தடியன் சேகர்


                                                             

பேராசைக்காரனுக்கு வாழும் காலம் மட்டுமல்ல, இறந்த பிறகும் கூட ஆசைகள் அடங்கிப் போவதில்லை என்பதற்கு தடியன் ஆவிசாட்சி. பல வருடங்களுக்கு முன் பேரையூரிலிருந்து சாப்டூர் வழியாக அணைக்கரைப்பட்டிக்கு தார்ச்சாலை போடுவதற்கு முன்பாகவே அந்த செம்மண் பாதையின் கட்டுப்பாடு முழுக்க தடியனிடம் தான் இருந்தது. களவெடுக்க நினைத்தால் ஆள் யார் என்ன என்று எதையும் யோசிக்காமல் களவாங்கும் மனிதன். செம்பட்டிதான் ஊரென்றாலும் உள்ளூர்க்காரர்களே அவனை பெரும்பாலும் பார்த்திருந்ததில்லை. காற்றாக வந்து காற்றாக போவானென ஊர்க்கிழவிகள் அவனைக் குறித்து கதை சொல்வதற்குப் பின்னால் ரகசியமான ஆசைகள் இல்லாமல் இல்லை. தடயமே தெரியாதபடி களவாடுவதோடு களவு பொருளை எடுத்த மாதிரியே ஒருபோதும் திரும்பக் கொடுப்பதில்லை என்கிற வகையிலும் அவன் புரிந்து கொள்ளமுடியாதவனாய் இருந்தான். இதெல்லாம் இன்று பழைய கதைகளாகிவிட்டாலும் தடியன் இறந்து பல வருடங்களாகியும் அவன் ஆவி இந்தப் பகுதியில் அவ்வப்போது இன்றளவும் களவாடியபடியே தான் இருக்கிறது. என்ன காரணத்திற்காக அவன் ஆவி இப்படி வெறியடங்காமல் அலைகிறதென்பதைத் தெரிந்து கொள்ள அந்தப் பகுதி பெரியாட்கள் கேரளாவில் இருந்தெல்லாம் மந்திரவாதிகளை வரவைத்து பேசிப் பார்த்தார்கள். யார் கோடாங்கி அடித்தாலும் தடியன் இறங்கி வருவதாய் இல்லை. ஒரு பூசாரி தான் உடுக்கையையும் சேர்த்து தடியன் களவெடுத்துவிட்டதாக சொன்ன நாளில் தான் பூசாரிகளின் சகவாசத்தை அந்த ஊர்க்காரர்கள் கைவிட்டார்கள். தடியனின் ஆவிக்கு களவு பொருளை விடவும் தன் மீது இந்த மக்கள் கொண்டிருக்கும் பயம் ஒரு போதையாகி இருக்கவேண்டும். அதனாலேயே இடைவிடாமல் இந்த ஊர் மக்களோடு சுற்றிக் கொண்டிருந்தான். சமீப நாட்களாக அவன் களவெடுப்பது அதிகமாகி இருப்பதால் உள்ளூர் ஆட்கள் பெரும்பாலும் இரவு பயணத்தை தவிர்க்க நினைத்தார்கள்.

பின்னிரவின் ஆளரவமற்ற சாலையில் இடைவிடாது பொழியும் தூரலில் தனித்து கிடக்கும் போது எழும் அச்சம் அவ்வளவும் அவர்களின் முகத்தில். ஆசைத்தம்பி அந்த பழைய எம்.80 வண்டியை முடிந்த மட்டும் ஓங்கி ஓங்கி மிதித்துப் பார்த்தான். எந்த எதிர்வினையுமில்லாமல் அவனது மூர்க்கமான அத்தனை உதைகளையும் வாங்கியபடி பரிதாபமாய் நின்றது வண்டி. விடிவதற்கு இன்னும் நிறையவே நேரம் இருக்கிறதென்கிற நிஜம் ஒதுங்க இடமில்லாத இந்த சாலையின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்திருக்கும் வயல்களை அச்சத்தோடு பார்க்கச் செய்தது. ஒரு புறம் ஆள் உயரத்திற்கு சோளத்தட்டைகள். காற்றில் அசையும் அதன் சப்தம் மூங்கிலுக்குள்ளிருந்து வெளிப்படும் வினோத ஒலியைப் போலிருந்தது. சாலையின் இன்னொரு புறம் அறுவடைக்குத்  தயாரான நெல் வயல். வண்டியை அப்படியே விட்டுவிட்டு சாலையை ஒட்டி இருந்த சுமை தாங்கிக் கல்லில் தலையில் குற்றாலத் துண்டால் முக்காடிட்டு உட்கார்ந்திருந்த அய்யாவிடம் போனான். அறுபதைத் தாண்டியும் உருக்குலையாத உடல். இன்றைக்கும் ஒரு கெடாக்குட்டியை உரித்தால் பாதியை ஒற்றை ஆளாய்த் தின்று முடிப்பார். எதையும் தின்று செரிக்கிறவன் தான் சீக்கில்லாமல் வாழ்ந்து செத்துப் போகிறானென அவரே அவ்வப்போது சொல்வதுண்டு. சொலவடை சொல்லும் போது யாருக்கு கசக்கும்? புடிச்சபுடியாய் இன்று மாலை பதினைந்து இட்லிகளை குடல் குழம்போடு சேர்த்து சாப்பிட்டவர் அத்தோடு நிறுத்தாமல் ஆட்டின் நெஞ்சுக்கறியையும், தலைக்கறியையும் விட்டு வைக்கவில்லை. ஆட்டுக்கறி திண்பது ஒரு கலை எலும்பிலிருக்கும் கடைசித் துண்டு சதையைக் கூட விடாமல் தின்று, எலும்பையும் மென்று சரிபாதியாய்த் திண்பதுதான் மரித்த ஆட்டிற்கு ஒருவன் செய்யும் மரியாதை. அய்யா எப்போதும் அப்படித்தான்.

