நீலநதி
லக்ஷ்மி சரவணகுமார். சுழித்தோடும் இந்நதியின் நீர்ப்பரப்பினூடாய் கசியும் வாசத்தில் பசபசப்பான குறுமணல்கள் கொண்டிருக்கும் நித்சலனம். மூன்று தினங்களாய்ப் பெய்தோய்ந்த பெருமழைக்குப் பின்பாக தளிர்த்திருக்கும் கரையோர நாணல்களின் பச்சையினூடாய் சகதிக்கால் நகர்த்தி வந்துகொண்டிருக்கிறானவன். மாதங்களுக்கு முன்பாய் நீர்வரத்தற்றப்போய் ஆள்நடமாட்டமின்றி நாதியற்ற இக்கரையில் ஓடுகளாய் எஞ்சிய நண்டுகளையும் சிப்பிகளையும் பொறுக்கி சகதிநீர் ஊறும் சிறு சிறு நீர்பரப்பில் விட்டுவந்திருந்தான். எப்படியும் வாய்க்கும் உயிர்ப்பென்னும் நம்பிக்கையுடன். நீரூட்டம் பெருகுவதற்கு சமீபமான தினங்களில் தன் வீட்டின் பால்கனி முகப்பிலிருந்து வினோதமான உருவங்களின் அசைவுகளை நதியில் கவனித்தவனுக்கு உறக்கமின்மை வளர்ந்தது. முதலில் நாளுக்கு சில மணிநேரங்களெனவும் பின்வெகு வேகமான தீவிரத்தில் பெருகிய உறக...