தஞ்சை ப்ரகாஷும் மிஷன்தெரு ரம்யாவும்... (361 இதழில் வெளியாகியுள்ள சிறுகதை....)
இந்தமுறை எப்படியும் நல்லதொரு அறையினை அமர்த்திக் கொள்ளவேண்டுமென்கிற எனது எதிர்பார்ப்பு அந்த அறையைத் திறந்த சில நொடிகளிலேயே தகர்ந்து போனது. எட்டு மணி நேரத்திற்கும் அதிகமான பயணக்களைப்பு இப்பொழுது இன்னும் அதிகமாகியிருந்தது. பல வருட தூசியப்பிய அவ்வறையில் போன நூற்றாண்டு மனிதன் எவனாவது கடைசியாய் தங்கிச் சென்றிருக்கக்கூடும். இன்னும் விலகாத ஒரு பெருநாற்றம் அறையில் நிறைந்து கிடக்க, இரண்டு மாடிகள் என்னோடு எதையும் கையிலெடுக்காமல் நடந்து வந்த ரூம்பாய் சில்லரை கேட்டு நின்றான். ரூம்பாயென்று சொல்லமுடியாத ஓல்டுபாய் அவன். அதிகமாகப் போனால் மூனேமுக்கால் அடி, அவன் உயரத்திற்கு சம்பந்தமேயில்லாமல் ஒரு பேண்ட்டும் அதனோடு சிரமத்துடன் ஒத்துப்போக முயற்சிக்கிற சட்டையுமாய் என்னை அதிகபட்ச எரிச்சலுக்குட்படுத்தும் எல்லா தகுதிகளுடனுமிருந்தான். அவனைச் சொல்லி குறையில்லை. பாதி உறக்கத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இருக்கிறதென்கிற வேகத்தில் நான் வந்ததற்கும் வெளியிலிருந்து பார்க்க சுமாரான விடுதியாய்த் தெரிகிறதென நம்பிக்கொண்டதற்கும் அவனை எப்படி குறைசொல்ல முடியும்? பத்துரூபாய்க்குக் குறைத்து வாங்குவ...