பெருநகரில் நிலைகொள்ளாது அலையும் உப்புநாய்கள் …
நாவலுக்கான முன்னுரை - பார்க்கிற கேட்கிற எல்லாக் கதைகளைவிடவும் பெருநகரங்கள் பிரம்மாண்டமானதொரு கதையாய் எப்பொழுதும் என் முன்னால் விரிந்து கிடக்கின்றன. பகலில் வெவ்வேறான முகம் கொண்டிருக்கும் அத்தனை நகரங்களும் இரவில் ஒரேமாதிரியானவைகளாய்த்தான் இருக்கின்றன. இரவுகளில் பாதுகாப்பற்றதாய்ப் போயிருக்கும் நகரங்களில் மெளனம் மட்டுந்தான் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கின்றது. எல்லா வீதிகளிலும் யாரோ சிலர் மெளனத்தின் நீள் கயிறுகளைப் பிடித்தபடி இரவையும் பகலையும் பிணைக்கும் அத்யாவசியாமனதொரு வேலையை செய்கின்றனர். அவர்களின் விரல் வழி இரவு காற்றென கரைந்து எல்லோரின் நினைவுகளுக்குள்ளும் சொல்லாத கதைகளாய் நிரம்புகின்றன. ஏதேதோ கிராமங்களிலிருந்து பிழைப்பிற்காக சென்னை வருகிறவர்களின் கனவுகள் தங்களின் விருப்பங்களின் வழியாயும், யாரோ சிலரின் நினைவுகளின் வாயிலாகவும் இந்நகரின் எல்லா ரகசியங்களையும் தெரிந்து கொள்ளவே விழைகின்றன. விரல்களை மடித்து விரி...