மாதத்தில் பத்து நாட்கள் கூட அவர் முழுதாய் வீடு தங்குவதில்லை. “தேசாந்திரிக்கு ஏதுடா ஊரு… மாட்டுத் தரகு பாக்கறவன் வீடே கதின்னு உட்காந்தா தொழில் வெளங்குமா?… நாலு எடம் போயி மனுஷ மக்கன்னு பழகுனாத்தான் சாகற மட்டும் சோத்துக்கு பிரச்சன இருக்காது…” அவர் பேச்சைப் போலவே தான் அவரும். பல வருஷமாய் தரகு பார்ப்பதால் நிறைய இடங்களில் தொழிலில் ஏதேனும் பஞ்சாயத்தென்றாலும் மத்தியஸ்தம் செய்கிறவர் இவராகவே இருந்தார். என்றைக்குமில்லாமல் இன்று சாப்டூர் சந்தைக்கு வந்த இடத்தில் அவருக்கு சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை. சந்தைக்கு முதல் நாள் முடிந்தவரை சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு ஊர் சாவடியில் துண்டை விரித்து படுத்து விடுவது வழக்கம். அதிகாலையில் வயக்காட்டிற்கு போய் குளித்துவிட்டு, முதல் ஆளாய் மாடுகளைப் பார்க்க வந்துவிடுவார். எத்தனை மாடுகளென்றாலும் முதல் நாள் இரவே சரியாக சுழி பார்த்து வைத்துக் கொள்வது அவரது வழக்கம். அவர் தரகு பார்க்காத மாடென்றாலும் தெரிந்தவர் யாராவது வாங்க நேரிடலாம் என்பதால் மாட்டைப் பார்த்து வைத்துக் கொண்டு சரியான நேரத்தில் தட்டிக் கழிக்கும்படி செய்துவிடுவார். அன்று இரவு படுக்கச் செல்வதற்கு கொஞ்சம் முன்னால் சந்தை கூடுமிடத்தில் மாடுகளை எல்லாம் ஒருமுறை தெளிவாகப் பார்த்துவிட்டு சாவடியில் படுக்க வரும்போதே வயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுப்பதைப் போல் உணர்ந்தார். பாம்பைக் கவ்விய கீரிப்பிள்ளையாய் வலி வயிற்றை இறுக்க, தண்ணீர் குடித்துவிட்டு “எல்லாம் சரியாப் போகுமென” தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டார். ஆசைக்கும் மாடுகளை சுழி பார்த்துப் பிரிக்கத் தெரியுமென்றாலும் இவருக்குப் பின்னாலேயே எல்லாவற்றுக்கும் போகிறவனில்லை.

      ஊரடங்கிய கொஞ்ச நேரத்தில் சாவடியில் இன்னொரு மூலையில் ஊள்ளூர் இளவட்டங்களுடன் குசுகுசுவென பேசிக் கொண்டிருந்த ஆசையைக் கூப்பிட்டார். “எலேய் ஆச…” அவர் கூப்பிட்ட நேரத்தில் உள்ளூர் இளவட்டங்களோடு ஒரு சின்னஞ்சிறிய ஃபோனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு நிலவும் அமைதியை தொந்தரவு செய்துவிடக் கூடாதென்னும் நல்லெண்ணத்தில் அவர்கள் ஒலியை நிறுத்திவிட்டு காட்சிகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தக் காட்சிகளுக்கு மேல் பொருத்தமே இல்லாமல் எதிரொலித்த அய்யாவின் குரலை அவர்களால் சகிக்க முடியவில்லை. ”இந்தா வாரேன்… செத்த பொறுங்க..” என தனது லுங்கியை சரி செய்து சலிப்போடு எழுந்து கொண்டவன் நகர மனமில்லாமல் நின்றபடியே படம் முடியக் காத்திருந்தான். “எலேய் வயித்த வலி தாங்க முடியலடா.. வெரசா வா..” என அவர் கோவமாகக் கத்த தனக்குள் எழுந்த ஆவேசத்தை அடக்கியபடியே வேகமாகப் போனான். “கொஞ்சமாத் திங்கனும்… சாகப் போற காலத்துல சட்டி சட்டியா திண்ணா என்னண்டு செமிக்கும்…” இப்போதிருந்த வலியில் அவன் வார்த்தைகள் ஒன்றும் பெரிதாய் அவரை இம்சிக்கவில்லை. “வண்டிய எட்றா மருது டாக்டர் கிட்ட ஒரு எட்டு என்னன்னு போயி பாத்துட்டு வந்துருவோம்..” வலி தாளாமல் சுருண்டிருந்தவரைப் பார்க்கவும் ஏதோ சமாளிக்க முடியாத வேதனை தான் என்பதைப் புரிந்து கொண்டான். சட்டைப் பையில் சாவியைத் தேடினான்.. அது அங்கில்லாமல் போக, ட்ரவுசர் பைக்குள் தேடியபடியே பின்னால் திரும்பி தன்னோடு படம் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களைத் திரும்பிப் பார்த்து “ஏலேய் என் வண்டி சாவி அங்க கெடக்கா எனக் கேட்டவாறே அவர்களை நோக்கி நடந்தான். அந்த இளைஞர்கள் தேடுவது போல் கையைத் தேய்த்தார்களே ஒழிய பதில் சொல்லி இருக்கவில்லை. அருகில் சென்றவன் “எலேய் சாவி எங்கிட்டதான் இருக்கு. எங்க அய்யனுக்கு ரொம்ப முடியல போல.. நான் ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டுப் போறேன். நீ அந்த படத்த வாட்ஸப் ல அனுப்பி வைய்யி..” அந்த இருளிலும் முன் பற்கள் தெரியும் படி சிரித்தபடி சொல்லிவிட்டு ஓடினான்.

