வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

லஷ்மி சரவணகுமார். நமக்கு விதிக்கப்பட்ட வாழ்வை, துயரின் அரூபங்களை நாம் கதைகளாக்கியபடியே தான் இருக்கிறோம். வரலாறு கதை சொல்லுதலின் நீட்சிதான். எல்லா வரலாறுகளும். இந்திய தேசத்தின் வரலாற்றுக் கதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் பின்னாலிருந்து துவங்கும் போதே மனிதன் பேசுவதிலிருந்து அதிகாரத்திற்கும் அதிகாரத்தின் வழி யுத்தத்திற்கும் இடம்பெயர்ந்த கதைகள் நமக்கு சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதிகாரத்தின் கதைகளை கேட்டே வளர்ந்தவர்கள் நாம். எளிய மனிதர்கள் அந்தக் கதைகளின் துயர் மிக்க சின்னஞ்சிறிய சாட்சியங்களாகவே எப்போதும் அடையாளப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் சின்னஞ் சிறிய மக்கள் கூட்டம் பேசும் ஏதோ சில மொழிகள் நம் தேசத்தில் அதன் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு மொழி அழியும் போது அதனோடு சேர்ந்து அதன் பல்லாயிர வருட வரலாறும் அழிக்கப்படுகிறது. வரலாற்றை அழிப்பதின் வழிதான் ஒற்றை தேசியத்திற்குள் ஒடுக்கப்பட்ட மக்களும், பழங்குடியினரும் அடிமைகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புத்த...