கதைசொல்லி என்பவன் சாகசக்காரனோ வித்தைக்காரனோ அல்ல, அவனொரு மந்திரவாதி.

( ம.நவீனின் போயாக்கை முன்வைத்து.) சிறுகதை என்னும் வடிவம் ஒரு எழுத்தாளனுக்கு எப்போதும் சவாலானது, கடும் உழைப்பைக் கோருவது. ஒரு கதையிலிருந்து இன்னொரு கதைக்கான பயணத்தில்கூட எழுதுகிறவன் தன்னையும் தனது சிந்தனைகளையும் முற்றிலுமாய் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். வடிவரீதியாகவும் எடுத்துக் கொள்ளும் கதைக்களத்திலும் அக்கறை காட்டுகிறவர்களால் மட்டுமே தொடர்ந்து சிறந்த கதைகளை எழுத முடிந்திருக்கிறது. நாவல் எழுதுகையிலிருக்கும் சுதந்திரம் சிறுகதைகள் எழுதும்போது இருப்பதில்லை. ஒரு கதையை யோசித்த இடத்திலிருந்து எழுத்து வடிவத்திற்கு மாறும்போது அது வெவ்வேறு கிளைகளாகப் பிரிந்து செல்லும். இந்த உபகதைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. உபகதைகளிலிருந்து துண்டித்துக் கொண்டு கதைக்குள் ஆழமாகப் பயணிக்க லாவகம் வேண்டியிருக்கிறது. இந்த லாவகம் ஒரு சிறுகதை எழுத்தாளனுக்கு அத்தனை எளிதில் அமையக்கூடியதல்ல. தமிழ் சிறுகதைகளின் முகமானது இந்த தசாப்தத்தில் பெரும் மாற்றம் கண்டுள்ளதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். ஒரேவிதமான...