ஒளிநார்கள் கிளித்து கூடுகட்டும் தூக்கணாங்குருவிப் பெண் பாயிஸா :

எஸ்.ஃபாயிஸா அலியின் கடல் முற்றம் தொகுப்பிற்கான முன்னுரை. ------------------------------ ------------------------------ ------------------------------ ---------------------- பெண் சூழ்நிலைகளை எதிர்கொண்டு பொருந்திக்கொள்ள வேண்டும். அவள் ஏன் அப்படி பொருந்திக்கொள்ள வேண்டியவளாகிறாள்? இந்த உலகத்தில் இன, மத, நிற, தேசங்கள் என்னும் வேறுபாடுகள் கடந்து பிரபஞ்சத்தின் சகல திசைகளிலும் வாழ்ந்துவரும் ஒவ்வொரு பெண்ணுக்கு முன்பும், கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் மீற முடியாத ஏதோ ஒரு தடை இருக்கின்றது. பூசிமெழுகப்பட்டதாகவோ, நன்கு கவனமெடுத்து அலங்கரிக்கப்பட்டதாகவோ அன்றி சிலநேரங்களில் ஆறமுடியாத, ஆழமான வெட்டுக்காயமாகவோ காய்ந்த தழும்பாகவோ உள்ளுர பெண் மாத்திரமே அதை உணரக்கூடியவாறு அந்தத் தடையானது சிறுகச் சிறுக பெண்ணின் உயிர்ப்பையே கொல்லுகின்றது. தொடர்ச்சியான நசிவுற்றலில் அகப்பட்டபடியே சிரித்துச் சமாளித்து அவள் இந்த வாழ்க்கையை வாழக்கூடும். ஒரு பெண் எதை தன்னுடைய கனவுகளால் தகர்க்க முயலுகின்றாள்? தன்னுடைய கவிதைகளால் எதைத் தாண்ட முயலுகின்றாள்? அவளுடைய கலைத்துவத்தில் இதற்கான பதிலை கண்டெடுக்க முடியும். பெண்ணு...