்பெண்களின் உடல்களிலிருந்து கசிந்து கடக்கும் வெவ்வேறான ஸ்ப்ரே வாசணைகளும் உடல் வாசணைகளும் அவனை பின்னிரவு தாண்டியும் தூங்கவிடுவதில்லை. வேகமாக அப்பெண்களைக் கடந்து போகவேண்டுமென தூரத்தில் நினைத்துக் கொள்ளும் அவன் மனம் கையில் நாளிதல்களோடு நெருங்குகையில் பாதி மயக்கத்திற்கு வந்துவிடும். அந்த பெண்களின்மீது கொள்ள நேரும் கொடுங்காமமே அவர்களின் மீதும் பெருங்கோபமும் கொள்ள வைத்திருக்கும். சம்பத் அவனோடு பேசுவதற்கும், பேசியபடியே நடந்து சென்று சூடுகுறைந்த தேநீர் அருந்துவதற்கும் ஏதுவான நேரம் எப்பொழுதும் இரவு பத்தரைக்குமேல்தான் வாய்க்கும். அன்று  தாம்பரத்திலிருந்து வந்த மின்சார ரயில் சில நொடிகள் ஓய்விற்காக நிற்க, எஞ்சிய மாலைநேர சஞ்சிகைகளுடன் அவன் இறங்கி வந்தான். நெரிசல் மிக்க கூட்டத்தினுள் அலைந்த அவனுடலின் களைப்பைக் காண முடிந்தது.
            பாதி மின்விளக்குகள் அணைக்கப்பட்ட அந்த நிலையத்தின் இன்னொரு முனை நோக்கி பேசியபடியே நடந்தவர்களின் மேலாக எதிரொலித்தது தொலைவிலிருந்து எதிரொலிக்கும் அடுத்த ரயிலின் ஹாரன் சப்தம். சம்பத்தின் கையிலிருந்து பொட்டலமொன்றை வாங்கிக் கொண்டவன் ‘துட்டு நாளக்கி வாங்கிக்கிறயா சம்பத்து....’  அனுமதி எதிர்பாராமலேயே அதனைப் பிரித்து கையில் கொட்டினான். இந்த மாநகரில் பொட்டலம் நிறைய கிடைக்கிறதுதான், ஆனால் எல்லோரிடமும் இதுமாதிரியான நல்ல சரக்கு கிடைப்பதில்லை. கையில் கொட்டியிருந்த கஞ்சாவை ஆர்வத்தோடு முகர்ந்து பார்த்தவனின் அக்குளிலிருந்து ஒரு செய்தித்தாளை உருவிய சம்பத் அவனைத் தனியே விட்டுவிட்டு ஒரு கல்பெஞ்சில் அமர்ந்தான். அவனின் கையில்  மெதுவாக நசுங்கிக் கொண்டிருந்த கஞ்சாவிலிருந்து பெரும் வனத்தின் வாசணை கசிந்து வந்தது.
            அவனை இப்பொழுது நன்றாக கவனித்தால் ஆச்சர்யமாய்த்தானிருக்கிறது. அதிகமாகப்போனால் இருப்பத்து மூன்று வயது. அந்த வயதிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒரு ஒடிசலான தோற்றம். பேசும்போது நிலைகொள்ளாது அலைந்து திரியும் பார்வை. முகம் கொஞ்சம் சாந்தமானதாகத் தோன்றினாலும் உடலிலிருக்கும் நடுக்கம் எப்பொழுதும் ஒரு நோயாளியைப் போலவே உணரச் செய்யும். இவன் எப்படி இந்த தொழிலுக்கு வந்திருப்பான்?...யோசிக்க முடியவில்லை. தானெப்படி இந்தத் தொழிலுக்கு வந்தோம்? அதுவும் நினைவிலில்லை. முதல் தினம் பொட்டலம் விற்றதெல்லாம் கொஞ்சம் நினைவிருக்கிறதுதான். ஆனால் எப்படி அது நிகழ்ந்ததென்பது நினைவிலில்லை. முழு கஞ்சாவையும் சிகரெட்டில் ஏற்றும் அவன் நுணுக்கம் அழகானதாயிருந்தது. பூனைக்குட்டியொன்று கால்களையெல்லாம் மடக்கி ஒளிந்து கொள்வது போல் உலர்ந்த அந்த பச்சிலை பூனைக்குட்டி சுருண்டு சேர்ந்தது  சிகரெட்டில். பற்ற வைத்து முதல் இழுப்பின் புகை நெஞ்சுக்கூட்டுக்குள்ளிருந்து கொஞ்சம் துயரத்தையும் வெறுமையையும் எடுத்து வெளியேறி காற்றில் கலந்தது. சம்பத்தின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். அவன் துயரங்களைச் சுமந்த புகை எதிர்த்தாற்போல் தெரியும் செய்ண்ட் ஜார்ஜ் கோட்டையைத் தாண்டி நகர்ந்து போனது. கையசைத்து இவன் டாடா சொன்னான்.  சம்பத் இவன் தோள்களில் கைபோட்டு அவனிடமிருந்த சிகரெட்டை வாங்கி ஒரு இழுப்பு இழுத்தான். புகையை விடவில்லை. நீண்டதொரு இழுப்பு, சில நொடிகளுக்குப்பின் அது வெளியேறிய பொழுது சம்பத்தின் கண்கள் அடர் சிவப்பாகிவிட்டிருந்தது.
            ஆள்வரத்துக் குறைந்து போயிருக்க தண்டவாளங்களில் தவழ்ந்து கொண்டிருந்தது தூரத்து மின்விளக்குகளின் வெளிச்சம். சற்றுத் தள்ளி நின்று தலையைக் குனிந்தபடி செல்ஃபோனில் குறுஞ்செய்தி தட்டச்சிக் கொண்டிருந்த யுவதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சம்பத்தின் நண்பன் திரும்பி இவனைப் பார்த்தான். சம்பத் ஸ்டேசனுக்கு வெளியே ஒன்றிரண்டாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களை வெறித்தபடி அமர்ந்திருந்தான். ’நீ யாரனாசும் செஞ்சிக்கிரயா சம்பத்து?...’ குரல் இங்கிருந்தாலும் உடலின் மொத்த கவனமும் அவனுக்கு அந்த யுவதியின் மீதுதானிருந்தது.  ‘ம்’ இதற்கு மேலொரு சிறந்த பதிலை வேறு ஒருவரும் சொல்லிவிட முடியாதென்பதைப் போலிருந்தது சம்பத்தின் குரல். அவன் இவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு எழுந்து அப்பெண்னை நோக்கி நடந்தான். ’த்தா… அட்த்த வண்டி  வர வரைக்கும் உன் சூத்து உக்காரதா?’ சம்பத் கேட்டதற்கு திரும்பிப் பார்த்துச் சிரித்தவன் திரும்பி வராமலேயே அவளை நெருங்கிச் சென்றான். அந்த பாதிவெளிச்சத்தில் பன்றிக்குட்டியைப் பார்த்தால் கூட கொஞ்சம் நல்லமாதிரியாகத்தானிருக்கும். இவள் எம்மாத்திரம். மட்டமான ஸ்ப்ரேயின் வாசனை அவளிடமிருந்து எழுந்து பரவியிருந்தது. யோசித்துப் பார்க்கையில் இவன் உணர்ந்ததிலேயே மிக மட்டமான வாசனை இதுதான். ஆனாலும் உடையை மீறித் தெறிக்கும் அவளுடல் அவளை நெருங்கச் செய்தது. முழுமையாக இரண்டு நிமிடம்கூட ஆகியிருக்கவில்லை. ‘எம்மா நேரந்தான் உத்து உத்துப்பாத்துக்கினே இருப்ப…துட்டுக்கீதா?’ அவளைப் பார்த்துச் சிரித்தவன் ‘எவ்ளோ வோனும்…?’ அவனிடம் அதிகமாகப்போனால் அடுத்த நாள் செலவுக்குப்போக ஐம்பது ரூபாய் இருந்தாலும் ஆச்சர்யம்தான். கேட்டுவிடுவதிலும் நின்று ரசிப்பதிலும் என்ன குறையப்போகிறது?.  ”முந்நூறு ரூவா…துட்டு குடுத்துட்டுத்தான் கூட்டினு போவனும்…” இவன் பதிலே பேசாமல் திரும்பி சம்பத் உட்கார்ந்திருக்கும் பெஞ்ச்சுக்குச் சென்றான்.

