ஆதாமின் துரோகம்.

ஆட்டம், இரைச்சல், மது, களிப்பு எல்லாம் ஓய்ந்து சில நிமிடங்கள் தான் ஆகின்றன. உடலின் மெளன நரம்புகளுக்குள் துடித்துக் கொண்டிருக்கும் காதலைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தன அந்த பப்பின் வண்ண விளக்குகள். ரெஸ்ட் ரூம் நோக்கி நடந்த அனிலின் கால்களில்  இசையின் மிச்சம் ஒலித்துக் கொண்டே இருக்க உடலெங்கும் படர்ந்த அதன் அதிர்வுகளுக்கு இணையாய் ஆடிக்கொண்டான். பாதி இரவைக் கடந்தும் தன்னைக் காத்திருக்க வைத்த தன் காதலனின் மீது எரிச்சல் வந்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது அவனைச் சந்தித்தும் முத்தமிட்டும். இந்தக் காத்திருப்பின் அவஸ்தைகள் எதையும் அவனால் உணர்ந்திருக்க முடியாது. உடலில் நெருப்பு பற்றிப் படர்வதைப்போல் தவிப்பிலிருக்கும் இவனிடம்  வரமுடியாமல் போவதை ஒரு குறுஞ்செய்தி அனுப்பிக் கூட சொல்லாமல் இருப்பது அவன் வழக்கம். அடுத்த முறை சந்திக்கையில் இயல்பாக முத்தமிட்டு ‘வேலை இருந்ததாகச் சொல்லுவான்.’ அவன் ஸ்பரிசம் பட்ட   சில நொடிகளில் வெடித்துக் கிளம்ப நினைத்த கோவம் அத்தனையும் மறைந்து போகும்.
அலைபேசியை எடுத்து அவனை அழைத்தான். இவ்வளவு நேரமும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த அவன் எண் இணைப்பில் கிடைத்தது. சிறுநீர் கழித்தபடியே பதிலுக்காகக் காத்திருந்தவனின் மனமெங்கும் அவன்  குரலைக் கேட்க வேண்டுமென்கிற பரபரப்பு. காதலை பரிசளிக்கவென்றே கடவுளால் படைக்கப்பட்ட வசீகரக் குரல். அந்தக் குரல் தனக்கானது மட்டுமே என்பதோடு தன்னைத் தவிர இன்னொருவருடன் அவன் காதல் கொண்டிருக்கலாம் என்பதையும் யோசிக்க விரும்பவில்லை. ஏன் அவன் மீது இத்தனை பித்து? அவன் எத்தனை அவமதித்த போதும் உதாசீனம் செய்த போதும் அனிலுக்கு அவன் மீதிருந்த காதல் கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை. அவன் வெளிப்படுத்துகிற சில நிமிட அன்பிற்கு முன்னால் அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றுதான் அனில் நினைக்கிறான்.
     தொடர்ந்து இரண்டு மூன்று முறைக் கூப்பிட்டும் அனிலுக்குப் பதில் கிடைத்திருக்கவில்லை. “டேய் மதன். தயவு செஞ்சி எடுத்துப் பேசுடா… பாஸ்டர்ட்” கோவத்தோடு சத்தமாய்க் கத்தவேண்டும் போலிருந்தது. பப்பிலிருந்து வெளியே வந்து தனது மாருதி ஸென்னுக்குள் புகுந்து கொண்டவனுக்கு மதுவின் வெக்கையில் உடல் வியர்த்தது. உடல் களைத்துத் தீரும் வரை ஆடியதில் காமம் கொஞ்சம் குறைந்திருந்தாலும் ஒவ்வொரு செல்லிலும் மதனுக்கான காதல் பெருகி வழியாமல் இல்லை.  ஒரேயொரு முத்தம் அதற்காக இங்கிருந்து அவன் எத்தனை மைல்கள் தள்ளி இருந்தாலும் இப்போது போகலாம். அவனுக்கே அவனுக்கென இருக்கும் பெர்ஃப்யூமின் மணம். அசாதாரனமாகத்தான் ஆண்களுக்கு பெர்ஃப்யூம் வாசணை தனித்துவமாய் அமைகிறது. செக்யூரிட்டி வந்து கார் கண்ணாடியைத் தட்டினான், “ஸார் கெளம்புங்க ஸார்… டைம் ஆச்சு…” அனில் சிரித்தபடி வாலட்டிலிருந்து நூறு ரூபாயை எடுத்து அவனுக்குக் கொடுத்தான். “ரூபாய வாங்கிக் கிட்டாலும் போகத்தான் சொல்லுவேன். கேர்ள் ஃப்ரண்ட் யாரும் வரணுமா? இவ்ளோ நேரம் வெய்ட் பன்றீங்க?” அனில் வெறுமனே இல்லையென்று தலையாட்டிவிட்டு வண்டியைக் கிளப்பினான்.