      சாப்டூரில் இருக்கும் ஒரேயொரு மருத்துவரான மருது அன்றைய தினம் அணைக்கரைப்பட்டிக்கு இன்னொரு வேலையாய் போய்விட அவருக்கு அடுத்ததாக இருந்த சின்ன டாக்டர் கம்பவுண்ட்டர் மாரி அய்யாவுக்கு நாடி பிடித்துப் பார்த்தார். “கெழட்டு ஆட்டங் கறியா போட்றுக்கான், அதான் சேரல… மாத்தர தாரேன். நைட்டுக்கும் காலைக்கும் போடுங்கப்பு…” மூன்று மூன்றாக இரண்டு நேரத்திற்கு கொடுத்தான். பெரிதாக வெள்ளை நிறத்தில் இருந்த மாத்திரை வழக்கமாக காய்ச்சலுக்கு கொடுப்பதுதானே என கேட்க நினைத்த ஆசை மருத்துவரை எதிர்த்து கேள்வி கேட்பது  தவறென்னும் எண்ணத்தில் அதை கைவிட்டான்.  மருந்து வேலை செய்துவிடும் என்கிற நம்பிக்கையிலேயே அவருக்கு கொஞ்சம் தெம்பாக இருக்க, காலை சந்தையை கருத்தில் கொண்டு சாவடிக்குத் திரும்பி வந்து படுத்தார்கள். அய்யா படுத்த சிறிது நேரத்தில் கண்ணயர்ந்து உறங்க இவன் தனது மொபைல் டேட்டாவை ஆன் செய்து அந்த இளைஞர்கள் அனுப்பிய படத்தை தரவிறக்கம் செய்ய முயன்றான். சாப்டூரில் சில மாதங்களுக்கு முன்பாக அலைபேசி கோபுரம் வந்திருந்த போதும் இன்னும் 2 ஜி வேகத்தில் தான் அந்த இணையம் இருந்தது. பத்து நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய அந்தப் படம் சுற்றிய இடத்திலேயே இருக்க அதை தலை மாட்டில் அப்படியே வைத்துவிட்டுக் காத்திருந்தான். அவன் தலைக்கு மேல் அடர்ந்து வானத்து நட்சத்திரங்களை மறைத்திருந்த முதிர்ந்த மரத்தின் கிளைகள் காற்றில் மிக மெதுவாக அசைந்தது கூட கண்ணாடி மட்டுமே அணிந்திருந்த அந்த நடிகையை நினைவுபடுத்தியது ஆச்சர்யம். அந்த பரவசத்தை கண் மூடி ரசித்தான்.


      அடிக்கொருதரம் அலைபேசியை எடுத்துப் பார்த்துக் கொண்டான். நீண்ட நேரமாகியும் நாற்பது சதவிகிதம் கூட படம் இறங்கியிருக்கவில்லை. மின்னாற்றல் வேறு பாதியாய்க் குறைந்திருந்தது. படம் பார்ப்பதிலிருந்த ஆர்வம் சற்று குறைந்துபோய்விட்டாலும் பாதியில் பின்வாங்க மனமில்லாமல் கையை தலைக்குக் குடுத்து அய்யா படுத்திருந்த பக்கமாய்த் திரும்பிப் படுத்தான். அவர் படுத்திருந்த இடத்தில் அவரின் துண்டு மட்டுமே விரித்து கிடக்க அவரைக் காணவில்லை. “இதென்ன கழுத இந்தக் கெழவனோட தொரட்டாப் போச்சு..” எரிச்சலோடு சாவடியை விட்டு வந்தான். சாலைக்கு எதிரில் வயக்காடுகளுக்கு செல்லும் பாதையில் இருந்து குற்றுயிரும் குலை உயிருமாய் அவர் திரும்பி வந்து கொண்டிருந்தார். எதிரில் யார் வருகிறார்களென கவனிக்க முடியாதபடி தளர்ந்துபோனவரை நெருங்கியவன் “ரொம்ப மேலுக்கு முடியலையா?” என கேட்டான். ஒரு கையை அவன் தோளில் சாய்மானமாகப் பிடித்துக் கொண்டபடி, “இவென் என்ன மாத்திரையக் குடுத்தானு தெரியல.. பேசாம பேரையூர் தர்மாஸ்பத்திரிக்கு போயிருவமா?...” கேட்டவரின் குரல் தளர்ந்து போயிருந்தது. எந்த நேரத்திலும் மழை வரலாமென்பதற்கு அறிகுறியாய் இடியும் மின்னலுமாய் மேகம் திரண்டிருக்க, மலையடிவாரத்தில் ஒதுங்கிக் கிடக்கும் இந்த சின்னஞ் சிறிய ஊரிலிருந்து இப்பொழுது பயணம் போக அவனுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. நேரங் காலத்தைப் பார்த்தால் முடியுமா? “சரி நீங்க இங்க இருங்க.. நான் போயி வண்டிய எடுத்துட்டு வாரேன்.” சாவடியை நோக்கி வேகமாய் ஓடினான்.

