வசுந்தரா எனும் நீலப்பறவை…
ஊர்க்காகங்கள் கொஞ்சம் திசைமாறிப் பறந்த தினத்தின் அதிகாலையில்தான் இப்படியானதொரு கனவு வந்திருந்தது வசுந்தராவுக்கு . கிழக்குத் திசைநோக்கி அப்பறவைகள் பறந்ததற்கும் வடகிழக்காக இவள் முந்தின இரவு தலைவைத்து உறங்கியதற்கும் எந்தவிதமான தொடர்புகளும் இருந்திருக்கப்போவதில்லை . கனவுகளுக்கும் உறக்கத்திற்கும் சம்பந்தமில்லாததொரு உறவிருப்பதைப் போலவேதான் இதுவும் . முன்பு ஒருபோதும் இல்லாதளவிற்கு உற்சாகமும் சந்தோசமும் கொண்டவளாய் விழித்தவளின் உடலில் வலது இடதாக இறக்கைகள் துளிர்விட்டிருப்பதாக நினைத்துக் கொண்டாள் . காற்றைவிடவும் ; லேசனாதாயிருந்தது உடல் . பிரபஞ்சத்தின் மொழி பிடிபட்டதைப்போல் ஒவ்வொன்றையும் நிதானமாகப் பார்த்தவளை அம்மாவும் சகோதரியும் புதியவளாய்ப் பார்த்தார்கள் ....