சமகாலத் தமிழ் சினிமா…. சில முக்கியக் கேள்விகளும் அனாவசிய கேள்விகளும்…
சினிமாவை அதன் அழகியல் மற்றும் ஒழுங்குகளோடு அனுகும் தமிழர்கள் வெகு அரிதே. எனினும் தமிழனிடமிருந்து ஒருபோதும் சினிமாவைப் பிரித்து எடுத்து விட முடியாது. கடந்த 80 வருடங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோவொருவிதமான சமூக முக்கியத்துவம் திரைப்படங்களுக்கு இருக்கவேச் செய்கின்றன. தமிழ் சினிமாவின் கோணல் மானலான விதிகள் அல்லது யதார்த்தங்களுக்கு மத்தியில் ஒவ்வொரு முறையும் ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுப்பதென்பது நிஜமான கலைஞர்களுக்கு சவாலான விசயம்தான். சராசரி பார்வையாளனுக்கு தான் பார்க்கும் சினிமாவின் வியாபாரம் குறித்து எப்பொழுதும் பெரிய கவலைகள் இருக்கப்போவதில்லை. ஆனால் ஒரு படத்தின் கதையம்சம் குறித்தும் குறைந்தபட்சம் ஒரு படத்தில் அவனுக்கான தேவைகளும் வெவ்வேறாகவும் அனேகமாகவும் இருக்கின்றன. இந்த பத்து வருடங்களில் வெற்றி பெற்றிருக்கும் அல்லது வெகுஜன பார்வையாளர்களால் கொண்டாடப்பட்ட படங்களை கவனிக்கையில் தமிழ் சமூகத்தின் வினோதத்தன்மை புரியும். இங்கு காதல், அழகி, வெயில், அங்காடித்தெரு மாதிரியான படங்களும் நிற்கின்றன, இன்னொரு பக்கம் எந்திரன், சிவாஜி, அயன், கோ என முழுக்க மசால் தடவிய மீன்களும் விய...