      சாப்டூர் எல்லையைத் தாண்டுவதற்கு முன்பாகவே அவ்வப்போது மலைகளுக்குள்ளிருந்து எழுந்த இடிச்சத்தம் தூறலையும் சேர்த்துக் கொண்டுவந்தது. எத்தனையோ வருடங்களாய் வந்து போய் அவருக்கு பழக்கமான சாலைதான். எந்த வாகன வசதிகளுமில்லாத காலத்தில் மாட்டு வண்டியில் வந்து தரகு பார்த்த காலத்திலிருந்து பழக்கமான ஊர்கள். ஆனாலும் இப்படியான பின்னிரவுகளில் அவசர காரியமென்றாலும் போக அச்சமுண்டு. காரணம் தடியன் சேகர். அச்சத்தில் ஏற்கனவே போவதை விட அதிகமாக கழிந்துவிடுவோம் என்கிற தயக்கத்தில் தடியனைக் குறித்து நினைப்பதைத் தவிர்த்தார். மழைக்கு சிறிது நேரம் சாலையோரமாக இருந்த மரத்தடியில் இருவரும் ஒதுங்கி நின்றார்கள். ஆசை தனது அலைபேசியை கவனமாக ஒரு பாலித்தீன் பையில் சுற்றி வண்டிக்குள் வைத்தான். இன்னொரு பாலித்தீன் பையை எடுத்து அய்யாவிடம் தந்து தலை நனையாதபடி சுற்றிக் கொள்ளச்சொன்னான். ஒதுங்கி நின்ற சில நிமிடங்களிலேயே மீண்டும் வயிற்றுப்பிரச்சனை கிளம்ப, பெரியவர் பொறுக்கமாட்டாமல் சரிவிற்குள் இறங்கிவிட்டார். நின்று பிரயோஜனமில்லை என நினைத்தவன் நனைந்தாலும் பரவாயில்லை என்கிற முடிவோடு அவர் திரும்பி வந்ததும் அங்கிருந்து கிளம்பிவிட முடிவுசெய்து கொண்டான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருளில் தொலைந்து போன சாலையைத் தவிர்த்து அவர்களுக்கு உடன் பயணிக்கப் போகும் துணை ஒருவருமில்லை.

      அய்யா திரும்பி வந்த போது கிறக்கத்தின் காரணமாய் மேடு பள்ளம் தெரியாமல் விழுந்து காலிலும் கையிலும் இப்பொழுது சிராய்ப்புகள். “சூதானமா வரக்கூடாதா?” எழுந்து வந்த கோவத்தை அடக்கி அப்போதைக்கு ஆதரவாய்ச் சொன்னவன் காலில் இருந்த குருதியைத் துடைத்துவிட்டான். அவர் ஏறிக்கொண்டதும் வண்டியைக் கிளப்பினான். களைப்பில் அவர் அவன் முதுகில் சாய்ந்து கொண்டார். இருவருக்கும் நடுவில் இடைவெளியே இல்லாத போதும் தூரல் புகுந்து இறங்காமல் இல்லை. வண்டியின் பழைய டயர் மேடு பள்ளமான அந்த சாலையில் வலி தாளாமல் கதறியதை நிசப்தமான அந்த இருள்வெளி அருவருப்போடு ஏற்றுக்கொண்டது. பழையூர் தாண்டி கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வண்டி தானாகவே நின்றுவிட என்ன ஏதெனப் புரியாமல் சற்றுத் தள்ளியிருந்த ஆலமரத்தடி வரை உருட்டிக் கொண்டு போய் நிறுத்தினான். குடலைத் தவிர வயிற்றிலிருந்த எல்லாம் வெளியேறிப்போன களைப்பில் அய்யா நடக்கமாட்டாமல் வந்தார். ஆறடிக்கும் மீறி நிமிர்ந்த அவரது தோற்றம் தளர்ந்து வதங்கிப்போன முரங்கை மரம்போல் கூனிப்போனது. மரத்தடியிலிருந்த சுமைதாங்கிக் கல்லில் உடம்பை சாய்த்து உட்கார்ந்து கொண்டவருக்கு மரம், சாலையென எல்லாம் பார்வையிலிருந்து தப்பிப் போக, வலியென்று சொல்ல முடியாத ஒரு வலியில் சுருண்டு கிடந்தார். இனி எவ்வளவு உதைத்தாலும் பிரயோஜனமில்லை என்றான பின் எந்தத் திசையில் செல்வதென்கிற குழப்பத்தோடு அவன் சாலையின் இரண்டு பக்கமும் நடந்து பார்த்தான். பழையூருக்குச் செல்லும் பாதையில் கன்மாய்க்கரை மேட்டிலிருந்து மழைக்கு உறக்கம் காணாத நரிகள் தாபத்தை வெளிப்படுத்தும் வினோத ஒலியில் ஊளையிட்டன. தடியனின் ஆவி இன்னும் சுற்றிக் கொண்டிருக்கும் கிராமங்கள். தைரியமாகவெல்லாம் இந்த அர்த்த ராத்திரியில் எந்த ஊருக்குள்ளும் நுழைந்து யாரையும் எழுப்பிவிட முடியாது. ஏதோ நினைவு வந்தவனாய் ஓடிவந்து வண்டியில் சுற்றி வைத்த அலைபேசியை எடுத்துப் பார்த்தான். நீண்ட நேரமாக அணைத்துவைக்கப் படாத மொபைல் டேட்டா அவன் அலைபேசியின் மின்னாற்றலை மொத்தமாக விழுங்கியதில் அது சற்றைக்கு முன்னர் அணைந்து போயிருந்தது. எரிச்சலோடு திரும்ப வண்டிக்குள்ளேயே போட்டவன் அய்யாவை நோக்கி வந்தான். “ஒன்னும் சரிப்படற மாதிரி தெரியல… நான் பழையூருக்குள்ள போயி யாரையாச்சும் கூட்டியாரவா?..” பாதி மயக்கத்திலிருந்தவர் சடாரென சுதாரித்து “நல்லா கதயக் கெடுத்தடா… இந்த சாமத்துல என்னய தனியாவா விட்டுட்டுப் போவ… உசுரோட இருந்த காலத்துல தான் அந்த தடியன் அழிச்சாட்டியம் செஞ்சான்னா செத்தும் அடங்காம சுத்துறான்… லேசுப்பட்ட ஆள் இல்ல அவன்… செத்த பொறு.. ஆள் யாராச்சும் வர்றாங்களான்னு