     டிசம்பர் மாதத்தின் குளிர் இறக்கி வைக்கப்பட்ட கார் கண்ணாடியின் வழியாய் உள்ளிறங்கி உடலெங்கும் புகுந்து கிளர்த்தியது. நீண்ட சாலையின் மஞ்சள் நிற விளக்குகள் அந்தக் காரின் மீது வெளிச்சம் நிரப்புவதைக் குறைத்துக் கொண்ட போது தன்னையும் மீறி மதனின்  வீட்டை நோக்கி காரை செலுத்தினான். பெங்களூரிலிருந்து சென்னை வரும் ரயிலில் முதல் முறையாக மதனை சந்தித்த இரவு அதற்கு முன்பிருந்த வாழ்வின் எல்லா சந்தோசங்களையும் பொய்யென மாற்றிப் போட்டது. விருப்பத்தை உணர்ந்து வாழமுடிவதுதான் ஆகப்பெரிய சந்தோசம். தனக்குள் பிறந்தது முதல் கனன்ற ஜ்வாலை எதன் பொருட்டென்பதை அவன் வழியாகத்தான் அனில் புரிந்து கொண்டான்.  இரண்டாம் வகுப்பு குளிர்சாதன கம்பார்ட்மெண்ட்டில் வசதியாக சாய்ந்து கொண்டு யுகியோ மிஷிமாவின் ‘confessions of a mask’ நாவலை அனில் ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தான். ”எக்ஸ்க்யூஸ்மி…” அந்தக் குரலிலிருந்த பெண்மையும் ஆண்மையும் கலந்த வசீகரம் புடித்துப் போய் புத்தகத்தைக் கீழிறக்கி தனக்கு எதிரிலிருந்தவனைப் பார்த்தான். முகத்தில் நான்கு நாட்கள் தாடியும் இடது காதுக்கு மிக அருகில் சற்றே பெரிதான மச்சமுமாய் முதல் பார்வையிலேயே அழகானவன் என ரசிக்கும்படியான தோற்றம். “எஸ்….” அனில் அவன் உட்கார இடம் கொடுத்தான். ”I’m madhan…. மிஷிமாவ ரொம்ப விரும்பிப் படிப்பேன். உங்களுக்கும் மிஷிமாவப் புடிக்குமா?” அனில் ஆமென சிரித்தான். மிஷிமாவின் spring snow மதனின் கைகளில் இருந்தது. இருவரும் மிஷிமாவின் கடைசி தினத்தைக் குறித்தும் அந்த மரணத்திலிருக்கும் ஒரு கலைஞனின் உறுதி குறித்தும் அதிகம் சத்தம் வராமல் பேசிக்கொண்டதைப் பார்த்த சக பயணிகளுக்கு காதலர்களுக்குள்ளிருக்கும் வசீகரத்துடன் அவர்கள் காட்சியளித்தனர். ”தமிழ்ல யாரெல்லாம் புடிக்கும்?” அனில் சிரித்தான். “தமிழ் பேச மட்டுந்தான் தெரியும். வாசிக்கத் தெரியாது. நான் மலையாளி…” இருவரும் பரஸ்பரம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
அலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டபோதும் அடுத்த சந்திப்பிற்கான தேவையை இருவருமே உருவாக்கிக் கொள்ளவில்லை. தற்செயலாக ஒரு பார்ட்டிக்காக சென்ற போது  ஸ்ப்ரிங்கில் வைத்துதான் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.  அன்று மதன் தனது முன்னாள் காதலியோடும் அனில் தன் அலுவலக நண்பர்களோடும் வந்திருந்தனர். அப்சல்யூட் வோட்காவுக்காக அனில் பரிசாரகனைக் கேட்டு நின்ற போது பின்னாலிருந்து இன்னொரு குரலும் அப்சல்யூட் வோட்காவைக் கேட்க, திரும்பிப் பார்த்தான். நீண்ட காலமாக அருந்தி வரும் மது அன்று அர்த்தப்பூர்வமான ஒன்றாக மாறுமென இருவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சியர்ஸ் சொல்லிக் கொண்டனர். மதன் தன்  காதலியை அறிமுகப்படுத்தி வைத்த போது அந்தப் பெண்ணின் மீது முதல் தடவையாக சிறிது பொறாமை எழுந்தது. எந்தவொரு ஆணுக்காகவும் எந்தவொரு பெண்ணின் மீதும் இதற்கு முன் பொறாமை உணர்வு கொண்டதில்லை என நினைத்த போது அவன் தனக்கு என்னவாக தெரிகிறான் என்பது மர்மமான ரகசியமானது.  விடைபெறுவதற்கு முன்பாக இருவரும் அணைத்துக் கொண்டு சாதாரணமாக முத்தமிட்டுக் கொண்டனர். அனிலின் முத்தத்தில் இருந்த மென்மையை உணர்ந்த மதன் அது இயல்பானதில்லையென்பதைப் புரிந்து கொண்டான்.  
