நானும் உயிரெழுத்தும்.

சிற்றிதழ்களின் வழி எழுத்தை அறிந்து கொள்வது பதின் பருவத்தில் அலாதியான மயக்கம். எல்லாவற்றையும் கேள்வி கேட்கவும் மறுதலிக்கவுமான அபரிமித துணிச்சல்கள் வாசிப்புத் தரும் இரவலாய் ஒரு வாசகனுக்குள் இறங்கிவிடுகிறது. அப்படியாகத்தான் நான் எழுதத் துவங்கிய நாட்களில் உயிரெழுத்தும் எனக்கு அறிமுகமானது. உயிரெழுத்தின் முதல் இதழ் வெளியான ஒரு சில மாதங்களுக்கு முன்பாகத்தான் நான் லஷ்மி சரவணகுமார் ஆகியிருந்தேன். அதற்கு முன்பு வேறு வேறு பெயர்களில் இலக்கிய களமாடிய வரலாறு அத்தனை சுவாரஸ்யமில்லை. லஷ்மி சரவணகுமாரின் மூன்று சிறுகதைகள் பிரசுரமானதின் வழி எழுத்தாளராக தனக்குத் தானே அறியப்பட்டுக் கொண்டிருந்தார். அல்லது ஏற்கனவே அவரைத் தெரிந்த சிலருக்கு தெரிந்ததொரு கூடுதல் விசயமாய் அந்த சங்கதிகள் இருந்திருக்கக் கூடும். வாழ்வின் யதார்த்தம் ஆசைக்கு எழுதிய வரை போதுமென பின்னிழுக்க, விடாது மனம் தளரா வேட்கையுடன் எழுதிக் குவித்த நாட்களவை. உயிரெழுத்தின் முதல் இதழில் சிறுகதைகளுக்கு சிறப்பான கவனம் கொடுக்கப்பட்டதில் உற்சாகம் பிறந்தது. ‘ஆஹா இது நமக்கென இதழ். அந்த களிப்பு எழுதிக் கொண்டிருந்த கதைகளிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து வேகம...