பாப்பம்..” அவருக்கு வயிற்று வலியை மீறின அச்சம். “இத ஒன்னச் சொல்லிரு… அந்தாளு செத்துப் போயி இருவது வருசம் ஆச்சு. நீதான் எதோ அவங்கூடயே சுத்துன மாதிரி தடயம் கண்டுபிடிச்சு சொல்ற…?” எரிச்சலோடு சுமைதாங்கிக் கல்லில் தாவி உட்கார்ந்தான். ”ஆள் யாரு என்னன்னு தெரிஞ்சவனுக்குத் தாண்டா அவன் எப்பேற்ப்பட்டவன்னு தெரியும். பல ஊர்கள் ல களவுப்பொருள் திரும்ப வேணும்னா எங்க கிட்ட வந்துதான் சொல்லுவாய்ங்க… தடியன் கிட்ட பேசி வாங்கிக் குடுய்யா.. அவன் கேக்கறத கொடுத்துடறம்னு…” நேற்றைக்கு நடந்த சம்பவத்தை சொல்வது போல் இயல்பாக சொன்னவரை திரும்பிப் பார்க்காமல் தாங்கள் வந்த சாலையை பார்த்தவனுக்கு அந்தப் படம் முழுதாக இறங்கியிருக்குமா என அந்த நேரத்தில் தொடர்பே இல்லாத சந்தேகம். “உன் ஃபோன எடுத்து பக்கத்துல யாருக்காச்சும் கூப்ட்டு பாரு…” அய்யா அந்த மாற்றுவழியை சொன்னபோது தயக்கத்தோடு ஆசை “அது சார்ஜ் போடாம ஆஃப் ஆகி போச்சு..” என மென்று முழுங்கினான். அவருக்கு வந்த கோவத்தில் “எத்தேசிக்கும் பிட்டு படமா பாரு… அந்த ஃபோன் வெளங்குமா?...” எரிந்து விழுந்தார். ”ஆமா நான் பாத்தேன். நீங்கதான் கண்டீரு.. போவும்..” காறி எச்சிலைத் தூரமாய்த் துப்பினான். அயர்ந்து போன உடலில் மழையின் ஈரமும் சேர்ந்ததில் அய்யா ரெண்டு மூன்று முறை இருமிக் கொண்டார். “ஒரு பீடி இருந்தாக் குடு.. கொஞ்ச நேரம் சமாளிச்சுப் பாக்கறேன். இதுமாதிரியான சமாச்சாரங்களை அவனிடம் கேட்க அவரும் அவரிடம் கேட்க அவனும் ஒருபோதும் கூச்சப்படுவதில்லை. தனது ட்ரவுசர் பையிலிருந்து நனையாத பீடிகளாக இரண்டை எடுத்து அவருக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டு அவனும் ஒன்றை பற்றவைத்துக் கொண்டான். மழையின் பிசுபிசுப்பிற்கு பீடியின் புகை இதமாய் இருந்தது.

      தூரத்தில் வாகனம் வருவதற்கான அறிகுறியாய் மஞ்சள் நிற வெளிச்சம் எதிர்ப்பட, கையிலிருந்த பீடியைத் தூக்கி எறிந்துவிட்டு சாலைக்கு ஓடிவந்தான். தனித்துக் கிடந்து சாலையைத் தொந்தரவு செய்திடாத நல்லெண்ணத்தோடு நிதானமாக வந்த வண்டி இவன் நின்ற இடத்தை வந்தடைய சில நிமிடங்கள் ஆனது. அவன் கையைக் காட்டி மறைத்ததையும் பொருட்படுத்தாமல் கடந்து போன  பழைய அம்பாசிடரை நோக்கி ”தாயலி இவனும் நிக்காம போயிட்டானே..” என புலம்பியபடியே லுங்கியால் முகத்தைத் துடைக்க, வண்டி சிறிது தூரம் தாண்டி நின்றது. உற்சாகம் வந்தவனாய் “அண்ணே ஒரு அவசரம்ணே செத்த பொறுங்க…” எனக் கத்தினான்.  அவன் குரலைக் கேட்டு வண்டி மெதுவாக பின்னால் வர, இவன் அய்யாவை எழுப்பி நிறுத்தினான். வண்டிக்குள் ஓட்டுநர் இருக்கையில் நாற்பது வயதை நெருங்கிய ஒரு மனிதனும், அவனது மனைவி என்று சொல்லத்தக்கதான தோற்றத்தில் ஒரு பெண்மனியும் இருந்தனர். “என்னப்பா இந்த நேரத்துல ஒத்தை ல நிக்கிறீக?..” வண்டி ஓட்டிவந்த ஆள் சந்தேகத்தோடு கேட்டான். அய்யாவைக் கைத்தாங்கலாக பிடித்துக் கூட்டி வந்த ஆசை “அய்யோ அது பெரிய கதண்ணே… ரெண்டு பேரும் சாப்டூர் சந்தைக்கு வந்தோம். வந்த இடத்துல இவருக்கு சாப்ட்டது ஒத்துக்காம போச்சு.. பேரையூர் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போலாம்னு வந்தா பாதி வழியில வண்டி ரிப்பேர். நல்ல காலம் நீங்க வந்தீக.. கொஞ்சம் உதவி பண்ணுங்கண்ணே…” கார்க் கதவைத் திறக்க அவரின் அனுமதிக்காக காத்திருந்தான். அந்த ஆள் “சரி சரி வாங்கப்பா…எனக்கு பக்கத்துல செம்பட்டிதான்… நான் உங்கள பேரையூர் ல விட்டுட்டுத் திரும்பி வந்துக்கறேன்.” ஆசை கதவைத் திறந்து அய்யாவை உட்கார வைத்துவிட்டு இன்னொரு பக்கமாக சென்று வண்டிக்குள் ஏறிக்கொண்டான். அய்யா அத்தனை மயக்கத்திலும் “எலேய் வண்டிய பூட்டி சாவிய மறக்காம எடுத்துக்கிட்டியா?” எனக் கேட்க “அதெல்லாம் எடுத்துக்கிட்டேன். செத்த கண்ணசந்து படுங்க…” தனது தலையிலிருந்த ஈரம் உலர்த்த தலையை ஜன்னலுக்கு வெளியே நீட்டி உதறினான். முன்னால் அமர்ந்திருந்த பெண் “தம்பி பின்னால துண்டு கெடக்கும் பாரு.. .எடுத்து தலைய தொவட்டிக்க…” அக்கறையோடு சொன்னாள். ஆசை திரும்பி இருளில் துழாவி துண்டை எடுத்துக் கொண்டான்.