தன் காதலியை வழியனுப்பி வைத்துவிட்டு அணிலை தன் ஃபிளாட்டிற்கு அழைத்துச் சென்றான். அனில் இன்னொரு முறை முத்தமிட்ட பொழுது தான் இருபால் ஈர்ப்புடையவன் என்கிற உண்மை மதனுக்குப் புரிந்தது. மதுவால் தூண்டப்பட்ட காமமாக அது முடிந்திட வாய்ப்பில்லை. காதலியை விடுத்து இவனோடு கூட வேண்டுமென்பதற்குப் பின்னால் மிஷிமாவை இருவரும் தங்களின் ஆதர்சமாக நேசித்ததும் ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். எவ்வளவு குடித்தும் தீர்க்க முடியாத போதையாக அப்சல்யூட் வோட்காவை விடியும் வரை அருந்தினர். மதுவின் சூடு அவர்களை மேலும் மேலும் இறுக்கிப் போட கடல் பார்த்தபடி இருக்கும் அந்த ஃபிளாட்டில் அதிகாலையில் நிர்வாணமாய் நின்றபடி அனில் சூரிய வெளிச்சத்திற்காக காத்திருந்தான். மதிக்கத் தகுந்த ஓர் ஆண்மகனிடம் தன் கன்னிமையை இழந்த பூரிப்பு அவனிடம். முதல் முறையாக இருவரும் காதல் கொண்ட அந்த இரவிலேயே மதன் இனி என்றென்றைக்குமாய் அணிலோடு இருப்பதென முடிவெடுத்தான். இந்த மூன்று வருடங்களில் அவர்களுக்குள்ளிருக்கும் காதலில் எந்தப் பிரச்சனையும் இல்லை. மதனுக்கு பெண்களை எத்தனை பிடித்ததோ அப்படியே அணிலையும் பிடித்தது.
மதன் ஆச்சர்யங்களை பரிசளிப்பதின் வழி தொடர்ந்து தன் காதலை அர்த்தப்பூர்வமானதாகவும் உயிர்ப்புள்ளதாகவும்  மாற்றக்கூடியவன். அந்த அன்பை அத்தனை எளிதில் ஒருவரால் கடந்துவிட முடியாது. நினைவின் நதியெங்கும் அவன் முத்தங்கள் கூழாங்கற்களென நிரம்பியிருக்கிறது. கஸ்தூரி பாய் நகர் பறக்கும் ரயில் நிலையத்தில் அவனுக்காக காத்திருந்த ஒரு மாலையில் சுற்றியிருந்த எவரையும் பொருட்படுத்தாது அவன் தன்னை அணைத்துக் கொண்ட நாள் மறக்கமுடியாதது. அனில் தான் கொஞ்சம் கூச்சங்கொண்டவனாய் அவனிலிருந்து விலகினான். மதனை சந்திக்க வேண்டுமெனக் கேட்டபோது தன் அலுவலகத்திற்குத்தான் வரச் சொன்னான். அனிலுக்கு தயக்கமாக இருந்தது. தன்னை அவனின் காதலனென அவன் சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் காட்டிக் கொள்ளும் திராணியில்லை. இவனிடமிருந்த தயக்கமும் கூச்சமும் முதலில் மதனுக்கு சற்று எரிச்சலூட்டக் கூடியதாய் இருந்தாலும் அவன் இயல்பென அதுகுறித்து வருத்தங்கொள்ளவில்லை. ரயிலில் பயணிக்கையில் ஜன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அனிலின் காதுகளில் “இரண்டு ஆண்கள் காதல் கொள்வது வேறு எல்லாவற்றையும் விட சுவாரஸ்யமானது இல்லையா?” மதனின் புன்னகையிலும் குரலிலும் நகைப்பின் பொருட்டு மிகுந்த விஷமம் இருந்தாலும் அனிலுக்கு தாங்க முடியாத வெட்கம் நரம்பெங்கும் கிளர்ந்து ஓடியது. வெட்கப்படும் ஆணின் அழகை எந்த மொழியின் வார்த்தைகள் கொண்டும் வர்ணித்துவிடமுடியும்?
