முத்துப்பிள்ளை கிணறு…
கோடை ஒரு வற்றா ஆறென அந்த வருடத்தின் பிற்பகுதி முழுக்க கரிசல் நிலம் முழுக்க விரிந்து கிடந்தது. வெயிலடித்துச் செத்துப்ப்போன ஆடுகள் தோலுரிக்கப்பட்டு இறைச்சிகளாய் உப்புக்கண்டம் போடப்பட்டு தெருவில் எலக்ட்ரிக் போஸ்ட் மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. எல்லாவற்றிலும் வெயிலின் வாசனை. பாய்கடை ஆட்டுக்கால் சூப் இப்பொழுதெல்லாம் சுவையற்று நீர்த்துப் போயிருக்கிறது. தனித்துவமான காரணங்களெதுவுமில்ல, முன்பு ஆடுகள் உயிரோடு அறுக்கப்பட்டன, இப்பொழுது இறந்து பல மணிநேரங்களுக்குப் பிறகு அறுக்கப்படுகின்றன. அப்படியும்கூட ஊர்களில் பாதி வீடுகளுக்குமேல் சோளமும், கம்பும் தீர்ந்து போய் சனம் கீக்காட்டுக்கு நாத்து நடப்போக நேரம் பாத்துக் கொண்டிருந்தது. அடுத்த மழைக்காலம் வந்து வெதச்சு அறுக்க நாளிருக்கு நிறைய. பிள்ளைகள் எப்படி பசி தாங்கும்? சோளம் கசக்கி வாய் நெறய மெல்லும் சின்னப்பிள்ளைகள் இப்பொழுது வெறும் வாயை மென்றுகொண்டிருக்கின்றன. சம்சாரி வீடுகளில் குதிர்கள் தீர்ந்து மஞ்சள் பைகளிலும், துணிப்பைகளிலும் சேகரித்து கொஞ்ச நஞ்ச தான்யங்களில் பொழுதோடிக்கொண்டிருந்தது. ...