      முன்னை விடவும் நிதானமாக ஊர்ந்த அம்பாசிடரில் நீண்ட மெளனம், ஓட்டுநர் இருக்கையிலிருந்தபடியே கண்ணாடி வழியாய் அந்த ஆள் பின்னால் அமர்ந்திருந்த ஆசையையும் அவன் அய்யாவையும் அடிக்கடி கவனித்தபடியே வந்தார். தங்களை அவர் கவனிப்பதன் காரணம் புரிந்து கொண்ட ஆசை “என்ன அண்ணே களவானிப்பயக மாதிரி இருக்கா…” என சிரித்தான். அவர் கொஞ்சம் இயல்பாகி “ஆமாப்பா பயமாத்தான இருக்கு. இந்தக் காலத்துல யார நம்ப முடியுது சொல்லு.” அவர் சொல்லுவதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாய் அந்தப் பெண்மனியும் “நாலு நா முன்ன கூட அத்திபட்டி கோவிலுக்கு வந்த ஒரு குடும்பத்துகிட்ட யாரோ வழி மறிச்சு நக நட்டுன்னு எல்லாத்தையும் திருடியிருக்காங்க… ஊர்க்காரவுக எல்லாம் விசாரிச்சுப் பாத்துட்டு ஆள் அடயாளம் தெரியலன்னு சொல்ல… அப்ப தடியன் வேலையாத்தான் இருக்கனும்னு சொல்லி இருக்காங்க…” ஆசை அந்தப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டு ஆச்சர்யமாய் “ஏக்கா அவரு செத்துதான் பல வருஷம் ஆச்சே…” என முன்னால் நகர்ந்து உட்கார்கிறான். அந்தப் பெண்ணும் சிரித்தபடி “ஆமாப்பா செத்தாலும் அவனுக்கு பணத்தாச போகலயாம். அதனால அப்பப்ப இந்த மாதிரி நடுச்சாமத்துல சிக்கற ஆளுக கிட்ட அவன் ஆவி வந்து பயமுறுத்தி திருடுமாம்…” என்றாள். “சுத்த பேத்தனமா இருக்கு… ஆவி வந்து களவாண்டுச்சாம்…” என அவன் சிரிக்க, அய்யா அவனை முறைத்தார். “எல்லாம் தெரிஞ்சவனாட்டம் பேசாத… தடியன் எப்பேர்ப்பட்ட ஆளுன்னு தெரியுமா?” அய்யாவுக்கு அத்தனை களைப்பிலும் தடியனைப் பத்திச் சொல்லும் போது கண்ணில் அசாத்தியமான ஒளி. வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவர் ஒருமுறை திரும்பி பெரியவரைப் பார்த்தார். “ஏப்பே உங்களுக்கு அவரத் தெரியுமோ?” எனக் கேட்க, பெரியவர் ஆமாம் என்று தலையை ஆட்டினார். ”காரியம் எம்புட்டு பெருசுன்னாலும் ஒத்த ஆளா முடிச்சிட்டு வந்துருவான். யாரையும் அதட்டி கூட பேசமாட்டான். ஆனா எதிர்ல பாத்த நிமிசத்துல நம்மளுக்கு மூச்சு நின்னு போகும். அப்படியொரு ஒடம்பு. அத்திபட்டி ல ஒரு வைத்தியர் இருந்தாரு சண்முகம்னு தெரியுமா?” ஓட்டுநர் தலையைத் திருப்பாமலேயே “நல்லாத் தெரியுமேப்பே… ஒரு வழில நம்ம சொந்தந்தான்..” என்றார். “ம்ம்ம் அவருதான் ஊர்ல மொத மொத எண்ணச் செக்கு போட்ட ஆளு.. ஒரு நா விடிகாலைல பாத்தா செக்க காணாம்… ஊர்க்காரய்ங்களுக்குன்னா ஒன்னும் பிடிபடல… எப்பிடிறா இதத் தூக்கினான்னு.? நாலு நாள் கழிச்சு நாந்தான் ஆளத் தேடி கண்டுபோயி பேசி சமாதானம் பண்ணி பொருள மீட்டேன்…” பெரியவர் சொன்னதைக் கேட்ட அதிர்ச்சியில் வண்டியின் வேகம் குறைந்தது. “ஏப்பா சும்மா சொல்லனுங்கறதுக்காக எதயாச்சும் சொல்லாத..?” என வண்டியை ஓட்டியவர் கேட்க, பெரியவர் சிரித்தபடியே “நெசந்தானப்பா… வேணும்னா ஊர்ல பழைய ஆளுக கிட்ட கேட்டுப்பாரு…” என்றார். மீண்டும் அந்த வண்டியில் சின்னதொரு மெளனம். தூறல் இப்பொழுது நின்றுவிட்டிருந்தது. பெரியவருக்கு மீண்டும் வயிற்றில் பூச்சிகள் சுற்றுவது போலிருக்க ஆசையின் கையைப் பிடித்து அழுத்தினார். திரும்பிப் பார்த்தவன் புரிந்து கொண்டு “அண்ணே அய்யாவுக்கு ஒதுங்கனும் போல… கொஞ்சம் வண்டிய நிப்பாட்ட முடியுமா?” என்றான். அவர் திரும்பிப் பார்த்துவிட்டு “ரொம்ப முடியல போலயேப்பா… ஒன்னு செய்யலாம். வண்டிய செம்பட்டிக்குள்ள விட்றேன்.. அவரு வேலய முடிக்கட்டும். நம்ம வீட்ல கைவைத்தியம் ஏதாச்சும் செஞ்சுட்டு கூட்டிப் போலாம்…” வண்டி இப்பொழுது தார்ச்சாலையிலிருந்து செம்பட்டி செல்லும் மண் பாதைக்குள் நுழைந்தது. இரவு கழிவதை