மதனோடு சுற்றியலைந்த சில நாட்களிலேயே அவனுக்கு விருப்பமான எல்லாவற்றிற்கும் தன்னையும் இவனால் பழக்கப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஒரே நகரின் இருவேறு பகுதிகளில் வசித்தாலும் பெரும்பாலும் இரவுகளை ஒரே வீட்டில்தான் கழித்தனர். அலுவலகத்தின் பொருட்டு இருவருக்கும் தனித்தனி ஃபிளாட்டுகள் என்பதோடு அவ்வப்போது மதனின் தங்கை பெங்களூரிலிருந்து வந்து தங்கிவிட்டுச் செல்வாள் என்பதால் மதன் தனித்திருக்கவே விரும்பினான். அந்த தூரம் ஒன்றும் அவர்களுக்குப் பெரிய தொந்தரவாய் இல்லை. அழகான அத்தனை ஆண்களிலும் மதனின் சாயலைத் தேடும் கிறுக்குத்தனம் அனிலுக்கு மிகுதியடையத் துவங்கிய போது தான் மீளமுடியாத காதலில் விழுந்து கிடக்கிறோமெனப் புரிந்து கொண்டான். மதன் தன் தங்கையை அறிமுகப்படுத்தி வைத்த நாளில் கூட அவளிடம் அவனது சாயல்கள் இருந்ததாலேயே ரசித்தான். பேசத் துவங்கின சில நொடிகளிலேயே அனிலிடமிருந்த பெண்மையைப் புரிந்து கொண்டவளாய் மதன் மீது சின்னதொரு சந்தேகம் கொண்டாள். மதன் இதற்கு முன் ஒருபோதும் இத்தனை பெண் தன்மைகொண்டவர்களை தன் நண்பர்களென அவளிடம் அறிமுகப்படுத்தியதில்லை. அனிலின் பார்வைகளும்  வார்த்தைகளும் மதன் மீதான மயக்கங்களை ஆனமட்டும் பிரதிபலிப்பதாய் இருப்பதைப் புரிந்து கொண்டவள் ஊருக்குக் கிளம்பிச் செல்கையில் “என்னடா உனக்கு பொண்ணுங்க எல்லாம் போரடிச்சிட்டாங்களா, புதுசா இப்போ கே ஃபிரண்ட்… எனக்கென்னவோ இது சரியாப் படல…” மதன் அவளிடம் நிஜத்தை சொல்லத் தயங்கினான். முதல் முறையாக இதுவொரு கேள்வியாக அருவருப்பாக தன் முன்னால் விழுந்ததை எதிர்கொள்ள முடியாமல் தவித்தவன் “அப்படியெல்லாம் இல்லடி… he is just a friend.” அவள் நம்புவதாக இல்லை. “ஒரு பொண்ணு ஆம்பளைய எவ்ளோ ரசிக்க முடியுமோ அதவிட நூறுமடங்கு அதிகமா அவன் உன்னய ரசிக்கிறான். நீ காம்ப்ளிகேட் பண்ணிக்காம இப்பயே அவன் கிட்ட எடுத்துச் சொல்லி கொஞ்சம் விலகி இரு…” அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே மதன் திரும்பி அனிலைப் பார்த்தான். அவன் புலன்கள் முழுக்க இவனைச் சுற்றியே அலைந்து கொண்டிருந்தன. அதிலிருந்த காதலையும் மீறி தன்னுடலை எப்போதும் சுற்றியலையும் அந்தப் பார்வை ஒரு அச்சுறுத்தலை அவனுக்குள் உணர்த்தியது.
மதனை தன் நினைவிலிருந்து விடுவித்துக் கொள்வது அனிலுக்கு எளிதானதாக இல்லை. ஒரே சமயத்தில் அவன் மீதான நேசமும் தனக்கு துரோகமிழைக்கிறானோ என்கிற சந்தேகத்தில் வன்மமும் வளர்ந்து அடங்கினாலும் நேசம் துரோகத்தை விஞ்சியே இருக்கிறது. வீட்டில்தான் இருப்பானா? என்ன ஆயிற்று இவனுக்கு? குறைந்தபட்சம் தன்னைத் தவிர்ப்பதற்கான காரணத்தையாவது தெரிந்து கொள்ளவேண்டும். எதற்கும் ஒருமுறை அழைப்போமென அலைபேசியில் கூப்பிட்டான். ”ஹலோ….” கிறக்கத்திலிருக்கும் ஒரு பெண்ணின் குரலைக் கேட்டுக் குழம்பிப் போனவன் எண்ணை சரிபார்த்தான். மதனுடையதுதான். பேசத் தயக்கமாய் இருந்தது. “எக்ஸ்க்யூஸ் மீ, மதன் இல்ல?...”