     அமைதியாக வந்து உட்கார்ந்த மூர்த்தி அவளிடம் என்ன பேசினான் எனத்தெரிந்து கொள்ள ஆர்வமாயிருந்தது சம்பத்திற்கு. அதற்குள் ரயில் வரும் சத்தம் கேட்க. எழுந்து நின்று கொண்டவன் அவனிடம் ‘அவளாண்டா இன்னடா மச்சான் கேட்ட?...’  சம்பத்தின் கண்கள் விரிந்த ஆர்வத்துடனிருப்பதைக் கவனித்து மூர்த்தி ‘த்தா அவளுக்கு சூத்து இன்னா தங்கத்துல செஞ்சிருக்கா மச்சான்?...’ சம்பத் திரும்பி அவளைப் பார்த்துச் சிரித்தபடியே இவனைப் பார்க்க அவ்வளவு நேரம் அமைதியாயிருந்தவன் “டொப்பிரி பீஸா இருந்துனு முந்நூறு ரூவா கேக்கறாடா…” கத்தவும் சுற்றியிருந்த ஒன்றிரண்டு ஆட்கள் இவனைத் திரும்பிப் பார்த்தனர். அந்தப்பெண் ஓடிப்போய் ரயிலில் ஏறிக்கொண்டு கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டாள். மூர்த்தியின் முதுகில் ஓங்கி அடித்துவிட்டு சம்பத்தும் அதே ரயிலில் ஏறிக்கொண்டான். வண்டி கிளம்பி சில நிமிடங்கள் வரையிலும்  சிரிப்பை அடக்க முடியவில்லை. சத்தம் வராமல் சிரித்துக்கொண்டிருந்தான். எதிர்த்தாற்போல் நாலைந்து இருக்கைகளுக்கு அப்பால் அந்தப் பெண் உட்கார்ந்த இவன் முகத்தை பார்க்க முடியாமல் ஜன்னலுக்கு வெளியே சிரமத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் அந்தப்பெட்டியிலிருந்தனர். பிராட்வேயிலிருந்து தாம்பரம் செல்லும் கடைசி ரயில். வெறியடங்கிய குதிரையாய் களைத்து  ஒவ்வொரு நிறுத்தத்திலும் நிதானமாக ஆளிறக்கிச் சென்றது. 

Comments

Popular posts from this blog

மன்னார் பொழுதுகள் : சாபத்தின் வடுக்களை மீறி எழும் நட்பின் கதைகளும் குருதிக்கறைப் படிந்த மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்

நொண்டிக் கருப்பு

வெயிலுக்கு சுமதி என்று பெயர்.