3. ரகசிய இரவு…. ரகசிய நண்பன்…
இருள் நிரப்பிய வெளியெங்கும் இடைவெளியின்றி விளக்குகளின் வெளிச்சமப்பி செம்பழுப்பு நிறமாக்கியிருந்தது. ரயிலின் வேகத்தில் சலனங்கொள்ளும் ஸ்டேசன்கள் உறங்கத் தயாராகிக்கொண்டிருந்தன. அந்தப்பெண் இவனைக் கவனிக்கிறாளாவெனப் பார்த்தான். அவள் தன் அலைபேசியில் யாருடனோ பேசிக்க்கொண்டிருந்தாள். பேச்சைவிடவும் மிகுந்திருந்த்து சிரிப்பு. திரிசூலம் ஸ்டேசனில் வண்டி நின்ற பொழுது இவனிருக்கும் பெட்டியில் ஏறிக்கொண்ட ஒன்றிரண்டு பேரில் முப்பதைத் தாண்டிய ஒருவன் மட்டும் சம்பத்திற்கு அருகில் வந்து அமர்ந்தான். அதிகபட்சமாய் இருவருக்குமிடையில் இருந்த இடைவெளி ஒரு மீட்டர்தான். இவன் முகத்தை படியில் ஏறும்போதே கவனித்துவிட்டவன் தீர்மானிக்கப்பட்டு விட்டதைப்போல் நேராய் இவனருகில் வந்துவிட்டான். வழக்கமாக இந்நேரத்திற்கு சம்பத் வீட்டிற்குப் போயிருப்பான். இன்று பெருங்களத்தூரில் ஒரு பார்ட்டி கொஞ்சம் கூடுதல் சரக்கு கேட்டதற்காய் கொடுக்கப்போகிறவனுக்கு திரும்பிச் செல்லும் நேரம் பற்றின தெளிவில்லை. புதிதாக வந்தமர்ந்தவனின் முகத்தில் அந்த நேரத்திற் கு கொஞ்சமும் தொடர்பில்லாத மட்டுமீறியதொரு ஒப்பனையிருந்தது. வலதுகாதில் கம்மல் அண...