”ம்… ஆனா இப்போ அவனால பேச முடியாது… நீங்க நாளைக்குக் கூப்டுங்க…” இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. கேட்ட குரலாக இல்லை. பேசிக் கொண்டிருக்கும் போது பிண்ணனியில் மெல்லிய ஒலியில் ப்ளூஸ் இசையின் சத்தம் ஒலிப்பதையும் அணிலால் கேட்க முடிந்தது. மதனுக்கு விருப்பமான இசை வடிவம். காதல் கொள்ளும் போதெல்லாம் அந்த இசையை ஒலிக்க விட விரும்புவான். மதனோடான காதலை அந்த இசையும் நினைவு படுத்தியது. ‘Bobby bland ன் ‘I wouldn’t treat a dog ( the way you treated me ) மதனுக்கும் இவனுக்கும் பிடித்த அதே பாடல் தான் ஒலித்துக் கொண்டிருந்தது. மதன் தன் காதலை இன்னொரு பெண்ணுடன் பகிர்ந்து கொள்வதில் இவனுக்கு வருத்தங்களெதுவும் இல்லை. ஆனால் அதை ஏன் தன்னிடம் மறைக்க வேண்டும்? தன்னைக் காதலனாக அல்லாமல் என்னவாகப் பார்க்கிறான்? அவமானத்தில் அனிலின் உடலெங்கும் எரிந்தது. அவனைப் பார்க்க வேண்டுமென்கிற தவிப்பு சகித்துக் கொள்ளவியலா வெறுமையாய்ப் பெருக வண்டியை அதே இடத்தில் நிறுத்திவிட்டான். பரபரப்புகள் அடங்கி மொத்த நகரமும் நீண்ட மெளனத்திற்குள் கிடக்க இவன் மனம் பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருந்தது.
     தன் நிர்வாணத்தின் மீது புழுக்கள் நெளியும் வேதனையையும் மீறி மதனைப் பார்த்துவிட வேண்டுமென்பதிலிருக்கும் தவிப்பு குறைந்தபாடில்லை. குறைந்த பட்சம் தூரத்திலிருந்தாவது பார்த்தால் போதும். வண்டியை மதனின் ஃப்ளாட்டிற்கு எதிரில் நிறுத்திவிட்டு அமைதியாகக் காத்திருந்தான். அவன் ஃப்ளாட்டில் விளக்கெரிவதைப் பார்க்க முடிந்தது. இவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவனோடு பேசும் வரை விடுவதில்லையென்கிற வெறியோடு தொடர்ந்து அழைத்தான். சிலமுறை அழைப்புகளுக்குப்பின் மதனின் அலைபேசி அணைத்து வைக்கப்பட இவனும் விடாமல் அவனது தரைவழி இணைப்பிற்கு அழைத்தான். “ஓத்தா என்னடா வேணும் உனக்கு? வேற ஆம்பள கெடைக்கலையா? பாஸ்டர்ட்.” மதனின் ஆவேசமான குரலைக் கேட்டதும் அதிலிருந்த வெறுப்பை இவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ”என்னடா இப்டி பேசற? உன்னால வரமுடியலைன்னா எங்கிட்ட ஒரு வார்த்த சொல்லி இருக்கலாமே. உனக்காக எவ்ளோ நேரம் ஸ்ப்ரிங்ல வெய்ட் பண்ணினேன் தெரியுமா?” அனிலின் குரலிருந்த தாபம் மதனை இன்னும் கோவப்படுத்தி இருக்க வேண்டும். “வரலைன்னு அவாய்ட் பண்ணினா நீயா புரிஞ்சுக்கனும் அனில். நீ பக்கத்துல வரும் போது ஒரு ஆண் விபச்சாரியாத்தான் எனக்குத் தெரியற. நெனச்சாலே அருவருப்பா இருக்கு.” அனிலுக்கு சுருக்கென்றது.
“அருவருப்பா இருக்கா?”
”ஆமா… யு ஸ்மெல்ஸ் லைக் எ டேர்ட்டி பிக்…இனிமே என்னய டிஸ்டர்ப் பண்ணாத…”  
இணைப்பு அவசரமாகத் துண்டிக்கப்பட, அனிலுக்கு இப்பொழுது தாபத்தை மீறி கோபமே மிஞ்சி நின்றது. இதற்குமுன் ஒருபோதும் அவன் இத்தனை அவமானப்படுத்தப்பட்டதில்லை. விருப்பத்திற்குரியவர்கள் அவமானப்படுத்தும் போதுதான் மனிதர்களுக்கு அசாத்தியமான வன்மம் பிறக்கிறது. அனிலின் உடலில் அக்னி கொதிக்க மீண்டும் அவனை அழைத்தான்.
“த்தா… என்னாடா வேணும்?....”
“நான் கீழே தான் இருக்கேன்… ஒரு ரெண்டே ரெண்டு நிமிசம் வந்துட்டுப் போ… ப்ளீஸ்…. அட்லீஸ்ட் இது ஃபேர்வெல்லா இருக்கட்டும்….”
