
மற்றுமொரு பிரிவுக்கதை -அலீனா. நீண்டதொரு கடற்கரையாய் அவளிருந்த காலத்தில் அவன் ஒரு சிறு படகாய் இருந்தான். சந்தடிகள் நிறைந்திருந்தாலும் வெறுமை சூழ் உலகு அவளது. காற்றும் அலையும் என அலைக்கழிக்கப்பட்டாலும் நிறைவானவை அவனது நாள்கள். அலைச்சல்கள் மிகுந்த வாழ்விலிருந்து ஓய்வெடுக்க எண்ணி அவன், அவள் கரை சேர்ந்திருந்தான். வருவோரும் போவோருமாய் இருக்குமிடத்து தங்கிவிட்ட அவனிடம் அவள் கதை பேசத் துவங்கினாள். அவனிடம், சொல்வதற்குப் பல கதைகளிருந்தன - அவன் சுமந்த மனிதர்களும், கால் நனைத்த தேசங்களும், போராடிக் கடந்த தூரங்களும், எட்டி அடைந்த கனவுகளுமாய் அவனின் கதைகள் அவளுக்குச் சுவாரசியமாய் இருந்தன. அவளறியாத, காணவும் இயலாத அந்த உலகின் வாயில்களை அவன் தன் கதைகளைக் கொண்டு திறந்திருந்தான். அவன் பேசி சலிப்புற்ற நேரங்களில் அவள் தன் சிறு உலகத்தின் பெருங்கதைகளை அவனுக்குச் சொல்வாள். பகலும் இரவும் எல்லா நேரங்களிலும் தன்னோடிருக்கும் அவனது அருகாமையில் அவள் திழைத்திருந்தாள். வழமை திகட்டி மனம் மாற்றத்தை வேண்டிய ஓர் நாளில், தான் பயணம் போக எண்ணுவதாய் அவளிடம் கூறினான். விடைகள் பல கூ...