உணர்த்தியபடியே பறவைகள் கூட்டம் ஒன்று வேகமாய் அவர்கள் தலைக்கு மேலாக கடந்து தெற்காகப் பறந்து சென்றது. ஓரிடத்தில் வண்டி நிற்க, முன்னிருக்கயில் இருந்த பெண்மனி மட்டும் இறங்கிச் சென்றார். வயலுக்குள் ஒதுங்கிய அய்யா வயிற்று வலியில் முனங்குவது காரை விட்டு இறங்கி நின்ற இவர்கள் இருவருக்கும் தெளிவாகக் கேட்டது. மண் சாலையில் இருந்து சற்று தள்ளி வாசலில் மஞ்சள் நிற விளக்கின் வெளிச்சம் நிரம்பிய வீட்டைத் திறந்து அந்தப் பெண்மனி சென்றார். “இதான் நம்ம வீடாண்ணே…” ஆசை அவரிடம் கேட்டான். அவர் சிரித்தபடியே “இதுவும் நம்ம வீடுதான் தம்பி… தெனம் வாரதில்ல.. இது என் எளய சம்சாரம். மூத்த சம்சாரம் அணக்கரபட்டில இருக்கு…” என்றார். புரிந்து கொண்டவனாய் தலையாட்டிக் கொண்டவன் இவ்வளவு நேரமும் அந்தப் பெண்ணை சரியாமல் கவனிக்காமல் போனதற்காக வருத்தப்பட்டான்.
      அய்யா திரும்பி வந்தபோது அரை உயிராய்த் தெரிந்தார். காருக்குள் சாய்ந்து உட்கார்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்தப் பெண் உப்பும் நாட்டுச் சக்கரையும் கலந்த நீர்க்கரைசலைக் கொண்டு வந்தாள். மஞ்சள் நிற வெளிச்சத்தினூடாக அவள் வருகையில் சற்று பருத்த உருவமாயினும் ஒரு வாளிப்பினை அவளுடலில் ஆசை கவனித்தான். மனுஷனுக்கு நல்ல ஷோக்குதான் என மனதிற்குள்ளாகவே நினைத்துக் கொண்டு அவளிடமிருந்து கண்ணாடி தம்ளரை வாங்கி அய்யாவிடம் குடுத்தான். “அய்யா இதக் குடிங்க…” அவர் வாங்கி ஒரே மூச்சில் அதைக் குடிக்குமளவிற்கு அவருடல் வறண்டு போயிருந்தது. கண்கள் கொஞ்சமாய் தெளிச்சியாகத் தெரிய ஆறுதலாக சிரித்தார். “சரி நீ வீட்ல இருத்தா… நான் இவுகள கூட்டிப் போயி ஆஸ்பத்திரில விட்டுட்டு வாரேன்..” கண்ணாடித் தம்ளரோடு அவள் வீட்டிற்குள் திரும்பிச் செல்வதைப் பொருட்படுத்தாமல் அவர் வண்டியை எடுக்க ஆசை கடைசியாக ஒருமுறை அந்தப் பெண்ணை தவிப்போடு பார்த்தபடி வண்டியில் ஏறிக்கொண்டான்.
      உப்பு சக்கரை கரைசல் தந்த கொஞ்ச தெம்பில் பெரியவருக்கு வயிறு கொஞ்ச ஆறுதலாய் இருந்தது. பின் சீட்டில் அவர் கண்மூடி படுத்திருக்க ஆசை முன் சீட்டில் உட்கார்ந்திருந்தான். ”இந்தக் காலத்துலயும் எப்பிடிண்ணே ரெண்டு சம்சாரத்த வெச்சு சமாளிக்கிறீங்க?...” வண்டிக்குள்ளிருந்த மெளனத்தை கலைக்கும் விதமாய் அவன் கேட்டதற்குப் பின்னால் சற்று முன் இறங்கிச் சென்ற பெண்ணைக் குறித்து கூடுதலாக அறிந்து கொள்ளும் ஆர்வம். ”இதில என்னய்யா இருக்கு. ஆச இருக்கவன் சமாளிப்பான். ஆச இருக்கு சமாளிக்கிறேன். உனக்கு கல்யாணம் ஆயிருச்சா?” அவர் கேள்வியிலிருந்த கேலியைப் புரிந்து கொண்டவனாய் “எங்கண்ணே எங்கய்யா கூட ஊர் ஊரா மாட்டுத் தரகுக்கு சுத்தவே சரியா இருக்கு. கல்யாணம் கட்டிவைப்பாருன்னு பாத்தா இவர் போற எடத்துல எல்லாம் எனக்கு ஒரு சின்னம்மா ரெடி பண்ணத்தான் பாக்கறாரு…” ஆற்றாமையோடு சொன்னான். வண்டியை ஓட்டியபடியே அந்த மனிதன் அடக்கமாட்டாமல் சிரித்தான். பின்னால் படுத்திருந்த பெரியவர் “ஆமா இவந்தான் கண்டான்… எந்த ஊருக்குப் போனாலும் எங்க பொம்பள கெடைக்கும்னு மொத ஆளா தேடிப்போயிருவான் தம்பி. இவன நம்பி ஒரு புள்ளய என்னண்டு கெட்டி வெக்க.. அவன் செல்ஃபோன எடுத்துப் பாரு, பூராம் பிட்டுப் படம்.. ராத்திரி பகல்னு நேரங்காலம் தெரியாம பாக்கறதுதான் பொழப்பு. சரியான வெறிபுடிச்சவனப்பா…” அய்யா கோவமாக அல்லாமல் கேலியாக சொல்ல ஆசை திரும்பி அவரை முறைத்தான். அந்த மனிதர் இன்னும் சிரிப்பதை நிப்பாட்டவில்லை. “நல்லா அப்பா புள்ள போங்க..” என பொதுவாக சிரித்தார். பேரையூருக்குப் பக்கமாக நெருங்கும் வேளையில் முதல் வெளிச்சம் மலைகளுக்கு