இணைப்பு துண்டிக்கப்பட அனில் மொபைலை சீட்டில் தூக்கிப் போட்டுவிட்டு ஸ்டியரிங்கில் சாய்ந்து கொண்டான்.  அங்கிருக்கும் நொடிகள் நரகமென அவனுக்குள் கசந்தது. இந்த உறவு இத்தனை சீக்கிரத்திலும் முடியுமென்றோ அவமானங்களை பரிசளித்து வழியனுப்புமென்றோ ஒருநாளும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் காரின் டோர் தட்டப்படும் சத்தம் கேட்டு வேகமாய் தலையை உயர்த்தினான். மதன். கதவைத் திறந்து இறங்கினான். சொத்தென அறை. அனிலுக்கு உடலெங்கும்  வெக்கை கிளம்பியது, இத்தனை ஆத்திரமா? குடித்திருந்த மதுவின் அடர்த்தி மறைந்து தொண்டை வறண்டது. “உனக்கு வேற ஆம்பள கெடைக்கலையா?. ஏன் என் உயிர வாங்கற?” அணிலால் பதில் சொல்ல முடியவில்லை. அவமானங்களை முத்தங்களால் கடந்து போக நினைத்தவன் அவனை அணைத்துக் கொண்டு முத்தமிட முயன்றான். மதனுக்கு வெறுப்பு அதிகமாக அவனை விலக்கி மீண்டும் மீண்டும் அறைந்தான். அனில் காரில் சாய்ந்து கீழே விழுந்தான். அழுகை பீறிட்டுக் கிளம்பியது. சத்தமிட்டு அழ அசிங்கமாய் இருந்ததால் வெறுமனே சிணுங்கல் மட்டுமே அவனிடமிருந்து வெளிப்பட்டது. மதனுக்கு அங்கிருந்து போகவும் முடியாமல் அவனோடு பேசவும் முடியாத அவஸ்தை. தன் அறையில் தனக்காக காத்திருப்பவள் இவனோடு தன்னைப் பார்த்தால் என்னாகுமென்கிற அச்சத்தோடு  அணிலை இழுத்து காருக்குள் போட்டுவிட்டு இவனே காரை கிளப்பினான். அந்த வீதியின் முடுக்கில் வண்டியை நிறுத்தியபின்னும் கோவம் குறைந்திருக்கவில்லை.
“இதக் கடைசியா வெச்சுக்க… ப்ளீஸ் இனிமே என்னய டிஸ்டர்ப் பண்ணாத… எனக்கு உன்னய மட்டுமில்ல எந்த ஆம்பளையையும் இப்ப புடிக்கல…. இத்தோட போயிடு….” அனில் நிமிர்ந்து அவனைப் பார்த்திருக்கவில்லை. வெறுமனே அழுது கொண்டிருந்தான். மதன் அவன் தோள்களில் கைவைத்து கூப்பிட்டான். குறைந்தபட்சம் போகிறேனென்று சொல்லிவிட்டுப் போக நினைத்தான். அனில் எழவில்லை. பலவந்தமாக பிடித்து இழுத்தபோது அனில் ஆவேசமாக மதனை முத்தமிட்டான். சில நிமிடங்களுக்கு முன்பு வரையிலும் ஒரு பெண்ணுடன் பிணைந்து கிடந்த அந்த உடலிலிருந்த நறுமணம், காதல் அவ்வளவையும் உறிஞ்சும் ஆவேசத்தோடு முத்தமிட்டான். மதனால் அவனைத் தவிர்க்க முடியவில்லை. அவனோடு இணங்கிப் போனான்.
