மன்னார் பொழுதுகள் : சாபத்தின் வடுக்களை மீறி எழும் நட்பின் கதைகளும் குருதிக்கறைப் படிந்த மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்
“ஒரு சிறந்த நாவல் மிகவும் ஞானமிக்கதாக இருக்கிறது, சொல்லப்போனால், அதனைப் படைத்த நாவலாசிரியனை விடவும் அது கொஞ்சம் கூடுதல் புத்திசாலியாக இருக்கிறது. இந்த ஞானத்திலிருந்துதான் நம் வாழ்வுக்கு அர்த்தமூட்டும் அரிய கண்டுபிடிப்புகள் புலப்படுகின்றன. நமக்கான திசைகளும் வெளிகளும் புலப்படுகின்றன. கனவுகளின்றி பரிதவிக்கும் நம் காலத்துக்கான கனவுகளைப் பரிசளிக்கின்றன.” - நாவல் கலை நூலில் சி.மோகன். இலக்கிய வடிவங்களில் நாவல் ஏன் மகத்தான வடிவமாய்க் கொண்டாடப்படுகிறதென்றால், அது வாழ்வைப் பிரதிபலிக்கிறது. வாழ்வின் மீதான பார்வைகளையோ விசாரணைகளையோ வெறுமனே அள்ளித் தெளிக்காமல் ஒரு எழுத்தாளன் முழுமையாய் தனது எண்ணவோட்டங்களின் வழியாய்த் தேடிச் சென்று வாழ்வின் புதிரான சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வுகாண விழைகிறான். எல்லாவற்றைக் குறித்தும் அபிப்பிராயம் எழுதுவதும் அனுபவத்தின் வழியாய் நாவல் எழுதுவதும் ஒன்றல்ல. இரண்டுவிதமான அனுபவங்கள் ஒரு நாவலசாரியனுக்கு முக்கியமானதாகப்படுகிறது, ஒன்று வாழ்வனுபவம். மற்றொன்று நீண்ட வாசிப்பு மற்றும் தேடலின் வழியாய் கிடைக்கப்பெறும் அனுபவம்.