பின்னாலிருந்து திட்டுத் திட்டாய் எழுந்திருந்தது. ஸ்டியரிங்கைப் பிடித்திருந்த ஓட்டுநரின் கையிலிருந்த கடிகாரம் நான்கு மணியாக ஐந்து நிமிடங்கள் இருப்பதைக் காட்டியது. பழைய மோஸ்தர் சிட்டிசன் குவார்ட்ஸ் கடிகாரம். ஆனாலும் அது பொலிவிழக்காமல் அப்படியே இருப்பதைப் பார்த்த ஆசை “அந்தக் கால்த்து வாட்ச்சி.. இன்னுமாண்ணே இதையெல்லாம் பதவிச வெச்சிருக்கீக…” என அவரைப் பார்த்துக் கேட்டான். வண்டி பேரையூருக்குள் நுழைந்து ஆஸ்பத்திரி இருக்கும் சாலையை நோக்கி சென்றது. “ராசியான வாட்ச்சி தம்பி… அதான் பதவிச வெச்சிருக்கேன்..” மணிக்கட்டை இறுகியிருந்த வாட்ச்சை இன்னும் கொஞ்சம் இலகுவாக்கிக் கொண்டார்.
      கேட்பாரற்று மங்கிய வெளிச்சத்தில் கைவிடப்பட்ட பரிதாபத்திற்குரிய முதியவளைப் போல் அடங்கிக் கிடந்த ஆஸ்பத்திரியின் ஆழ்ந்த அமைதியை குலைத்து நுழைந்தது இவர்களின் வண்டி. அய்யாவுக்கு இன்னும் கெரக்கம் தெளியவில்லை. ஆசை கைத்தாங்கலாக வண்டியிலிருந்து இறக்கி கூட்டிச் சென்றான். இவர்களுக்கு முன்பாகவே வண்டியை ஓட்டி வந்த ஆள் உள்ளே சென்று இரவு பணியில் தூங்கி எழுந்து உற்சாகமாக கடந்த வார குடும்பமலரை வாசித்துக் கொண்டிருந்த காம்ப்வுண்டரை கூப்பிட்டு வந்தார். கம்பவுண்ட்டர் அங்கிருந்த நோயாளிகளுக்கான பதிவேட்டில் நோயாளியின் பெயரை பதியச் சொல்ல வெளியே எட்டிப் பார்த்து “தம்பி ஐய்யா பேரென்ன?” என சத்தமில்லாமல் கேட்டார். அவன் “சீனிக்கண்ணு…” என்றதும் திரும்பி நோட்டில் பதிவு செய்துவிட்டு வந்தார். “சரி தம்பி நீ பாத்துக்க, எனக்கு வேற சோலி இருக்கு. நான் கெளம்பறேன்…” என விடைபெற்று நடக்கையில் அய்யா நன்றியோடு அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார்… “இதில என்னப்பு இருக்கு. அவசர ஆத்திரத்துக்கு உதவாம என்ன?... உடம்ப பாத்துக்கங்க. நான் கெளம்பறேன்…” வாசலைத் தாண்டிச் சென்றார்.

      ஊசி மருந்து எடுத்துக் கொண்ட அய்யா தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்க, அவரது படுக்கைக்கு கீழாகவே அன்றைய தின செய்தித்தாளை விரித்து ஆசையும் படுத்திருந்தான். வெயில் ஜன்னல் வழியாக உக்கிரமாக நோயாளிகளுக்கான அந்த வார்டு முழுக்க நிரம்பியிருந்தாலும் அவர்கள் இரண்டு பேரும் பொருட்படுத்தாமல் உறங்கிக் கொண்டிருந்தனர். “தம்பி சேகரு… சேகரு… எந்திர்ப்பா” நர்ஸ் ஒருவர் வந்து அவனை எழுப்ப பகல் நேர வெக்கை உடலெங்கும் நிரம்பிய     களைப்போடு கண்களை கசக்கியபடி நர்ஸைப் பார்த்தான். “என் பேரு சேகரு இல்லிங்க… ஆசத்தம்பி…” முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து அய்யாவைப் பார்த்தான். பாதி வாயைத் திறந்த நிலையில் கொடூரமாக குறைட்டை விட்டபடி அவர் உறங்கிக் கொண்டிருந்தார். “ஏப்பா அதான் ரிஜிஸ்தர் ல தெளிவா தடியன் சேகருன்னு பேஷண்ட் பேருக்கு பக்கத்துல போட்றுக்கியே.. இல்லைங்கற… நீ சேகரோ, என்னவோ? இன்னிக்கு மதியத்துக்கு மேல இவருக்கு இன்னொரு டிரிப்ஸ் போட்டுட்டா பொழுசாயமா வீட்டுக்குக் கூட்டிப் போயிரலாம்..” சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் நகர்ந்து போனாள். அவள் சொன்ன பெயர் தலைக்குள் அச்சத்தின் வினோத பூச்சிகளை உசுப்பிவிட பதட்டத்தில் உடல் வியர்த்தது. தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரே மூச்சில் அரை பாட்டில் தண்ணீரையும் குடித்துவிட்டு திரும்பி அய்யாவைப் பார்த்தான், பாதகமில்லை, நடந்த எதுவும் தெரியாமல் நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருந்தார். 

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.