கார் கண்ணாடி உடைந்து ஒரு கல் உள்ளே வந்து விழ இருவரும் பதட்டத்தோடு பிரிந்தனர். மதன் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. வேகமாக வண்டியிலிருந்து இறங்கி ஓடினான். அனிலுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அந்தக் காரிலிருந்து சற்றுத் தள்ளி சில இரு சக்கர வாகனங்கள் நின்றிருக்க இளைஞர்கள் என்று சொல்ல முடியாத முரட்டுத் தோற்றமுடைய சிலர் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தனர். கார் நின்றுகொண்டிருக்கும் வீதியிலிருந்த சுவர்களெங்கும் அடுத்த நாள் ‘பூரண மதுவிலக்கு வருடமாக அறிவிக்கக் கோரி’ அவர்கள் ஒட்டியிருந்த போஸ்டர்கள். ஒட்டுவதற்கு இன்னும் ஏராளமான போஸ்டர்கள் அவர்களின் வண்டிகளில் இருந்தது. அவர்கள் யாரென்பதைப் புரிந்து கொண்ட அனிலுக்கு பதட்டத்தில் உடல் நடுங்கியது. மதன் அந்த தெருவின் எல்லைக்கே ஓடிவிட்டான். வருகிறவர்களைப் பார்க்கும் போது திருடர்கள் மாதிரி தெரியவில்லை. எல்லோருமே படித்தவர்களாய் தெரிந்தனர். முதலில் வந்தவன் காரைத் திறந்து அவனை வெளியில் இழுத்துப் போட்டான். ”நட்ட நடு ரோட்ல…. என்னடா செய்றீங்க ரெண்டு பேரும்…?” ஒருவன் ஓங்கி அனிலின் வயிற்றில் உதைத்தான். ”ஸார் ஸார்… ப்ளீஸ் ஸார் அடிக்காதிங்க…” கெஞ்சலான அவன் குரலை ஒருவரும் பொருட்படுத்தி இருக்கவில்லை. இரண்டு பேர் அவன் உடைகளை முழுவதுமாக அவிழ்த்தனர். ”அண்ணே ஆம்பளைக்கு இருக்க வேண்டியது எல்லாம் இருக்கு… ஆனா…” என சிரித்தான். அனில் சிரமப்பட்டு தனது குறியை மறைத்துக் கொண்டிருந்தான். சுற்றி இப்பொழுது நான்கு பேர் நின்றிருந்தனர். “எவ்ளோ காசு கொடுத்தான் அவன்? வெக்கமா இல்ல உனக்கு?” எல்லோரும் மாறி மாறி அவனை உதைத்தனர். “ஸார் தப்பா பேசாதிங்க ஸார்…. நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் ஸார்…” அவன் சொன்னது அங்கிருந்தவர்களுக்கு முதலில் புரியவில்லை. புரிந்தவுடன் அவன் மீதான பரிகாசம் அதிகமாக சத்தமாக சிரித்தனர். சிரிப்பு அடங்குவதற்கு முன்பாக எல்லோருக்கும் கோவமே மிஞ்சியது. “லவ்வர்ஸ்.. த்தூ…. ஆம்பளையும் ஆம்பளையும் லவ்வு…. அதும் ரோட்ல…” முன்பிருந்த கோவம் உக்ரமாக கொப்பளிக்க அவனை வதைத்து எடுத்தனர். வலி தாங்க முடியாமல் அனில் அலறினான். அடிபடுறவனின் வலியை ரசிக்கப் பழகிவிட்டவர்களுக்கு அந்த வன்முறையை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பதில் எப்போதும் அலாதியான சுவாரஸ்யம் இருக்கிறது. அந்தக் கொண்டாட்டத்தை முடிந்த மட்டும் ரசித்தனர்.  கடல் காற்று முன்னிரவை விடவும் பேரோலமாய் எதிரொலித்தது. அனிலுக்கு நினைவு தப்பிப் போக அடி உதைகளின் வலி உணர முடியாமல் மயங்கினான். நிர்வாணத்தோடே அவனைத் தூக்கி மீண்டும் காருக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து அவர்கள் ஓடிவிட்டனர்.
     கண் விழித்த போது விடிவதற்கு இன்னும் சில நிமிடங்களே மிச்சமிருப்பது போல் வானம் செவ்வானமாகி இருந்தது. உடலின் வேதனையை விடவும் தன் நிர்வாணமும் அந்த நிர்வாணத்தின் மீது யாரோ சிலர் நிகழ்த்திய வன்முறையும் அவனைக் கூசச் செய்தது. இத்தனை சிக்கலில் தனக்கு என்ன நேருமென்கிற எந்தக் கவலையுமில்லாமல் ஓடியவனையா இத்தனை நாட்களும் நேசித்தோம். அணிலால் அழ முடியவில்லை. உடலை மறைத்துக்கொள்ள ஒரு துண்டு துணியும் இல்லை. பின் சீட்டில் ஏதாவது துணி இருக்குமா என தேடியபோது ஷாட்ஸ் ஒன்று அகப்பட்டது. எடுத்து அணிந்து கொண்டவனின் தலைக்கு மேலாக அந்த நாளுக்கான துவக்கம் மெதுவாக எழுந்து கொண்டிருந்தது. அவமானங்களைத் துப்பிய அந்த இரவை எப்படி மறப்பது? இதற்குப் பதிலாக நஞ்சூற்றி அவன் கொன்றிருக்கலாம், ஏன் இத்தனைக் கொடூரமாக நடந்து கொண்டான்? மொபைலை எடுத்துப் பார்த்தபோது அவனிடமிருந்து “sorry” என ஒரே ஒரு குறுஞ்செய்தி மட்டும் வந்திருந்தது. மொபைலைத் தூக்கி வெளியே எறிந்தவன் அந்த நகரத்தின் மனிதர்கள் ஒருவரின் கண்ணுக்கும் படாமல் ஓடிவிட வேண்டுமென நினைத்துக் கொண்டான்.

