இலங்கைப் பயணம் : சில தருணங்கள். 1
படிப்பின் மீதான வெறுப்பில் கைவசம் இருந்த இரண்டு துணிகளோடு பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு முடிவில் வீட்டை விட்டு ஓடிய நாளில் தான் ஊர் சுற்றுதலின் மீதான பெரும் விருப்பம் துவங்கியது. அப்போதிலிருந்தே சிரமங்கள், சந்தோஷங்கள், தனிமை என எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள பயணம் அத்தியவசியமாகிப் போனது. அலைச்சலுக்கான தவிப்பை உடல் தான் முதலில் ஏற்படுத்துகிறது . வெவ்வேறான கால நிலைகளில் வெவ்வேறான கூரைகளின் கீழ் சலித்து உறங்கும் நாட்களில் தான் வினோதமானதொரு நிறைவை உணர முடிகிறது . பொதுவில் நான் தனித்து அலைய விரும்புகிறவன் . ஏனெனில் இலக்குகளோடு சரியாக திட்டமிட்டு பயணிப்பதை விரும்பாதவன் . இத்தனை நாட்களுக்குள் இத்தனை இடங்களை சுற்றிவிட வேண்டுமென நினைப்பது ஒரு டூரிஸ்ட் கைடின் வேலை . ஒரு இன்பச் சுற்றுலாவிற்கான மனநிலைகளுக்குள் நான் எந்த ஊரின் சாலைகளையும் தேடுவதில்லை . ஒவ்வொரு சாலையும் பிரத்யேக கதைகளின் மனிதர்களின் பொக்கிஷம் . அவற்றோடு பயணிப்பதின் வழி தான் அந்தரங்கமாக அனேக சமாச்சாரங்களை கற்றுக் கொள்ள முடிகிறது . பயணம் தரும் இன்பத்தை ம...