     உடல் முழுக்க பட்டிருந்த காயங்கள் அவனை நிமிர்ந்து உட்காரக் கூட முடியாமல் செய்திருக்க மருத்துவமனையில் மருந்து வாசணைகளின் துணையுடன் ஆறுதலாய்த் தூங்கத் தவித்தான். கண்களை மூடிக்கொள்கிற பொழுதெல்லாம் முறுக்கேறிய உடல்கள் உதைத்ததின் நினைவு வந்து அச்சுறுத்தியது. கண்களில் மிரட்சி அகன்றிருக்கவில்லை. அவனை சந்திக்க வந்த எல்லோரையும் சந்தேகத்துடன் பார்க்கும் படி கண்கள் படபடப்புடன் அடித்துக்கொண்டன. மருத்துவர்கள் தொடர்ந்து வலிநிவாரணிகளின் மூலமாகவே நாளுக்கு சில மணிநேரங்களேனும் அவனை உறங்க வைத்துக் கொண்டிருந்தனர். மருந்துகளும் உறக்கமும் முகத்தை மட்டும் கொஞ்சமாய் ஊத வைத்திருந்தது. வெறுமை நீங்கி பழைய மனிதனாய் வீடு திரும்ப தயாரான தினத்தில் அவனை அழைத்துச் செல்ல மதன் வந்திருந்தான். இப்படியான ஒன்று நடந்ததில் தன் தவறென எதுவும் இல்லை என்பதைப் போல் வெகு சாதாரணமாக “ஸாரிடா கொஞ்சம் வேலை அதான் உடனே வந்து பாக்க முடியல… வா போகலாம்…” இவனது லக்கேஜூகளை வாங்க கை நீட்டினான். அனில் அவனைப் பொருட்படுத்தாமல் வாசலை நோக்கி நடந்தான். எதிர்ப்பட்ட ஒரு நர்ஸிடம் தன்னைக் கவனித்துக் கொண்டதற்காக நன்றி சொல்லிவிட்டு வேகமாக நடந்தான். மதன் அவனைத் தொடர்ந்து பின்னாலேயே ஓடிச் சென்று நிறுத்தினான். “திமிரா…? அன்னைக்கே ஸாரி சொன்னன்ல…. நானா உன்ன வந்து பாருடானு சொன்னேன்… நீயா வந்த பிரச்சனை ஆகிடுச்சு…” மதனுக்கு அவனிடம் மன்னிப்புக் கேட்கும் மனநிலை போய் இப்பொழுது அவன் தன்னால் மன்னிக்கப்பட வேண்டியவன் என்கிற மனநிலை வந்துவிட்டிருந்தது. அனில் சின்னதாய் சிரித்தான். பதிலுக்கு மதனும் அதைவிட சின்னதாய் சிரிக்க, அனில் அவன் முகத்தில் காறித் துப்பினான். முகத்தில் வழிந்த எச்சிலை அதிர்ச்சியோடு துடைத்துக் கொண்ட மதனுக்கு இவனுக்கு எங்கிருந்து இத்தனை தைர்யம் வந்ததென்கிற ஆத்திரம். அடிக்க கைகள் பரபரத்தன. ஆனால் அனிலின் கண்களிலிருக்கும் ரெளத்ரத்தை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. “நீ எத்தனையோ நாள் என்னய முட்டாளா ஆக்கி இருக்க, அதெல்லாம் வலிக்கல… ஆனா கடைசியா நீ அழிச்சது என்னோட அடையாளத்த… என்ன செஞ்சாலும் நான் அவமானப்பட்ட அந்த சில மணி நேரங்கள உன்னால சரி பண்ணிட முடியாது…. இப்போ கூட உன்ன கழுத்த நெறிச்சு என்னால கொன்னுட முடியும். ஆனா அத செய்ய மாட்டேன்… நீ அதுக்குத் தகுதி இல்லாதவனா ஆயிட்ட.. அருவருப்பான புழு நீ… இனி என் முன்னால வராத…” அனிலின் வாகனம் வந்துவிட அவன் இவனைத் திரும்பியே பார்க்காமல் கடந்து போனான்.  

Comments

  1. When Australian war journalist, bryce wilson photographer first saw the devastation wrought by the war in Ukraine’s east, it was how most saw it – through the keyhole of a computer screen. Australian interest in the Russian-Ukrainian conflict reached its greatest following after the downing of Flight MH17 in 2014, which resulted in the deaths of 27 Australians.

    As Bryce sat at his desk being paid for work he detested, he read about and saw the suffering and hardship endured by hundreds of thousands of people in Ukraine. And then it stopped. Australian coverage dried up, so Bryce attempted to fill the space left behind by other media.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.